சிறப்புரை / XXV
அல்லது தாழ்த்தப்பட்ட வகுப்பினரைச் சார்ந்த ஏழை மாணவர்களுக்கு உதவிகள் வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்டது” (ஏ.என். சட்டநாதன், தமிழ் நாட்டில் திராவிட இயக்கமும் அதன் பாரம்பரியமும், பக். 43. சென்னை பல்கலைக்கழகம், 1984) என்றாலும் அவை நேர்மையாக சேரவேண்டியவர்க்குப்போய் சேரவில்லை என்பதையும் சுட்டிக் காட்டவேண்டியிருந்தது.
ஆங்கிலேய அரசு தந்த சலுகைகள் எல்லாம் அன்றைய ஆதிதிராவிடர்களின் இடைவிடாத முயற்சியால் பெறப்பட்டதாக இன்றைய ஆதிதிராவிடர்கள் கருதுவது பெருமைக்குரிய செய்தியாகும். இத்தகைய சலுகைகளுக்காக அரசுக்கும் அரசின் மேலதிகாரிகளுக்கும் 1870இலிருந்து 1892 வரையிலும் அயோத்திதாசர் போன்றோர்கள் விடுத்த விண்ணப்பங்களையும் வேண்டுகோள்களையும் இதற்கு ஆதாரமாகக் காட்டுவார்கள். 1772இல் வருவாய்த்துறை, தாழ்த்தப்பட்டோர் நலனில் கவனம் கொண்டதாக இரட்டைமலை சீனிவாசனார் கூறுவதையும் (இரட்டைமலை சீனிவாசன், ஜீவிய சரித்திர சுருக்கம், ப.2.) 1779இல் கிழக்கிந்திய கம்பெனி ஆளுமையாரிடம் ஆதிதிராவிடர் கொடுத்த விண்ணப்பங்களையும்கூட சான்றாகக் கொள்கிறார்கள்.
ஆதிதிராவிடரில் தனிமனிதர், சிறு குழுவினரின் கூட்டுக் கோரிக்கைகளே அவர்களது போராட்ட மரபாக அக்காலத்தில் இருந்திருப்பதை அறிகிறோம். கவர்னர், வைசராய் போன்றவர்களை தனியாகவோ கூட்டாகவோ சந்தித்து தங்கள் குறைபாடுகளை, கூட்டம் அல்லது மாநாட்டு தீர்மானங்களாகக் கொடுத்து தீர்வு கண்டிருக்கிறார்கள் என்பதை அரசு குறிப்பேடுகள் வாயிலாக அறிய முடிகிறது. ஆதிதிராவிடர் மகாவிகடதூதன், பூலோக வியாசன், பறையன், ஆதிதிராவிட மித்திரன் போன்ற பல பத்திரிகைகள் கிடைத்திருக்குமாயின் இன்னும் பல செய்திகள் தெரிய வந்திருக்கும். அவை இன்று கிடைப்பனவாக இல்லை. மேலும் 1860இலிருந்து 1910 வரை 50 ஆண்டுகள் ஆதிதிராவிடர்களால் படைக்கப்பட்ட கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள் போன்றவைகளும் கிடைக்காமையால் அவர்களது வரலாற்றைத் தெரிந்து கொள்ள அரிதாகிவிட்டது. சென்னை அயோத்திதாசரின் தமிழன், கோலார் ஜி. அப்பாதுரையார்,பி.எம். இராஜரத்தினம் ஆகியோரின் தமிழன் பத்திரிகைகள் மட்டுமே நமக்குப் பெரிதும் உதவக் கூடியவைகளாக இருக்கின்றன. 1896இல் வெளியிடப்பட்ட மதுரை பிரபந்தம், இரங்கூன்பிரவேசத்திரட்டு (புலவர் புதுவை த. செய்யப்ப முதலியார், வெற்றிக் கொடியோன் பத்திரிகை ஆசிரியரால் 1896இல் வெளியிடப்பட்டது) ஆகிய நூல்களில் ஓரளவு செய்திகள் அறியக் கிடக்கின்றன.
அயோத்திதாசரின் பெரு முயற்சியால் சென்னையில் பல பள்ளிகள் தொடங்கப்பட்டன. இலவசக் கல்வி, பகல் உணவு போன்றவை பெற்றதிலும் அவரது பங்கு, பணி மகத்தானதாகும். அவரது காலத்திலும் அதற்கு முன்பும் பின்பும் ஆதிதிராவிடரின் இடைவிடாத முயற்சிகளின் பயனே இன்றைய ஆதிதிராவிடரின் முன்னேற்றத்திற்குக் காரணம் என்றால் மிகையாகாது. அரசுகளின் அந்தந்தக் கால திட்டங்களால் ஆதிதிராவிடரின் திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டு பயன் கிடைத்திருக்குமானால் அவை அரசுகளின் கடமையும் காலத்தின் கட்டாயமுமாகும் என்று கொள்வது தவறாகாது.
அரசு, நாட்டு மக்கள் நலனில் அக்கறை கொண்டு தங்களுக்குத் தோன்றியவண்ணம், அரசு வசதிக்கேற்ப திட்டங்களைத் தீட்டி நடைமுறைப்படுத்துவது ஒரு வகையாகும். மக்கள் தங்கள் நிலைமையை எடுத்துக்கூறி அரசின் முடிவுக்கே விட்டுவிடுவது அல்லது இன்னின்ன முறைகளில் இந்தெந்த குறைபாடுகள் போக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துவது மற்றொரு வகையாகும். அயோத்திதாசரும் மற்ற ஆதிதிராவிட தலைவர்களும் இந்த இரு முறைகளால் தங்கள் சமுதாயத்திற்குப் போராடியிருப்பதும் அதில் பண்டிதரின் பணி விஞ்சி நிற்பதும் சிந்திக்கத்தக்கது.
அயோத்திதாசர் போன்ற ஆதிதிராவிட முன்னோடிகளின் சிந்தனைகள் மேலும் பல வெளிவர வேண்டும். ஆயினும், இவருடைய வாழ்வும் தொண்டும்