உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

210 / அயோத்திதாசர் சிந்தனைகள்

தோன்றுமா அவிரோதமாகத் தோன்றுமா, கண்டறிந்து கொள்ளுங்கள், கண்டறிந்துகொள்ளுங்கள்.

- 3:25: டிசம்பர் 1, 1909 -


95. கள்ளுக்கடை கரிதோசைப் பலனையும், கடவுட்கடை கைம்பெண்கள் சொத்தையும் கணக்கெடுப்போமாக

கள்ளுக்கடைவிற்போன் தன்கைப்பொருளைக் கொடுத்துக் கள்ளைவாங்கி விற்று அதன் லாபத்தால்சீவிக்கின்றான். கரிதோசை விற்பவளோ தன் கைபொருள்கொண்டு சரக்குகளை வாங்கி கரிதோசை செய்து அவற்றை விற்று அதினால் சீவிக்கின்றாள்.

கள்ளென்னும் மயக்கவஸ்து பஞ்சபாதங்களில் ஒன்றாயினும் அதனைக் குடித்து வெரிப்பவன் இல்லானாயின் அதனை விற்பவனும் இருக்கமாட்டான். பஞ்சபாதகங்களில் ஒன்றென்றறியாதோன் குடித்து வெறிக்குங் களியாட்டத்தை மிக்க ஆனந்தமாகக்கொண்டு பெண்டு பிள்ளைகள் தவித்துப் பாழடையினும் துட்டு கிடைத்தவுடன் கள்ளுக்குஞ் சுள்ளுக்குஞ் கொடுத்து குடித்து வெறித்து கும்மாபெற்று வீடுவந்து சேர்ந்தாலுஞ் சேருகின்றான், சிறைச்சாலைக்குள் அடைப்பட்டேனும் அலறுகின்றான்.

அவ்வகை அலறினும் “குடிப்பவன் விடுப்பது குதிரைக் கொம்பை பார்ப்பதற் கொப்பனை” என்பதுபோல் துட்டுகிடைத்தவுடன் கள்ளுக்கடைத் தேடுவதே கடனாக, உள்ளோனுக்குக் கொடுக்க கள்ளுக்கடை விற்பவனும் கரிதோசை விற்பவளும் கார்த்திருக்கின்றார்கள்.

குடிப்பவர் ஒழிந்தால் விற்பவர்கள் இராரென்பது திண்ணம். ஓர் வஸ்துவை வாங்குவோரில்லாவிடத்து விற்போர் இராரென்பது கருத்து. ஆனாற் கடவுட்கடை வைத்திருப்பவர்களோ அவர்கள் சாமிசரக்கைத் தாங்களே காணாதிருப்பினும் பஞ்சபாதகங்களில் ஒன்றாகியப் பொய்யைச் சொல்லி எங்கள் தேவனே தேவன், மோட்சத்திற்கு நேரில் கொண்டுபோய் விட்டுவிடுவார், சாமியை நேருக்குநேரில் பார்த்து உட்கார்ந்திருக்கலாம். ஆயினும் எங்கள் உண்டிபெட்டிக்குபோடும் பணங்களை மட்டிலும் தடை செய்யாதீர்கள். எங்கள் கடைகளாம் கோவில்களுக்கு பிரார்த்தனை செலுத்துகிறவர்கள் முடிகளையும், வேல்களையும், கண்மலர்களையும், இரும்பினாலேனும் தகரங்களினாலேனும் செய்யாமல் வெள்ளியினாலும், பொன்னினாலுஞ் செய்துகொண்டு வந்தால்தான் உங்கள் பிரார்த்தனையுஞ் சீர்பெறும். நாங்களும் உருக்கிவிற்று துட்டு மொத்தங்கட்டுவோம்.

இதற்கு சாமியென்னும் முதலே கடைசரக்குகளாயிருக்கின்றபடியால் கள்ளுக்கடைக்குக் கைமுதல் வேண்டியிருப்பதுபோல் கடவுள் கடைகளுக்குக் கைம்முதல் வேண்டுவதில்லை. இன்னும் கடையை விருத்தி செய்யவேண்டுமாயின் சொத்துள்ளக் கைம்பெண்கள் எங்கிருக்கிறார்களென்றறிந்து அவர்களை அணுகி அம்மாதர்களை மிக்க பக்திசாலியென்று கூறக் கேழ்விப்பட்டேன், நீங்கள் நேரே மோட்சத்திற்குப் போய்விடுவீர்கள், நீங்களோர் மண்டபம் கட்டி விட்டால் அங்கு போய் அதேமண்டபத்தில் தங்கி சுகிப்பீர்கள், இந்த சொத்துக்கள் யாவும் நாளைக்கு அழிந்துபோகும். உங்கள் தருமம் மோட்சத்தில் இடம் கொடுக்கும் என்று பஞ்சபாதகப் பொய்யைச்சொல்லி கைம்பெண்கள் பொருட்கள் யாவற்றையும் அவள் குடும்பத்தோருக்கு உதவிபுரியவிடாது தடுத்து தங்கள் மதக்கடைக் கணக்கில் சேர்த்துக்கொண்டு சாமிவியாபாரத்தை சம்பிரமமாகச் செய்து வருவார்கள்.

தங்களுடைய சொத்துக்களை மறந்தும் மதக்கடை பெயரால் எழுதுவார்களோ, ஒருக்காலும் எழுதமாட்டார்கள்.

காரணம் யாதெனில், மோட்சமுண்டென்று கைம்பெண்களுக்குச் சொல்லி சாமிகடை வியாபாரஞ்செய்வதே சாதனமாதலின் காணாதமோட்சத்திற்கு தங்கள் பணத்தை மறந்துஞ் செலவுசெய்யமாட்டார்கள்.