உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180 / அயோத்திதாசர் சிந்தனைகள்


யதார்த்தத்தில் சகலசாதியோரும் பெறுமையடையவேண்டும், சுகம்பெறவேண்டும் என்ற நல்லெண்ணம் இருக்குமாயின் கருணைதங்கிய கவர்ன்மெண்டார் சகலசாதியோர்களுக்குத் தனித்தனி சுதந்திரங் கொடுத்து (தெளிவில்லை) ஓரிடத்தில் உட்கார வைக்க மாட்டார்கள்.

பெரியசாதி, சின்னசாதிகளை வைத்துக்கொண்டு தங்கள் சுயப்பிரசோசனங் கருதுபவர்களே இதற்குத் தடைகளை யுண்டுசெய்யும் வார்த்தைகளைப் பேசிவருகின்றார்கள். (சில வரிகள் தெளிவில்லை)

- 3:11; ஆகஸ்டு 25, 1909 -


75. சென்னை ராஜதானியைச்சார்ந்த சானிட்டேரி கமிஷனர் அவர்களுக்கு விண்ணப்பம்

சென்னை ராஜதானியெங்கும் சுகாதாரங்களை விளக்கி சகலரையும் சுகதேகிகளாக வைக்கவேண்டுமென்னும் அன்பின் மிகுதியால் ஒவ்வோர் டிஸ்டிரிக்ட்டுகளுக்கும் ஹெல்த் ஆபீசர்களை நியமித்துள்ளதுடன் சானிட்டேரி இனிஸ்பெக்ட்டர்களையும் நியமித்து வேண்டிய மருந்துகளையுங் கொடுத்து ஆதரித்துவருவது சகலருக்குந் தெரிந்தவிஷயமேயாம்.

ஈதன்றி ஆடுகளடிக்கும் இடங்களிலும், மாடுகளை கடிக்கும் இடங்களிலும் இனிஸ்பெக்ட்டர்களை நியமித்து நோயில்லா ஜெந்துக்களாக அடித்து மநுக்களுக்கு உபயோகப்படுத்தி சுகதேகிகளாக வாழும்படி செய்விக்கின்றார்கள்.

இத்தகைய கருணை கொண்டு நடாத்திவரும் சுகாதாரங்களில் விஷக்கடியாலும், விஷரோகங்களாலும் தானே மடிந்துள்ள ஆட்டின் மாமிஷங்களையும், மாட்டின் மாமிஷங்களையும் ஏழைமநுக்கள் புசித்து விஷவாயுவாலும், விஷநீர்களாலும் பீடிக்கப்பட்டு அவர்களுக்குள்ள சுத்ததேகங்களுங்கெட்டு கஷ்டப்படும் உழைப்பையும் விட்டு நாளுக்குநாள் க்ஷீணமடைந்து சீக்கிரத்தில் மரணத்துக்குள்ளாகின்றார்கள்.

விஷஜெந்துவாலும், விஷரோகங்களாலும், மடிந்துவரும் ஆட்டு மாமிஷம், மாட்டின் மாமிஷங்களால் மக்களுக்குண்டாகும் தோஷங்கள் முநிசபிசில் எல்லைக்குள் விசேஷமில்லாவிடினும் நாட்டு கிராமங்களில் அதிகமாக நேரிட்டுவருகின்றது.

ஏழைக்குடிகளுக்கு நேரிட்டுவரும் விஷரோகங்களை அகற்றி அவர்களுக்கு சுகாதாரங்களை உண்டு செய்வதே விசேஷ தன்மமாகும்.

அவ்வேழைக்குடிகளோ பூமியை உழுது பண்படுத்தி சீவராசிகளைப் போஷிக்கும் வேளாண்மெயுற்றவர்கள்.

சகலராலும் சிறப்புப்பெற்ற வேளாண்மெயுற்றவர்கள் விஷமாமிஷங்களை புசிப்பதால் நாளுக்குநாள் தாளாண்மெயற்றுமடிந்து போகின்றார்கள்.

சகல குடிகளுக்கும் சுகாதாரமளித்துக் காத்து வரும் சானிட்டேரி கமிஷனரவர்கள் வேளாண்மெயுற்று சீவிக்கும் ஏழைக்குடிகள்மீதும் இதக்கம் வைத்து வியாதிகளால் தானே மடியும் ஆடுகளையும், மாடுகளையும் பூமியிற் புதைக்கும்படியான சட்டதிட்டங்களையும், புதைக்கும்படியான இடங்களையும் ஏற்படுத்தி சுகாதார நிலைகளை மேலுமேலும் விருத்திச் செய்ய வேண்டுகிறோம்.

மடிந்த ஆடுமாடுகளின் தோல்களை உரித்துக்கொண்டு மாமிஷங்களை புதைத்து விடலாமென்னும் சுயப் பிரயோசன ஆலோசனையும் சிலர் கொடுப்பார்கள். அவ்வகையான ஆலோசனைகளுக்கு சானிட்டேரி கமிஷனரவர்கள் இடங்கொடாது மடித்த ஜெந்துக்களை குறித்த இடங்களில் தோலை உரிக்காது உடனுக்குடன் புதைத்துவிட வேண்டுமென்னும் உத்திரவைப் பிறப்பித்தல் வேண்டும்.

விஷமாமிஷங்களைப் புசித்து துன்பமடைவது கிராமங்களில் விசேஷமாயினும் முநிசபில் எல்லைக்குள் வாசஞ்செய்யும் சகலபாஷை சிறுவர்களுக்குத் தோன்றும் வியாதிகளின் விஷயம் நூதனமாகவே விளங்குகின்றது.