பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

198 / அயோத்திதாசர் சிந்தனைகள்


82. விண்ணப்ப வேடிக்கை

தென்னிந்தியாவென்னும் இத்தேசத்தில் புத்ததன்மங்களையும், அவற்றை அநுசரித்துவந்த பௌத்தர்களையும் கழுவு, கற்காணமுதலிய கொலை இயந்திரங்களில் வைத்துக் கொன்றதுமன்றி பௌத்தர் மடங்களையும் அழித்து மாறுபடுத்தி புத்தரது நிஷ்டாசாதன சிலைகளையும், பரிநிருவாண சிலைகளையும், சின்முத்திராங்க சிலைகளையுஞ் சின்னாபின்னமாக சிரத்தை ஒடித்து கரத்தை ஒடித்தும் கனஞ்செய்து வைத்துள்ளதுமன்றி புத்தரது தன்மத்தை சிரமேற்று சாதிபேதமற்று நடந்துவந்த பெளத்தர்கள் யாவரையும் பறையர்கள், தாழ்ந்தசாதியோரென்று வகுத்து பல்வகையாலும் பாழ்படுத்தியதுமன்றி நாளது வரையிலும் பாழ்படுத்திவருவது அநுபவக் காட்சியாகும்.

புத்தரது சத்தியதன்மத்தையும் பௌத்தர்களையும் பாழ்படுத்திய இத்தேசத்தில் புத்தரது அஸ்தியும், சாம்பலுந் தோன்றிற்று என்றவுடன் அவற்றை புறத்தேசத்தோரிடங் கொடுக்கப்படாது எங்கள் சுதேசத்திலேயே வைக்க வேண்டுமென்று கவர்ன்மெண்டாருக்கு விண்ணப்பம் அநுப்பியவர்கள் யாவரும் சாதிபேதமற்ற பௌத்தர்களாகத் தோன்றாமல் சாதிபேதமுற்ற இந்துக்களாகவே விளங்குகின்றது.

புத்தரது அஸ்தியின்மீது இத்தகைய அன்பு தோன்றி விண்ணப்பம் விடுப்பது யாதார்த்த அன்புதானோ?

சரித்திராதார யாதார்த்த அன்பாயின் விஷ்ணுவே அவதாரமாக வந்தவரென்னும் பொடி கலப்பானேன்?

அத்தகைய பொடி கலப்புடன் புத்தரது அஸ்தியை உலக மாதா எடுத்து வெளியில் கொடுத்தாள் என்னும் மாதா கதை எழுதுவானேன்?

இத்தகைய இந்திய மாதாவும், விஷ்ணுவும் சாக்கையதோப்பில் கண்டெடுத்த சாம்பலையும். கிருஷ்ணா டிஸ்டிரிக்டில் கண்டெடுத்த சாம்பலையும் வெளிபடுத்தியபோது தோன்றாத காரணமென்னை. சிவமத விஷ்ணுமத விண்ணப்பதாரிகள் அக்காலம் அன்பு பாராட்டாததென்னை.

புத்தர் பிறந்து வளர்ந்து நிருவாணமடைந்த இத்தேசத்திலுள்ள புத்ததர்ம சங்கங்களையும், தன்ம கலை நூற்களையும், பௌத்தர்களையும் பாழ்படுத்தி பதிகுலையச் செய்தவர்கள் அவரது அஸ்தியின்மீது அன்பு கொண்டார்களென்றால் எவ்வாதாரத்தால் ஏற்பதென்றும், சீனர்களும், ஜப்பானியர்களும், பர்மியர்களும், தீபேத்தியர்களும், மங்கோலியர்களும், சிங்களர்களுமாகிய யாங்கள் இந்தியர்களைப்போல் புத்தரையும், அவரது தன்மத்தையும், அவரது சங்கத்தையும் அழித்து பாழ்படுத்தி இருப்போமாயின் அவரது அஸ்தியைக் கண்டெடுப்பதற்கு யார் முயலுவார்கள். யாரவற்றைநோக்க அவாக் கொள்ளுவார்கள். புத்தரையும், புத்தரது தன்மத்தையும் இதுவரையுங் கார்த்துப் பரவச்செய்துவரும் எங்களுக்கில்லாத சுதந்திரம் புத்தரது சிறப்பையும், புத்ததன்மங்களையும், பௌத்தர்களையும் அழித்து கழுவிலுங் கற்காணங்களிலும் வதைத்துக் கொன்றவர்களுக்கு எங்கிருந்துவந்ததென்றும், இந்தியர்களைப்போல யாங்களும் புத்ததன்மத்தை அழித்திருப்போமாயின் தோன்றிய அஸ்திக்கு இந்தியர்கள் விண்ணப்பம் அநுப்புவார்களோவென்றும், ஒவ்வோர் பௌத்த தேசத்தவர்களுங் கூறுகின்றார்களாம்.

இந்துமதஸ்தர்களோ விண்ணப்பங்களை விடுத்துவருகின்றார்கள். புறதேசவாசிகளாம் பௌத்தர்கள் ஈதோர் விந்தையென்றே எதிர்பார்த்திருக்கின்றார்கள். இராஜப்பிரதிநிதியாயிருந்துச் சென்ற நமது கனந்தங்கிய கவர்ன்ஜனரல் கர்ஜன்பிரபு கருணை கொண்டு ஏற்படுத்தியுள்ள சட்டமோ இந்துமதத்தினரை உற்றுநோக்குகின்றது. காரணம் யாதெனில், இத்து தேசத்திலுள்ளப் புராதனக் கட்டிடங்கள் தோன்றுமாயின் அதிலடங்கியுள்ள சிலைகளையேனும், மற்றும் வஸ்துக்களையேனும் சேதப்படுத்தாது