176 / அயோத்திதாசர் சிந்தனைகள்
நான்காவது இந்தியர்களை ஐரோப்பியர்கள் இழிவாக நடத்துவதால் இந்தியா அமைதியில்லா நிலையிலிருக்கின்றதென்று கூறுகின்றார். அதுவும் பிசகேயாம்.
ஐரோப்பியர்கள் இந்தியர்களை இழிவாக நடத்துவதானால் ஆலோசினை சங்கங்களில் இந்தியர்களை தங்களுடன் உட்கார வைத்து கலஞ்செய்வார்களா, ஜட்ஜி உத்தியோகங்களை அளித்துக் கனஞ்செய்வார்களா, கலைக்ட்டர் உத்தியோகங்களை அளித்துக் கனஞ்செய்வார்களா.
இந்தியர்களுக்கு ஆனரேபில் பட்டமளித்துவருவது இகழ்ச்சியா, புகழ்ச்சியா. இஸ்டார் ஆப் இன்டியா பட்டமளித்துவருவது இகழ்ச்சியா, புகழ்ச்சியா. திவான் பாதூர் பட்டமளித்துவருவது இகழ்ச்சியா, புகழ்ச்சியா. இராயபாதுர் பட்டமளித்து வருவது இகழ்ச்சியா, புகழ்ச்சியா, இத்தியாதி புகழ்ச்சிகள் யாவும் இந்தியருக்களித்து வருவதை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் கண்டுவரும் நமது பானர்ஜியாரவர்கள் கவர்ன்மெண்டார் இந்தியர்களை இழிவுபடுத்தி வருகின்றார்களென்பது சாட்சியமற்ற சொற்களேயாம். ஆதலின் நமது பானர்ஜியார் அமைதியில்லாததற்குக் கூறியுள்ள நான்காவது காரணமும் ஆதாரமற்றதேயாம்.
ஐந்தாவது, ஆங்கிலோ இந்திய பத்திரிகைகளில் சில இந்தியரது நியாயமானவிருப்பங்களையும், மனோரதங்களையும் நிந்தித்து அவர்களுக்கு மனவருத்தம் உண்டாகும்படி எழுத, அப்பத்திரிகைகள் எழுதுவதை கவர்ன்மெண்டார் மதித்து ராஜாங்கம் நடத்துவதே அமைதியில்லாததற்குக் காரணமென்று கூறுகின்றார். இஃது முற்றும் பிசகேயாம்.
எவ்வகையாலென்பரேல், அமைதியுறாச் செயல்களாகும் சுதேசியக் கூச்சல்களும், புறதேச சரக்குகளைத் தடுக்கும் (பாய்காட்) கூச்சல்களும், வெடிகுண்டுக் கூச்சல்களும் உண்டாயப்பின்பு ஆங்கிலோ இந்தியப் பத்திரிகைகள் அவ்வகையாகப் பேசவர ஆரம்பித்ததா, இத்தகைய கூச்சல்கள் எழுவதற்கு முன்பே பத்திரிக்கைகளில் வரைந்துள்ளதாவென்பதை விசாரித்திருப்பாரேல் அமைதியுறாதிருப்பதற்குகாரணம் ஆங்கிலோ பத்திரிகைகள் என்று கூற மாட்டார். இந்தியர்களுக்குள் அமைதியுறாச் செயல்கள் தோன்றிய பின்னரே ஆங்கிலோ இந்தியப்பத்திரிகைகள் இந்தியர்களைக் கண்டித்துப் பேசியுள்ளவை அநுபவக்காட்சியாதலின் நமது பானர்ஜியார் இந்தியர்கள் அமைதியறாசெயலுக்குக் கூறியுள்ள ஐந்தாவது காரணமும் ஆதாரமற்றதேயாம்.
ஆறாவது வங்காளப் பிரிவினையே அமைதியுறாச் செயலுக்கு காரணம் என்கிறார். அதுவும் பிசகேயாம்.
காரணம் வங்காளப்பிரிவினையால் தூத்துக்குடியிலுள்ள இந்தியர்களுக்கு நேரிட்ட குறை என்னை, சென்னையிலுள்ள இந்தியர்களுக்கு நேரிட்டுள்ள குறை என்னை, மற்றுமுள்ள தேசத்தோருக்கு உண்டாய குறை சென்னை, அமைதியுறாசெயல்நேரிட்டதென்று நமது பானர்ஜியார் கூறியுள்ள ஆறாவது காரணமும் ஆதாரமற்றுள்ளபடியால் அவைகளை ஏற்பதில் பயனில்லையென்பது துணிபு.
- 3:10; ஆகஸ்டு 18, 1909 -
கனந்தங்கிய சுரேந்திரநாத் அவர்கள் கூறியுள்ள இந்தியாவின் அமைதியற்ற காரணங்களும், அதன் மறுமறுப்புங் காரணமுங் கூறுவாம்.
1-வது இந்தியக் குடிகளை கவர்ன்மென்டார் அடியோடு அவமதித்ததே அமைதியற்ற நிலைக்குக் காரணமென்கின்றார்.
இந்தியாவில் வாசஞ்செய்யும் அறுபது லட்சத்திற்கு மேற்பட்ட மநுக்களை மாடு, ஆடு, குதிரை, கழுதை, நாய் முதலிய மிருகஜெந்துக்களினுந் தாழ்ச்சியாக அவமதித்து வருவதுடன் மிக்க இழிவுகூறி நாணமடையச் செய்தும் வருகின்றார்களே இதை நமது பானர்ஜியார் அறிவார்போலும்,
2-வது. சில சாதியோரை கவர்ன்மென்டார் பட்சபாதமாக நடத்துவதே அமைதியற்ற நிலைக்குக் காரணமென்கின்றார்.