உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 219

கோபாலனென வழங்கிவருவாராயின் பிரிவினையாக்கும் யாதோர்வகுப்பு இல்லையெனக் கருதி சகலரையும் இந்தியரென்றே கூறலாம். அங்ஙனமின்றி சாதித்தலைவர்களும் இருத்தல் வேண்டும். அவர்கள் அடக்கியாண்டசாதிகளும் இருக்க வேண்டும். ஆயினும் அவைகளைப் பிரிக்காமல் பழயபடி நாங்களே சுகத்தை அநுபவிக்கவேண்டுமென்றால் செல்லுமோ, ஒருக்காலுஞ் செல்லாவாம். இந்துக்களென்பது சாதித்தலைவர்களுக்குரிய பெயரென்றெண்ணியிருந்தார்கள்.

தற்காலம் நமது கனந்தங்கிய இராஜப்பிரதிநிதியைக் காணவந்தவர்களோ, இந்திய ஆங்கிலர்களென்றும், இந்திய கிறிஸ்தவர்களென்றும், இந்திய கத்தோலிக்குக் கிறிஸ்தவர்களென்றும் வெளி வந்துவிட்டார்கள். இவர்களுள் சாதியாசாரம் வைத்துக் கொண்டிருப்பவர்களையும், சாதியாசாரம் வைக்காமலிருப்பவர்களையும் என்ன இந்தியரென்று கூறலாம். சாதித் தொடர் மொழிகளையும் விடாமல் சேர்த்துக்கொள்ளல் வேண்டும். ஆனால் வேறு வேறாகப் பிரிக்கப்படாதென்றால் இஃது சுயப்பிரயோசன மொழியா அன்றேல் பொதுப்பிரயோசன மொழியா விவேகிகளே கண்டறியவேண்டியதுதான்.

இத்தியாதி கவுன்சல் கூச்சலில் நமது ஜைனமத சோதிரர்கள் வெளிதோன்றாமலிருப்பது மிக்க விசனமே. இத்தென்னிந்தியாவில் பூஸ்திதியுள்ளவர்கள் அனந்தம் பேரிருக்கின்றார்கள். கல்வியில் பி.ஏ., எம்.ஏ. முதலிய கெளரதா பட்டம் பெற்றவர்களுமிருக்கின்றார்கள். இவர்களுக்குள் யாரையேனுத் தெரிந்தெடுத்து கவுன்சல் மெம்பரில் சேர்த்துவிடுவார்களாயின் அக்கூட்டத்தாருக்குள்ளக் குறைகளை இராஜாங்கத்தோருக்கு விளக்கி சுகம்பெறச் செய்வார்கள். ஆதலின் ஜைன சோதிரர்கள் உடனே வெளிவந்து தங்களுக்குள் கவுன்சலுக்கு ஓர் பிரதிநிதியை அநுப்புவார்களென்று நம்புகிறோம்.

- 3:29: டிசம்பர் 29, 1909 -


103. இவ்வருஷம் லாகோரில் நடந்தது நாஷனல் காங்கிரசாமோ

இந்தியன் நாஷனல் காங்கிரசென்று கூடிய கூட்டங்களில் மகமதியர்களை சிலகால் சேர்க்கமுயன்றவர்கள் தற்காலம் இராஜாங்கத்தோர்களால் சேர்த்திருக்கும் மகமதிய அங்கங்களின் நியமனங் கண்டவுடன் மகமதியரையும், இந்தியரையும் இராஜாங்கத்தோர் வேறாகப் பிரித்து குறுக்கில் பெரிய ஓர் மதிலைப்போட்டுவிட்டார்களென்று கூறுங் கருத்தில் கவுன்சலர் நியமனத்தை இந்தியருக்கென்று பொதுவான உத்திரவு கொடுத்திருப்பார்களாயின் அந்தக் கவுன்சலில் மகமதியர்களையே சேர்த்திருக்கமாட்டார்களென்பது திண்ணம்.

காரணம், மகமதியரென்று பிரித்தவுடன் காங்கிரஸ் மெம்பர்கள் கவலைகொண்டு பேசுகிறபடியால் இவர்களை நாஷனல் காங்கிரஸ் கூட்டத்தாரென்று கூறுவதற்கே ஆதாரமில்லாமல் இருக்கின்றது.

ஏனென்பீரேல், சகலசாதியோரும் சுகம்பெறவேண்டும், சகலசாதியோரும் பிரிட்டிஷ் ஆட்சியில் பாகமடையவேண்டுமென்னும் நல்லெண்ணம் இவர்களுக்குள் இருக்குமாயின் மகமதியருக்குக் கொடுத்துள்ள ஓர் சுதந்திரத்தை கண்டிக்கமாட்டார்கள். அத்தகைய நல்லெண்ணம் இல்லாமலும் நாஷனல் காங்கிரசென்னும் ஐக்கியமில்லாமலும் வெறுமனே நாஷனலென்று கூறுங்கூட்டத்தாராதலின் மகமதிய சோதிரர்களுக்குக் கொடுத்துள்ள சொற்ப சுதந்திரத்தை மனத்துள் சகியாது காங்கிரசில் கூச்சலிட்டிருக்கின்றார்கள்.

தற்காலம் சென்னை ராஜதானியில் சேர்த்திருக்கும் கவுன்சல் மெம்பர்கள் 47 பெயர்களில் மகமதியர்களை 23 பெயரையேதேனும் நியமித்துவிட்டார்களா இல்லையே. 47 மெம்பர்களில் மகமதியர் இரண்டு பெயரைத்தானே நியமித்திருக்கின்றார்கள். இவ்விரண்டுபேர் நியமனத்தில் இவ்வளவு மனஞ்சகியாத காங்கிரஸ் கூட்டத்தார் இன்னும் 4 மகமதியரை சேர்த்துவிட்டால்