பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186 / அயோத்திதாசர் சிந்தனைகள்


இஃது எச்சபையோரால் நடந்த சுகமென்பீரேல், திராவிட சபையோரால் நடாத்திய முயற்சியேயாம்.

திருவாங்கூரிலுள்ள இக்குலத்து ஏழைகளிச்சங்கதிகளை பத்திரிகைகள் வாயலாகவும் கேழ்வியாலும் உணர்ந்து தாங்களும் திராவிட ஜனக் கிளைச்சபையோரெனக் கூடி அவ்விடத்திய திவானவர்களுக்கு ஓர் விண்ணப்பமனுப்பி சில தருமகலாசாலைகள் வகுத்து தங்கள் சிறுவர்களை விருத்திசெய்ய வேண்டுமென்று கோரினார்கள். அதனைக் கண்ணுற்றதிவானவர்கள் அடியிற்குறித்துள்ள வினாக்களை வினவினார்.

திருவிதாங் கோட்டிலுள்ள திவான் ஆபீசிலிருந்து மேற்சொன்னபடி நாகர்க்கோவில் ஆதிதிராவிடஜனக்கிளை சபையாருக்கு அனுப்பிக் கேட்டிருக்கும் கேள்விகளுக்கு சென்னை ஆதி திராவிடஜன தலைமெய்ச்சபை யோரால் 1892 வருஷம் அக்டோபர் மீ கொடுத்த உத்திரவுகள்

1-வது வினா பறையர்கள் இவர்களுக்கு வக்கணை என்ன, அதன் உற்பத்தியென்ன?

விடை: முதலாவது வினாவில் பறையர்கள் என்னும் பெயர் பூர்வீக திராவிட சாதியோருக்கு வந்த வகை கல்வியற்ற அவிவேகிகளிற் சிலர் தங்கள் விரோதத்தினால் வைத்தப் பெயராகக் காண்கிறதேயன்றி தொழிலைப்பற்றி வந்ததாகக் காணவில்லை. அதாவது (பறை) என்னு மொழிப்பகுதியாகி, தோல் கருவியடித்து விவாகக் குறிப்பு, மரணக்குறிப்பை பறைகிறதும் நாவினாற் சொல்லென்னும் ஏவலைப் பறைகிறதுமாகி சொற்றிரிந்து பறை-பகுதி, அர் - விகுதியினால் வாய்பறை, தோற்பறை பறையுஞ் சகலதேச மனுக்களையும் பறையரென்று சொல்லும்படியான ஆதரவிருக்க திராவிடசாதியோர்களை மட்டும் பறையர்களென்கிற நோக்கங்கொண்டு கேட்டக்கேழ்விகளுக்கு உத்திரவு கொடுக்கப்பட்டிருக்கிறது.

வக்கணை என்பதற்கு சினேகமென்னும் பொருளைத்தரும். அதற்கு உற்பத்தி சத்துவநிலையேயாம்.

இதனை வினவியவர் கருத்து ஒவ்வொரு தேசபாஷைக்காரர்களும் தங்கடங்கள் பெயர்களினீற்றில் ஐயர், முதலி, பட்டர், ராவு, சாஸ்திரியென ஒவ்வொரு தொடர்மொழிகளை வைத்திருக்கின்றார்களே அதுபோல் தற்காலம் பறையரென்று வழங்கிவரும்படியானவர்களுக்கு ஏதேனும் தொடர்மொழிகள் உண்டாவென்று கேட்டிருப்பாரானால் இந்துதேசத்தின் ஓர்பாகத்தில் நான்கு சாதியோராய் விளங்கினோர்களில் திராவிடசாதியோராகிய தமிழ்பாஷைக் குடிகளை ஐந்துபாகமாகப் பிரித்து அதில் மலைகளைச் சார்ந்து வசிப்பவர்களுக்கு குறிஞ்சி நிலத்தாரென்றும், கடலைச்சார்ந்து வசிப்பவர்களுக்கு நெய்த நிலத்தாரென்றும், காடுசார்ந்து வசிப்பவர்களுக்கு முல்லை நிலத்தாரென்றும், படுநிலஞ்சார்ந்து வசிப்பவர்களுக்குப் பாலைநிலத்தாரென்றும், நாடுசார்ந்து வசிப்பவர்களுக்கு மருதநிலத்தாரென்றும் வழங்கிவந்தவர்களில் இவர்கள் மருதநில வாசிகளாகையால் தங்கள் பெயர்களினீற்றில் நாயனார், கீரனார், போகனார், புலிப்பாணியார், பாண்டியனார், அகத்தியனார், நத்தத்தனார், என ஒவ்வொருவர் பெயர்களினீற்றிலும் விகுதியாக நிற்குமேயன்றி பகுதியாக நிற்கமாட்டாது. மரியாதையோவென்றால் பெரியோர்களுக்கு தேவரீரென்றும், சிறியோர்களுக்கு சிறந்திரு அல்லது சுகநிதியென்றும் அமைவித்த நிச்சயமாகும். இவர்களுக்குள்ளுந் தற்காலத்தில் சிலர் பிள்ளை, ரெட்டி, பத்தர், ராவு பொன்னுத் தொடர்மொழிகளை சேர்த்துக்கொண்டுவருகின்றார்கள்.

2-வது வினா. சேரி என்பதற்குப் பொருள் என்ன?

- 3:15; செப்டம்பர் 22, 1909 -

விடை : சேரி என்பதற்குப் பொருள் பாடி. அதாவது - பத்து குடிகள் அல்லது அதற்கு மேற்பட்ட குடிகள் சேர்ந்து வாசஞ்செய்யுமிடத்திற்கு சேரி என்னும் பெயரைக் கொடுத்தார்கள். அஃது முல்லைநிலவாசிகளாகிய இடையர்கள் வசிக்கும் இடத்திற்கே இடைச்சேரியென்றும்,