அரசியல் / 213
கனந்தங்கிய கர்னல் எச்.எஸ் ஆல்காட் துரையவர்கள் மரணகாலத்தில் எழுதிவைத்த நீதிவாக்கியங்களும் அவர் தேக தகனமும்.
1907ஆம் வருடம் பெப்ரவரி மாதம் 2உ எழுதியது.
சகோதரர்கள் என் ஞாபகத்திற்காக மேன்மையான சகோதிர ஐக்கியமார்க்கத்தை பிரசங்கத்தாலும், விசுவாசத்தாலும் நடத்துங்கள். எனக்குப் பிரியமும் சமநிலையுமுள்ள சகோதிரர்கள், நான் உங்களிடம் வந்து உங்களை வாழ்த்தி விண்ணப்பிப்பதாவது உலகத்திலுள்ள சருவ சகோதரர்களுக்கும் (சத்தியத்தை) விட வேறு மதங் கிடையாதென்று விளக்கி அதை சகோதிரவாஞ்சையாலும், அன்பினாலும் நடத்துவீர்களானால் கலகமில்லாமல் உலகம் சீர்பெரும்.
எச்.எஸ். ஆல்காட்
கர்னல் ஆல்காட் துரையவர்கள் தனது அந்தியகாலத்தை உணர்ந்து பஞ்சசீலம் பெற்று பெளத்தமார்க்கத்தைச் சேர்ந்தவராதலின் தன்சிரசின் பக்கமாக பெளத்தகொடி பரக்க வேண்டுமென்றும், தன் பிரேதத்தை எடுக்குங்கால் முதலாவது பௌத்தர்களும், இரண்டாவது பிராமணர்களும், மூன்றாவது ஜோராஸ்டர்களும், நான்காவது கிறிஸ்தவர்களும், ஐந்தாவது மகமதியர்களும் வந்திருந்து தங்கள் தங்கள் தியானங்களை நடத்தி பிரேதத்தை தகனஞ்செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அஃதை வினவிய எம்.ஆர்.எஸ். ஆனிபீசென்ட் அம்மாள் சென்னை இராயப்பேட்டையில் இஸ்தாபித்துள்ள சாக்கைய முனிவர் சங்கத்தின் பொதுக்காரியதரிசி கஅயோத்திதாஸ பண்டிதருக்கு ஓர் கடிதம் எழுதி பௌத்தாள் கொடி ஒன்று கொண்டுவந்து அவர் சிரசினருகே வைக்கும்படி உத்திரவளித்ததுடன் பிரேதம் எடுக்குங்கால் பௌத்தர்கள் யாவரும் வந்திருந்து தகன காரியாதிகளை நடத்தும்படிக் குறித்திருந்தார்கள். காரியதரிசியார் அதனை ஏற்றுக்கொண்டு பௌத்தக்கொடி கொண்டுபோய் அவர் சிரசினருகே வைத்த பதின்மூன்றாம் நாளாகிய 1908 ஆம் வருடம் பெப்ரவரி மாதம் 17 ஆம் நாள் காலை 7-17 மணிக்கு மரணமடைந்த சங்கதியை காரியதரிசிக்குத் தெரிவித்தவுடன் பௌத்த சகோதிரர்கள் ஆல்காட் துரையவர்கள்தரும பாடசாலைப் பிள்ளைகள் 100-பெயர்கைகளில் 100 பௌத்தக் கொடிகளுடன் சென்று பிரேதம் எடுக்குமுன் முதலாவது பௌத்தர்கள் தியானமும், இரண்டாவது பிராமணர் தியானமும், மூன்றாவது ஜோராஸ்டர் தியானமும், நான்காவது கிறிஸ்தவர்கள் தியானமும் நிறைவேறியவுடன் 6-பிராமணர்களும், 4-பெளத்தர்களும் பிரேதத்தைத் தூக்கிக் கொண்டு நடக்க அவர்களைச் சுற்றிலும் பௌத்தக் கொடிகள் பரக்க சகோதிர ஐக்கியஞ்சிறக்க ஆனந்தகோஷத்துடன் சென்று தென்னந்தோப்பின் மத்தியில் தகனஞ்செய்து மறுநாட் காலையில் காரியதரிசி அவர்களால் தணலை பால்கொண்டவிக்க மற்றவர்களுங் கலந்து அஸ்திகளைப் பொருக்கி பகவன் நிருவாணமடைந்த பீடத்திற்கருகிலுள்ள கங்கை நதியில் விடுவதற்கு ஓர் பாகமும், சங்கத்துள் ஸ்தாபிக்க ஓர் பாகமும், சாக்கைய சங்கத்தார் ஓர் சிரியபாகமும் எடுத்துக் கொண்டு மற்றவைகளை சமுத்திரத்தில் கரைத்துவிட்டார்கள். கர்னல் எச்.எஸ். ஆல்காட் துரையவர்கள் புத்ததன்மத்தைச்சார்ந்து இத்தியாதி நன்மெகளை உலகத்திற் செய்துவந்தாரென்று அவர் மரணகாலத்தில் சகலருக்கும் விளங்கியது சொல்லாமற் செய்த நன்மெயின் பயனாம். சுபநமஸ்து.
உலகுபுக ழுத்தமராங் கர்ன லால்காட்
டுவமகிழ் வாலுண்மெ யுணர் மார்க்கம் புக்கி
பல மதமும் புத்ததன் மப்பிரினீ தென்று
பகுத்துணர்ந்து தத்துவசங்கத்தை நாட்டி
நலங்களெங்குமெண்ணூற்றித் தொன்மான்மூன்று
துணைச்சபைகள் தாபித்த தவத்தின் மிக்கோன்
நிலைகுலையா வாச்சிரம மடையார் தன்னில்
நிலைக்கவைத்து நீநிலத்தை நீங்கினாரே.
- 3:26; டிசம்பர் 8, 1909 -