xxiv / அயோத்திதாசர் சிந்தனைகள்
பாராட்டுக்குரியவராவார். இந்த இரண்டு தொகுதிகளின் வாயிலாக பண்டித அயோத்திதாசரின் வாழ்க்கையையும் ஆதிதிராவிடரின் வரலாற்றையும் அறிய வாய்க்கப்பெற்றது வரவேற்கத்தக்கதாகும்.
அன்றைய தமிழர் அயோத்திதாசரைத் தனித்தன்மையாளராகப் பார்த்தார்கள். அவர் காலத்திலும் பல பண்டிதர், புலவர், கவிஞர், நாவலர், அவதானிகள், பாகவதர்-பேச்சாளர், எழுத்தாளர் ஆதிதிராவிடர்களிடையே இருந்தார்கள். இருப்பினும் சமுதாயம், சமயம், இலக்கியம், அரசியல், வரலாறு, தொழில், பகுத்தறிவு, சீர்திருத்தம் போன்றவைகளில் ஈடுபாடு கொண்டு மக்கள் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு தொண்டாற்றியதுதான் பண்டிதரை தனித்தன்மை கொண்ட மனிதராக எண்ணத் தூண்டியது எனலாம்.
அயோத்திதாசர் 1875 இலிருந்து 1914 வரை விதைத்த முன்னேற்ற சிந்தனைகளின் மறுமலர்ச்சியும் வளர்ச்சியும் இரட்டைமலை சீனிவாசனார், எம்.சி. ராஜா போன்ற தலைவர்களைப் படைத்து மக்களுக்குப் பாடுபட வைத்தது என்று தயக்கமில்லாமல் குறிப்பிடலாம். இதுவும் 1965இல் பேராசிரியர் என். சிவராஜ் அவர்கள் காலத்தில் முடிந்து போன சகாப்தமாக எண்ணத்தக்கதாக அமைந்துவிட்டது.
மதத்தால் நலிவும் வருண வேறுபாட்டால் அவல நிலையும் ஆதிதிராவிடர்க்கு ஏற்படக் காரணமாகயிருந்தது பிராமணரும் பிராமணியமுமே என்ற கருத்து இலைமறைகாயாக இருந்து கனிந்தது. இதைப் பொதுமக்கள் கவனத்திற்கு 1900க்கு முன்பே கொண்டு வந்தது. அயோத்திதாசரின் பேச்சும் எழுத்தும் என்றால் மிகையாகாது. அவை ஆதிதிராவிடர்களிடையே அரசியலையும் பேச வைத்தது.
ஆங்கிலேயர் ஆளுமையில் இந்தியர்களுக்கு ஏற்பட்ட நன்மைகளை வரவேற்றும், இந்திய தேசிய காங்கிரஸ் இந்திய மயமாக்கி சனாதன தர்மத்திற்கு, வழிகோலும் போக்கினைத் தாக்கியதின் மூலமும் இவ்வுணர்வு வெளிப்பட்டது. ஆதிதிராவிடர்களின் இந்தச் சிந்தனையின் சாயலில் பிற்காலத்திய திராவிடர் என்போரின் எண்ணமும் வளர்ந்தது என்றால் தவறாகாது.
சிலதென்னக மக்களின் முன்னோடிகளிடையே பிராமணிய ஆதிக்கத்தின் மீது எழுந்த சலிப்பும் வெறுப்பும் தோல்வியும் தென்னிந்தியரின் நல உரிமையைக் கேட்கத் தூண்டியது. இந்நிலை 1916இல் பிறந்து 1945இல் வளர ஆரம்பித்ததாகும்.
1870வாக்கில் எழுந்த ஆதிதிராவிட சங்கங்கள், சபாக்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமற் போனாலும் 1892இல் பதிவு செய்யப்பட்ட ‘ஆதிதிராவிட ஜன சபை’, 1916இல் பதிவு செய்யப்படாத 'ஆதிதிராவிட மகா ஜன சபை', 1928இல் பதிவு செய்யப்பட்ட ‘அகில இந்திய ஆதிதிராவிட மகா ஜன சபை’ போன்றவைகளின் சிந்தனைகள் காலத்தால் முற்பட்டவை என்பதும் அவற்றில் அயோத்திதாசரின் பங்கு சமச்சீர்மையானது என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கனவாகும்.
சமுதாய உரிமையையும் முன்னேற்றத்தையும் மட்டுமே எண்ணிப் போராடிக் கொண்டிருந்த ஆதிதிராவிடசபைகளை ஊக்குவிக்கும் வகையில் பண்டிதரின் தொண்டு அமைந்தது. பஞ்சாயத்து, நகராட்சி, சட்டமன்றம், பாராளுமன்றம் போன்றவைகளிலும் தொழிற்துறை, கல்வி, விவசாயம், காவல் துறை போன்ற அனைத்துத் துறைகளிலும் பிரதிநிதித்துவம் எல்லா வகுப்பினருக்கும் வழங்கப்பட வேண்டும் என்று அவர் தன் பேச்சிலும் எழுத்திலும் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே வந்தார், இந்து, பவுத்தர், கிறிஸ்தவர், இசுலாமியர், ஆங்கிலோஇந்தியர், ஐரோப்பியர் என்ற அனைவருக்கும் வாய்ப்பளிக்க வேண்டுமென்று 1909லேயே தனது பத்திரிக்கையில் எடுத்துரைத்தவர் அயோத்திதாசர் (தமிழன்3.2.1909). இது காலத்தால் முந்திய கருத்தாகக் கருதத்தகும்.
“சென்னை மாநிலத்தில் வகுப்புவாரி பிரதிநிதித்துவக் கொள்கை பார்ப்பனார் அல்லாத திராவிட இயக்கத்திற்கு முற்பட்டது... பிற்பட்டோர் அல்லது தாழ்த்தப்பட்ட வகுப்பாரின் பட்டியலானது 1885ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட நிதியுதவித் திட்டத்தின் போதே கால் கொண்டுவிட்டது. இத்திட்டம் தீண்டாதவர்