உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190 / அயோத்திதாசர் சிந்தனைகள்


சகலரும் உபயோகிக்க வேண்டியிருக்கின்றபடியால் மருதநிலவாசிகளாகிய இவர்களுக்கு பட்டு, பருத்தி முதலிய ஆடைகளும்; அம்பர், வெள்ளி, நவமணி முதலிய ஆபரணங்களும் பூர்வமுதலணையப்பட்டு தற்காலத்திலும் உபயோகித்து வருகிறார்கள்.

- 3:21; நவம்பர் 3, 1909 -

16 - வது வினா. ஆகாரத்தை சம்மந்தித்த விவரமென்ன? அதை எப்படி புசித்துவருகிறார்கள்?

விடை : மருதநில தானியமாகிய சென்னெல், சிறுபயிறு, வாழை, பலா, மா, முதலிய ஆகாரங்கள் இவர்கள் சூத்திரத்தால் விளைகிறபடியால் பூர்வமுதல் நாளதுவரையில் அறுசுவை உண்டியோடும் புசித்துவருகின்றார்கள்.

17 - வது வினா. மத்தியபானங் குடிக்க அநுமதியுண்டா ? அவைகளை அதிகமாக உபயோகிக்கிறவர்கள் யார்?

விடை : பூர்வத்தில் இவர்கள் வம்மிஷத்தோர்களால் ஏற்படுத்தியுள்ள சகல சாஸ்திரங்களிலும் மதுவைப்பற்றியும், மது விற்போரைப்பற்றியும், அதைப் புசிப்போரைப்பற்றியும் இழிவாகக் கூறியிருக்கின்றபடியால் அவைகளைப் பானஞ்செய்ய அநுமதியில்லை. தற்காலம் இவர்களிற் சிலர் தங்கள் சம்பாதனைக்குத் தக்கதுபோல் புசித்துவந்தபோதிலும் பெரும்பாலும் உபயோகிப்பவர்கள் யாரென்று அறியவேண்டுமானால் ஆப்காரி இனிஸ்பெக்ட்டர் மூலமாகவும், இரட்டேயில் ஷாப் வியாபாரிகள் மூலமாகவும், புட்டி வியாபாரிகளாலும் எளிதாகத் தெரிந்துக் கொள்ளலாம்.

18 - வது வினா. பிரதான சாதிகள் எவை? அவைகளின் உட்பிரிவுகள் எவை?

விடை : அந்தந்த தேசத்தில் சாதிக்கும்படியான பார்வைக்காரர்களே அங்கு பிரதான சாதிகளானார்கள். அந்தந்த பாஷையில் வழுவினின்றதே உட்பிரிவாகும்.

19 - வது வினா. மேல் விபரத்தில் உட்படாத ஆசார விளக்கங்கள் என்ன?

1. விடை: தன் பாஷையில் வக்கணையுள்ளத் தொழிற்பெயர்களை கீழ்ச்சாதி மேற்சாதியென்று ஏற்படுத்திக்கொண்டு சுதேச ஒற்றுமெயைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது.

2. விடை : சகல சீவசெந்துக்களும் மண்ணாகிய பிரம்மாபேரில் வாசஞ் செய்கிறபடியால் மநுக்கள் வாழும் பதியை இழிவு கூறக்கூடாது.

3. விடை : ஒவ்வொருவரின் சம்மதமே மதமாகையால் எம்மதத்தையும் தூஷிக்கக்கூடாது.

4. விடை : ஓதிவைப்பவனே ஆசானாகையால் தன்னவரன்னியரெனப் புறங்கூறக்கூடாது.

5. விடை : ஒவ்வொருவரையுஞ்சேர்த்துக்கொள்ளுவது பிரியசித்தமாகையால் பிராயசித்தம் உண்டாக்கிக்கொண்ட போது மற்றவர்களை இழிவுகூறக்கூடாது.

6. விடை : சகல தொழில்களும் ஜீவாதாரமாயிருக்கின்றபடியால் எத்தொழிலையும் இழிவுகூறக்கூடாது.

7. விடை : இகத்துக்கும், பரத்துக்கும் உள்ள சகல நன்மெகளும் மனுக்களுக்கென்று ஏற்படுத்திக்கொண்டிருக்க, அதில் சிலருக்குண்டு சிலருக்கில்லையென்று புறங்கூறக்கூடாது.

8. விடை : சகலமனிதர்களும் பஞ்ச பூதவடிவ சுக்கில சுரோணிக உற்பத்தியாகையால் நான் பெரிய உற்பத்தியென்று ஒருவனுஞ் சொல்லக் கூடாது.

9. விடை: புருஷனுக்கு வாலைவயதிலும், பெண்களுக்கு பேதை பெதும்பை வயதிலும் விவாகங்செய்யக்கூடாது.

10. விடை : மனுக்களாக அவதரித்தும் மரணத்திற்கு ஆளானால் மறுபிறவி உண்டென்று சகல ஞானசாஸ்திரிகளும் கூறுகிறபடியால் மரணத்திற்கு ஏதுவான விஷயங்களை செய்யக்கூடாது.