உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184 / அயோத்திதாசர் சிந்தனைகள்


ராஜாங்க திருத்தமென்றுங் கூறி யாங்கள் ராஜாங்க சம்பந்தத்தில் (நன் பிராமன்ஸ்). என வெளிவந்தோமென்பாராயின், இந்துக்கள், மகமதியர், பெளத்தர், கிறீஸ்தவர்களென்னும் பிரிவினைகளுக்கு மதசம்மதங்களே காரணமாயிருப்பது கொண்டு இந்துக்களென வெளிவந்துள்ளோர் இராஜகீயே காரியாதிகளிலும் (நன்பிராமன்ஸ்) எனப் பிரித்துக் கொள்ளுவதற்கு ஆதாரமில்லை.

ஆதலின் இவற்றைக் கண்ணுறும் அன்பர்கள் ஒவ்வொருவரும் தற்காலம் தோன்றியிருக்கும் (நன் பிராமன்ஸ்) என்போர் யாவரென்றும், அவர்கள் கூட்டத்தின் கருத்துக்கள் யாதென்றும் தெரிவிக்கும்படிக் கோருகிறோம்.

கூட்ட வோட்டச் சிலவுகள் யாவும் எங்களைச்சார்ந்தது. ஆட்டபாட்டச் சுகங்கள்யாவும் ஐயரைச் சார்ந்தது என்பாராயின் யாது பலனென்பதேயாம்.

- 3:14; செப்டம்பர் 15, 1909 -


79. திராவிடசபையோரால் நடந்துவருஞ் செயல்களும் அடைந்து வருஞ்சுகங்களும் நீலகிரியில் 1891 வருஷம் சபையோரால் காங்கிரஸ் கம்மிட்டியாருக்கு அநுப்பிய விண்ணப்ப பாயிர சுருக்கம்

கனந்தங்கிய காங்கிரஸ் கமிட்டியாரவர்களுக்கு மிக்கப் பணிதலான வந்தனத்தோடு அறிவிக்கும் விண்ணப்பமாவது:-

மநுமக்கள் தோற்றத்தில் கன்மத்தால் சாதியா, ஜென்மத்தால் சாதியா; அதாவது தொழிலால் சாதியா, பிறவியால் சாதியா என்பதும், திராவிடமெனுந் தமிழ்பாஷை வழங்கிய பெயரும், நான்குசாதிப்பெயருடன் உண்டான விஷயங்களும், பறையரெனும் பெயர் எக்காலத்து அனுஷ்டிக்கப்பட்ட தென்பதும்,

முத்துசாமி ஐயர், முத்துசாமி முதலி, முத்துசாமி நாயுடுவெனத் தங்கள் தங்கள் பெயர்களினீற்றில் இத்தொடர்மொழிகளை எக்காலத்துச் சேர்த்துக் கொண்டனர் என்பதும், ஆசார அனாசார துர்க்கிருத்தியங்கள் யாவரிடத்து நிறைந்துளது என்பதும், வேதம் ஆதியா அனாதியா, யாவர்க்கும் பொதுவாயுளதா, பட்சபாதம் உடையதா என்பதும், பறையரென்னும் பெயர் சகலருக்கும் பொருந்துமென்பதும், சாஸ்திராதார அநுபவ திருஷ்டாந்த தாட்டாந்தங்களுடன் வரைந்துக் கேட்டுக்கொள்ளுவது.

ஓர் யாசகத் தொழிலாளனைப் பத்து பெயர் சேர்ந்து இவன் மெத்த வாசித்தவன், மிகவும் யோக்கியதா பட்சமுடையவன், உயர்ந்த சாதியினன் என்று புகழ்ந்துகொண்டே வருவாராயின் அவன் செய்யும் பிக்ஷைத்தொழில் கேவலமாயிருப்பினும் பத்துப்பெயர் புகழ்ச்சி செய்வதனால் நாளுக்குநாள் அவன் விருத்தியடைந்து முன்னுக்கு வந்துவிடுவான்.

ஆனால் ஆசாரம் நல்லொழுக்கம், கீர்த்தி, கல்வி, கேள்விகளில் சிறந்த ஓர் மனிதனைப் பத்து பெயர் சேர்ந்து அவன் கேவலன், நீசன், அனாசாரமுடையவன், நீசசாதியான் எனத் தாழ்த்திக் கொண்டே வருவாராயின் அவன் தேகங்குன்றி நாணமடைந்து அறிவு மழுங்கி சீர்க்கேடனாய்த் தாழ்ந்து விடுவானேயன்றி முன்னுக்கு வரான். இஃதனுபவப் பிரத்தியட்சமாகையால் காங்கிரஸ் கமிட்டியார் பறையர்களென்று தாழ்த்தப்பட்டுள்ள பெருங் குடிகளின்மீது கருணை பாவித்து கவர்ன்மெண்டாரைத் தாங்கள் கேட்டுவருங் குறைகளுடன் அடியிற் குறித்துள்ள பத்துக்குறைகளையும் விளக்கி ஆதரிக்கக் கோருகிறோம்.

அதாவது,

1. பறையரென்பதில் இழிவாகக் கூறி மனங் குன்றச்செய்வரேல் பழித்தல், அவதூறென்னும் இரண்டுகுற்றங்களுக்கு ஆளாகவேண்டிய தென்றும்,

2. இக்குலத்து ஏழைக்குடிகள் விருத்தியடையும் பொருட்டு கல்விசாலைகள் பிரத்தியேகமாக அமைத்து உபாத்தியாயர்களையும் இக்குலத்தோரில் நியமித்து மாணாக்கரின் சம்பளங்களையும் அரைபாகங் குறைக்கவேண்டியதென்றும்,