200 / அயோத்திதாசர் சிந்தனைகள்
களுக்கு மட்டிலும் சமரசசுகம் வேண்டும் சுதேச ஏழைக்குடிகள் தாழ்ந்த நிலையிலேயே இருக்கவேண்டும்போலும்.
அந்தோ, இத்தகையக் கொடூரச் சிந்தையங் காருண்யமற்றச் செயலுமுள்ளார் நீதிமக்களாமோ. இத்தேச சுதேசிகளும் பூர்வக் குடிகளுமானோர்களை அன்னியதேசங்களிலிருந்து இவ்விடம்வந்து குடியேறியுள்ளவர்கள் சுத்தசலம் மொண்டுகுடிக்கவிடாமலும், அம்பட்டர்களை வஸ்திரமெடுக்கவிடாமலும், கிராமபாதைகளில் நடக்கவிடாமலும், பொதுவாயுள்ள கலாசாலைகளில் வாசிக்கவிடாமலும், பொதுவாகியக் கைத்தொழிற்சாலைகளிற் சேரவிடாமலும், கருணைதங்கிய ராஜாங்க உத்தியோகங்களில் நுழையவிடாமலும், மிருகங்களிலுத்தாழ்ச்சியாய் நடாத்திவருகின்றார்கள். அதன் மூலகாரணமோ வெனில் தங்கள் பொய்மதங்களைப் பரவச் செய்து புத்த தன்மத்தை அழிப்பதற்காக பூர்வக்குடிகள் யாவரையும் சாதிபேதமென்னும் ஓர் கட்டுக்கதையை ஏற்படுத்திக்கொண்டு நீதியில்லாமல் நசித்து வருகின்றார்கள்.
இந்துதேசத்திலுள்ள சகலகுடிகளும் இதனையறிந்தும் இருக்கின்றார்கள். ஏழைக்குடிகளின் கஷ்டநஷ்டங்களை ஸ்பஷ்டமாகத் தெரிந்தும் அவர்கள்மீது பரிதாபஞ்கொள்ளாது செளத்தாபிரிக்காவுக்குச் சென்றுள்ள இந்தியர்களின் மீதுமட்டிலும் பரிந்துநிற்பது விந்தையென்றே கூறல்வேண்டும். அன்னிய தேசத்தோரிடம் சுதந்திரம் கேட்கப் பாடுபடுகிறவர்கள் சுதேசக் குடிகளுக்கு வேண்டிய சுகங்களை ஏன் கருதலாகாது. சாதிபேதம் வைத்துள்ள இத்தேசக்குடிகள் சாதிபேதமின்றி வாழ்ந்திருந்தப் பூர்வக் குடிகளை நாயினுங் கடையினராக நடாத்திவருகின்றார்களே. பெரியசாதி சென்று பெயர் வைத்துள்ளார்களில் குஷ்டரோகிகளாயினும், வைசூரிகண்டவர்களாயினும் அவர்களது பொதுவாகிய குளங்களில் குளிக்கலாம் நீரருந்தலாம். ஓர் சொரிபிடித்த நாயேனும் அவர்களது பொதுவாகிய குளத்தில் நீரருந்தலாம் பூர்வ ஏழைக்குடிகளையோ அந்நீரையும் அருந்தலாகாதென்று துரத்துகின்றார்கள்.
இத்தகைய நியாயதிபதிகள் ஒன்றுகூடிக்கொண்டுசெளத்தாபிரிக்கா விற்குச் சென்றுள்ள இந்தியக் குடிகளுக்காய் பாடுபடுகின்றார்களாம். ஆ! ஆ! சுதேசக்குடிகளை சுத்தசலம் மொண்டு குடிக்கவிடாமல் துரத்திவிட்டு புறதேச வாசிகளுக்குப் பாடுபடுகிறோமென்பது பழிக்கிடமேயாம்.
- 3:20; அக்டோபர் 27, 1909 -
87. பிராமணனென்று பெயர்வைத்துள்ளானில் ஒருவன் கொலை செய்வானாயின் அவனுக்கு தூக்குதெண்டனை இல்லையாம்
அந்தோ ஆட்சரியம், ஆட்சரியம், தன்னவரன்னியரென்னும் பட்சபாதமின்றி நீதி செலுத்தும் பிரிட்டிஷ் ஆட்சிக்குட்பட்ட திருவனந்தபுறமென்னும் ஓர் தேசத்தில் பிராமணனென்னும் பெயர் வைத்துக் கொண்டிருந்தவனொருவன் தனக்கிசைந்த சூதாட்டத்திற்குப் பொருளுதவி செய்யாத தனது மனைவியை தேக முழுவதும் கத்தியால் வெட்டி வதைத்து கொலை செய்துவிட்டானாம். இத்தகைய கொலைபாதகனை அதிகாரிகளின் முன்விடுத்து குற்றத்தை ரூபித்தும் அவனைத்தூக்கிலிட்டால் தீபாந்திர சிட்சை செய்துவிட்டார்களாம்.
காரணம், பூர்வ இந்து சட்டத்தின்படி பிராமணனைக் கொலைச் செய்யப் போகாதென்று வரைந்துள்ளபடியால் திருவனந்தபுற ராஜாங்கத்தார் அச்சட்டத்தை அநுசரித்து கொலைக்குற்றத்தைத் தள்ளிவிட்டார்களென்று கூறுகின்றார்கள். இது யாதுநீதியோ விளங்கவில்லை. வடமொழியில் பிராமணன் என்றும், தென் மொழியில் அந்தணனென்றும் வழங்கி வந்தப் பெயருள் தன்னுயிர்போல் மன்னுயிர்களைப் பாதுகாக்கும் சாந்த குணமுள்ளவன் எவனோ அவனையோ பிராமணனென்று சாஸ்திரங்கள் முறையிடுகின்றது.