உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160 / அயோத்திதாசர் சிந்தனைகள்


விளக்கிவருவோர் மீது இந்தியர்களில் சிலருக்கு பொறாமெ யுண்டாகி அவர்களைக் கொல்லுதற்கு எத்தனிக்கின்றார்கள்.

இத்தியாதிச் செயல்களை நாளுக்குநாள் கண்ணுற்றுவரும் லார்ட் மார்லியவர்கள் தான் பேசும் வார்த்தைகளையும், செயல்களையும் சீர்தூக்கிச்செய்ய வேண்டுகிறோம்.

இந்தியர்களுக்காகப் பரிந்துபேசுவதால் மார்லி நல்லவரென்றும், இந்தியர்களுக்குள்ள சாதி வேற்றுமெகளையும், சமய போராட்டங்களையும் எடுத்துப்பேசுவதால் ஏனைய ஆலோசனை சங்கத்தவர்களை கெட்டவர்களென்றும் எண்ணுதற்கேதுவுண்டாகின்றது. ஆதலின் எண்ணித்துணிவது கருமமாகும்.

தற்காலம் சர்.உல்லியம் கர்ஜன் உவில்லி என்பவரைக் கொலைசெய்த படுபாவியின் (பாக்கட்டில்) இருந்தக் கடிதங்களில் இந்தியாவின் சுவாதீனத்தையடைய அதிகாரிகளைக் கொலைச்செய்வது நியாயந்தானென வரைந்திருந்ததாம். இத்தகையக் கொடூர எண்ணமுள்ளோர் மத்தியில் எரியுங்கொள்ளியை ஏறத்தள்ளுவது போலும், அவியும் விளக்கைத் தூண்டிவிடுதல் போலும் நமது கனந்தங்கிய லார்ட் மார்லியவர்கள் இந்தியர்களுக்கு அந்தஸ்தான உத்தியோகங்களை அளிக்கவேண்டுமென்று கூறவும், அவற்றிற்கு மாறாக சில விவேகிகளெழுந்து தடுக்கவும், சுயராட்சியம் விரும்பும் இந்தியர்களிற் சிலர் அவர்களைக் கெடுக்கவும், கொல்லவும் முயலுகிறார்கள். ஈதன்றி இந்தியப் பத்திராதிபரில் ஒருவராகும் கனந்தங்கிய சுரேந்திரநாத் பானர்ஜியவர்களுக்கு இந்திய மாணாக்கர்கள் விருந்தளித்தவன்று, மிஸ்டர் கேயர் ஆர்டி முதலிய துரைமக்களும் வந்திருந்தார்களாம். அப்போது இந்தியாவில் அரசிறை வருமானக் கண்காணிப்பு இந்தியா உத்தியோகஸ்தர்களிடம் இருக்கவேண்டுமென்று பேசியதாக சிலப்பத்திரிகைகள் கூறுகின்றது.

இத்தியாதி சங்கதிகளையும் லார்ட் மார்லியவர்கள் கவனியாது தனதிஷ்டம்போல் நடத்துவராயின் சொற்ப உத்தியோகஸ்தர் காலத்திலேயே அரசிறை வரவுசிலவு கணக்குகள் தங்களிடமிருக்கவேண்டுமென்று ஆலோசிப்பவர்கள் மற்றும் பெருத்த உத்தியோகங்களைக் கொடுத்து விட்டால் ஆங்கிலேயர்களின் (பூட்சு) களில் பதிந்துள்ள இந்திய தூசுகளையுந் தட்டிவிட்டு ஐரோப்பாவிற்குப் போகும்படிச் செய்துவிடுவார்கள்.

இத்தகையோர் குணாகுணங்களை அறிந்தவர்களும், இந்தியாவிலுள்ளவர்களிடம் நெடுங்காலம் பழகியவர்களுமாகிய துரைமக்கள், சாதிபேதம் நிறைந்துள்ள இந்தியர்களுக்கு பெருத்த உத்தியோகங்களைக் கொடுத்துவிடுவதானால் தங்கள் சுயசாதிகளை சுகப்படுத்திக் கொண்டு மற்ற சாதியோர்களை நாசஞ்செய்துவிடுவார்களென வற்புறுத்தி பேசிவருகின்றார்கள்.

இந்தியாவில் வந்து உத்தியோகம் நடத்தாதவரும், இந்தியர்களின் பெருங்கூட்டத்திற் பழகாதவரும், உள்ள சாதிபேதக் கட்சிகளை உணராதவரும், சமயபேத சண்டைகளைக் காணாதவருமாகிய லார்ட் மார்லி பிரபு அவர்கள் இந்தியாவின் விஷயமாக செய்துவரும் மந்திரங்கள் யாவும் அவரது சுதேச சிறப்பையே கெடுப்பதற்கு ஆதாரமாக விளங்குகின்றது.

ஆதலின் நமது கனம் லார்ட் மார்லி பிரபு இந்தியாவுக்கு ஓர் பிரயாணம் வந்து சாதிபேதத்தாலுள்ள ஊழல்களைக் கண்ணாறக்கண்டு தனது கருத்துக்களை நிறைவேற்றும்படிக் கோருகிறோம்.

- 3:5; சூலை 14, 1909 -



63. சுதேசத்தை ஆளுஞ்செய்கை சுயச் செயலால் விளங்கவேண்டும்

அதாவது ஓர் தேசத்தை ஆளவேண்டுமென்போர் தனியரசா, குடியரசா என்பதை