212 / அயோத்திதாசர் சிந்தனைகள்
மேற்சாதியொன்னுஞ் சட்டங்களை அக்கினிக்கு இரையாக்கிவிடுவார்களாயின் பாரதமாதா ஜோனாஸ்பர்க்கின் சட்டத்தை அன்றே சீர்திருத்திவிடுவாள்.
பாரதமாதா அத்தேசத்திற்கு சென்றிருக்கும் இந்தியர்களின் மீது கண்ணோக்கம் வைக்காதக்காரணம் யாதென்பீரேல், இந்தியாவில்தான் ஆயிரத்தெட்டு பொய்ச் சாதிப் பிரிவுகளை ஏற்படுத்திக்கொண்டு அதற்காதரவாய் சமய பேதங்களையும் வகுத்து ஒருவர் முகச் சின்னத்தை மற்றொருவர் பார்க்க விரோதமும், ஒருவர் சாதிப் பெயரை மற்றவர்கள் கேழ்க்க விரோதமும் பெருக்கிக்கொண்டு ஒற்றுமெய்க் கேட்டிலிருப்பவர்களிற் சிலர் செளத்து ஆபிரிக்காவென்னுந் தேசத்திற்கு நெடும்பிரயாணஞ்செய்து கப்பலில் போகும்வரையில் சாதிபேதச் செயல்கள் ஒன்றுமில்லாமற் சென்று அவ்விடம்சேர்ந்து சொற்ப துட்டு சம்பாதித்துக்கொண்டவுடன் ஐயர், முதலி, நாயுடு, செட்டி என்னுந் தொடர் மொழிகளைச் சேர்த்துக்கொண்டு சாதிப் பிரிவினைகளை உண்டு செய்து வருகின்றார்கள். அத்தேச வாசிகளாகிய போயர்களோ சாதிபேதமென்னுங் கொடூரச்செயலற்று சிறந்த குணம் அமைந்த ஒற்றுமெயுற்றவர்கள் அத்தகைய சுத்தகுணமும், பொருந்தகமெயும் வாய்த்தவர்கள் மத்தயில் ஒற்றுமெய்க் கேட்டையும், விரோத சிந்தையையும் உண்டு செய்வதான சாதிபேதப் பிரிவினைப் பெயர்களை பரவச் செய்துவருகிறபடியால் பாரத மாதாவிற்கே மனந்தாளாது இந்தியர்களை அதிக கொறூரத்துடன் அவ்விடம் விட்டு அகற்றுகின்றாள் போலும்.
நற்கருமத்திற்கு ஈடா சுகபலனையும், துற்கருமத்திற்கு ஈடாய் துக்கபலனையும் அநுபவிக்க வேண்டுமென்பது இந்தியர்களின் தன்மசாஸ்திர அநுபவமாதலின் துற்கருமத்திற்கீடாய் வருந் துக்கங்களை கவனியாது கருணைதங்கிய பிரிட்டிஷ் ராஜாங்கத்தோர் மீது குறைகூறுதலிலும், மஹாஜன சபையோர் முன்பு முறைகூறுதலிலும் யாதுபயனுண்டாம்.
தாங்கள் தொழுந் தெய்வக் கோவிலுக்கு ஏனைய மநுக்கள் வரப்படாதென்றும், தாங்கள் நீர் மொள்ளுங் குளங் குட்டைகளில் ஏனைய மநுக்கள் நீர் மொள்ளப்படாதென்றும், தங்களுக்கு சவரஞ் செய்யும் அம்மட்டர்களை ஏனைய மக்களுக்கு சவரஞ்செய்யப்படாதென்றும், தங்களுக்கு வஸ்திரம் வெளுக்கும் வண்ணார்களை ஏனைய மக்களுக்கு வெளுக்கப்படாதென்றும் தமிழ்பாஷைக் குடிகளில் ஆறுகோடி மக்களை அலக்கழித்து எது விஷயத்திலும் தலையெடுக்கவிடாமல் நசித்துவரும் காரணங்களை எந்த நீதிமான்களுங் கண்டறிந்து ஏழைத் தமிழர்களின் இடுக்கங்களை நீக்கி ஆதரித்தவர்களைக் காணோம்.
இந்துதேசப்பூர்வக்குடிகளாகும் ஏழை மக்களின் இடுக்கம் நீங்கும் வரையில் ஜோனாரஸ்பர்க்குமட்டிலுமல்ல மற்றுமுள்ள இடங்களில் சுயநலங்கேட்குஞ் சாதியிற் பெரியோரென்பவரின் இடுக்கங்களும் நீங்கப் போகிறதில்லை.
- 3:26; டிசம்பர் 8, 1909 -
97. ஆல்காட் மரணக்கிரியை
வினா: தியாசபி சங்கத்தின் இஸ்தாபகரும், அச்சபையின் நாயகருமாகிய கர்னல் ஆல்காட் துரையவர்கள் இறந்துவிட்டபோது அவரை பெளத்தரும், பிராமணருங்கூடி தகனஞ்செய்ததாகவும், அவர் பௌத்தரே என்றும், அவர் இறப்பதற்கு முன்பு கனந்தங்கிய ஆனிபீசென்ட் அம்மன் மூலமாகத் தங்களுக்குக் கடிதமெழுதி தனது சிரசருகில் பெளத்தக்கொடி நாட்டவும் தாங்கள் வந்திருந்து தகன காரியாதிகளை நடத்தவும் உத்திரவளித்ததாக சிலர் சொல்லுகின்றார்கள். இதன் விவரத்தை அடியேனுக்குத் தெளிவாகத் தெரிவிக்கும்படி கோறுகின்றேன்.
வே.ப. குப்புசாமி, வேலூர்.
விடை : கனந்தாங்கிய கர்னல் ஆல்காட் துரையவர்கள் இறந்து தகனங்செய்தபின்னர் அவரால் எழுதிவைத்த சங்கதிகளையும், நடந்த வர்த்தமானங்களையும் அச்சிட்டு வெளியிட்டிருக்கின்றோம். அவற்றை அடியில் அச்சிட்டுள்ள சரித்திரத்தால் அறிந்துக்கொள்ளலாம்.