182 / அயோத்திதாசர் சிந்தனைகள்
அவர்களைச்சேர்ந்த இந்துக்களில் சிலர் கூடி லாகூரில் இந்து கான்பிரன்ஸ் என்னும் ஓர் கூட்டம் கூடுவதாகவும் அக்கூட்டத்தில் இந்துக்களென்போர் நாளுக்கு நாள் குறைந்துக்கொண்டுவரும் காரணங்களை ஆலோசிக்கப் போகின்றார்களாம்.
இத்தகைய காரணத்தால் இந்துக்களென்போர் ஓர்மத சார்பினர்களென்றே திட்டமாகத் தெரிந்துக்கொள்ளலாம். மதத்தையும், சாதியையும் விடாமல் கைப்பற்றியிருப்பவர்கள் மகமதியர்களையும், கிறிஸ்தவர்களையும், சாதிபேதமற்ற திராவிடர்களையும் தங்களுடன் சேர்த்து இந்தியர்களென்றும், இந்துக்களென்றுங் கூறுவதற்கு ஆதாரமென்னை.
இந்திய தேசத்தில் வாசஞ் செய்கின்றபடியால் சகலசாதி, சகல பாஷைக்காரர்களையும் இந்தியர்களென்று கூறுவார்களாயின் இந்தியாவைக் கைப்பற்றி ராட்சிய பாரஞ் செய்யும் ஐரோப்பியர்களையே இந்தியர்களென்று கூறல்வேண்டும்.
காரணம் ஐரோப்பியர்கள் இந்தியாவைக் கைப்பற்றி எங்கும் தங்களது பிரிட்டிஷ் கொடிகளை நாட்டி இந்திய சக்கிரவர்த்தியென ராட்சியபாரஞ் செய்துவரும் அநுபவத்தைக்கொண்டு இந்தியாவுக்கு உடையவர்கள் பிரிட்டிஷ் துரைத்தனத்தாராதலின் அவர்கள் அரசாட்சியின் ஆதாரத்தைக்கொண்டு அவர்களையே இந்தியர்களென்று கூறுவதற்காதாரமிருக்கின்றது.
இவற்றுள் இந்துக்கள் நாளுக்குநாள் குறைந்துபோகின்றார்களென்று கான்பிரன்ஸ் கூடும் பெரியோர்கள் தாழ்ந்த வகுப்பினரை உயர்த்தப் போகின்றார்களாம். இதன் விவரம் விளங்கவில்லை. தாழ்ந்தவர்கள் என்னும் ஓர் அட்டவணைப் போட்டுக் கொண்டு அவர்களை உயர்த்துகிறோம் என்பது எந்த தன்மசாஸ்திரமோ அதனை அறியவேண்டியதேயாம்.
ஏழைகளுக்கு உத்தியோகங்களும், பொருளுதவியுஞ்செய்து ஆதரிப்போம் என்பதாயினும் கல்வியில்லாதோருக்கு தரும் கலாசாலைகள் ஏற்படுத்தி கலாவிருத்தி செய்யப்போகின்றோம் என்பாராயினும் அஃதோர் தேச சீர்திருத்தத்திற் கழகாகும். அங்ஙனமின்றி தாழ்ந்த வகுப்போரை உயர்த்தப்போகின்றோம் என்பாராயின் தென்னாலிராமன் கறுப்பு நாயை வெள்ளை நாயாக்கிய கதைக்கொக்கும்.
தங்களை உயர்ந்தவர்களென்று சிறப்பித்து சகல சுகமும் அநுபவித்துக் கொண்டு சிலரைத் தாழ்ந்தவர்களென்று வகுத்து அவர்களை தலையெடுக்க விடாமல் நசித்து சீர்கெடுத்தவர்கள் தற்காலங் கூட்டங்கள் கூடி, தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்தப்போகின்றோமென்பது விசேஷ விளம்பரமேயாம்.
இவர்களது ஏற்பாடுகளைக்கொண்டும் அனுபவங்களைக் கொண்டும் தற்காலம் தாழ்ந்த வகுப்போரெனக் கூறப்பெற்றவர்களும் எழிய நிலையில் உள்ளவர்களும் இந்துக்களாலேயே தாழ்த்தி நகங்குண்டவர்களென்று திட்டமாகத் தெரிந்து கொள்ளலாம்.
- 3:13; செப்டம்பர் 8, 1909 -
77. தற்கால கவுன்சல் சட்ட சங்கை
தற்காலம் வெளிவந்துள்ள இராஜாங்க கவுன்சல் நியமனங்களில் மகமதியர்களென்றும், இந்துக்களென்றும் பிரிக்கப்படாது. அவ்வகைப் பிரிப்பதினால் எங்களுடைய ஒற்றுமெய்க் கெட்டுப்போகுமென்று பயிரங்கப் பத்திரிகைகளில் கூச்சலிடுகின்றார்கள்.
இத்தகையாய்க் கூச்சலிடுவோர் தங்கடங்கள் அனுஷ்டானங்களில் வழங்கிவரும் வாக்கியங்களை நோக்குவதைக் காணோம்.
அதாவது நீவிரென்னசாதியென்று கேழ்க்கும் வார்த்தை இந்துக்களில் ஒருவரையும் விட்டகன்றதில்லை. அத்தகைய வினாவிற்கு தான் இந்து என்று ஒருவன் சொல்லிவிடுவானாயின் உனது குறுக்குப்பூச்சுனாலும், நெடுக்குப் பூச்சுனாலும் தெரிந்துக்கொண்டேன், உட்பிரிவென்ன சாதியெனவென்று கேழ்க்கின்றார்கள்.