பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 207


கொண்டு “உப்புமிஞ்சினால் தண்ணீரும், தண்ணீர் மிஞ்சினால் உப்பும்” என்பது போல் கருணை தங்கிய பிரிட்டிஷ் ராஜாங்கத்தோர் பிராமணர்களென்போர் மீது சற்று கருணை வைத்து காரியாதிகளை நடத்திவருமளவும் தங்கள் பிராமணசாதியே உயர்ந்த சாதி மற்றசாதிகளெல்லாம் தாழ்ந்த சாதியென்று நீக்கிக்கொண்டு தங்கள் சாதியோர்கள் மட்டிலும் சுகமடையும் வழிகளை ஏற்படுத்தி வந்தார்கள். நாளுக்குநாள் இவர்கள் சுயப்பிரயோசனச்செயலைக் கண்ணுற்றுவந்தக் கருணை தங்கிய ராஜாங்கத்தார் சகலசாதியோரும் முன்னுக்கு வரவேண்டிய ஏதுக்களை செய்ய ஆரம்பித்ததின்பேரில் ஆங்கிலேயர்களுக்கு எதிரடையாய் காரியாதிகளை நடத்துவதற்காக வேண்டி முன்பு தாழ்ந்தவர்களென்று கூறி வந்த சூத்திரர்களென்போரை உயர்ந்தவர்களென்று கூறி தங்களுடன் சேர்த்துக் கொள்ள ஆரம்பிக்கின்றார்கள்.

இத்தகைய சமயபேத தந்திரச்செயல்களைக்கொண்டே சாதிபேதக் கட்டுக்கதா வகுப்புகள் யாவும் பொய்யென்று கருணைதங்கிய ராஜாங்கத்தார் கண்டு ஏழைகளை ஈடேற்றுவார்களென்று எதிர்பார்க்கின்றோம்.

- 3:23: நவம்பர் 17, 1909 -


93. வங்காளப் பத்திராதிபரே கேண்மின்

வடநாட்டு பெங்கால்பத்திராதிபரே தென்னாட்டார் திகைப்பை நோக்காததென்னோ ?

இந்தியர்களுக்குத் தற்காலங் கொடுத்துள்ள கௌன்சல் மெம்பர்களை யாங்கள் கேட்கவில்லை. ஐரோப்பியர்கள் இந்தியர்களை சமமாக நடத்தாமல் அதி கேவலமாக நடத்துகின்றார்களே அதை நீக்கும்படி கேட்டுள்ளோம்.

அவற்றை இராஜாங்கத்தோர் சீர்திருத்தாது கௌன்சல் மெம்பரை அதிகப்படுத்தினாலும் படுத்திக்கொள்ளட்டும் இந்தியர்களை மட்டிலும் ஐரோப்பியர் சமமாக நடத்தவேண்டுமென்று கேட்கின்றீர். அவ்வகை சமரசங் கேட்போர் தென்னிந்தியாவில் பார்ப்பானென்றும், பறையனென்றும் வகுத்துள்ள பொய் சாதிக் கட்டுக்களை ஏன் அகற்றினீரில்லை. பார்ப்பானென்பவனும் இந்துதேச மனிதவகுப்பைச் சார்ந்தவன் பறையனென்பவனும், இந்துதேச மனிதவகுப்பைச் சார்ந்தவன். இவ்விருவரும் ஒரு தேசக் குடிகளாக இருந்து கொண்டு ஒருவர் சுகமடைவதுபோல் மற்றவர்கள் சுகமடையப் போகாதென்று சகலவிஷயங்களிலுந் தாழ்த்தி சீர்கெடுத்து வந்ததையும் வருவதையும் உணராது ஐரோப்பியர் மட்டிலும் சமரச சுதந்திரங் கொடுப்பதில்லையென்று கேட்பது நியாயமாகுமோ.

புத்ததன்மத்தின்படி அவனவன் செய்த கன்மங்களை அவனவன் அநுபவிக்கவேண்டுமென்னுங் கன்மபலனை தாங்கள் அறிந்திருந்தும் ஐரோப்பியர்கள் சமரச சுதந்திரங் கொடுப்பதில்லையென்பது நீதியாமோ பார்ப்பானுக்குள்ள சமரச சுதந்திரம் பறையனுக்கு எப்போது ஏற்படுகின்றதோ அப்போதே ஐரோப்பியர்களுக்குள்ள சமரச சுதந்திரம் மற்றவர்களுக்குங் களங்கமற ஏற்படும்.

சொற்ப சுதந்திரம் இந்தியர்களுக்குக் கொடுத்துள்ளவிடத்தில் இந்திய ஏழைகள் படும் கஷ்டங்களை சற்று நோக்குவீராக. ஓர் பார்ப்பான் இரயில்வே ஸ்டேஷன் மாஸ்டராயிருந்து மற்றோர் பார்ப்பான் இனிஸ்பெக்ட்டராக வாயினும், தாசில்தாராகவாயினும் இருந்து தன் குடும்பத்தோரை ரயிலிலேற்ற வந்தபோது தங்களுக்கிடங்கிடையாமற் போமாயின் ஏழை இந்துக்கள் யாவரையும் வெளியில் இழுத்துவிட்டு தவிக்கச் செய்து தங்கள் குடும்பத்தோரை ஏற்றிவிடுகிறார்கள்.

ஏழைகள் அநுபவித்துவரும் குளங்குட்டை தங்களுக்கு வசதியாகத் தோன்றுமாயின் சாதித்தலைவர்களாம் அதிகார உத்தியோகஸ்தர்களை தங்கள் வசப்படுத்திக் கொண்டு ஏழைகளை ஊரைவிட்டே ஓட்டி குளங்குட்டைகளைத் தங்கள் வசப்படுத்திக் கொள்ளுகின்றார்கள்.