உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

224 / அயோத்திதாசர் சிந்தனைகள்

செய்யும் பொய்யனென்றறிந்து வாதியாகியக் கைம்பெண்ணை வரவழைத்து அவள் பக்கம் தீர்ப்பளித்திருக்கின்றார்.

இன்னும் இவைபோன்ற வியாஜ்ஜியங்களில் நியாயாதிபதிகளும், நியாயவாதிகளும் மெய் பொய்யறிந்து நடத்தியுள்ள தீர்ப்புகளை நிலைவாய்ந்த கட்டுகளிற் காணலாம்.

சாட்சிகளின் வார்த்தைகளைப் பெரும்பாலும் நம்பாமலே தங்கள் யுக்தியால் மெய் பொய் கண்டுபிடித்து நீதியளித்து கீர்த்திபெற்றார்கள்.

அவர்கள் சாட்சிகளை பெரும்பாலும் நம்பாமல் மெய்யறியும் வரையில் தேறவிசாரித்து தீர்ப்பளித்து வந்த காரணம் யாதெனில், மெய்யைச் சொல்லுவோனும், வானமறியபூமியறிய சுவாமியறிய நான் சொல்லுவதெல்லாம் நிஜமென்றான், பொய்யைச் சொல்லுவோனும் வானமறிய பூமியறிய சுவாமியறிய நான் சொல்லுவதெல்லாம் நிஜமென்கின்றான். இவ்விருதிரத்தாருள் எவன் பொய்யைச் சொல்லுகின்றான், எவன் மெய்யைச் சொல்லுகிறானென்று நியாயாதிபதி நம்பக்கூடும். ஆதலின் இருவரையும் தேறவிசாரித்து மெய்கண்டு நீதியளித்திருக்கின்றார்கள்.

பிஏ.எம்.ஏ. முதலிய கெளரதாபட்டங்களைப் பெறாமலே தாங்கள் கற்றுள்ள சொற்பக் கல்வியைக் கொண்டே விவேகவிருத்தி பெற்று மேலாய கீர்த்தியடைந்த பேர் அனந்தமிருக்கின்றார்கள்.

ஈதன்றி இரயில்வே கண்டுபிடித்தவரும், டிராம்வே கண்டுபிடித்தவரும், பொட்டகிராப் கண்டுபிடித்தவரும், லெத்தகிராப் கண்டுபிடித்தவரும், டெலிபோன் கண்டுபிடித்தவரும், கிராமபோன் கண்டுபிடித்தவரும் என்ன பட்டங்களைப் பெற்றிருந்தார்கள். தாங்கள் சாதாரணமாகக் கற்றக் கல்வியால் விவேக விருத்திப் பெற்று வித்தியாவிருத்தியால் தாங்கள் குபேரசம்பத்தாக வாழ்வதுடன் தங்கள் வித்தையைப் பின்பற்றினோரையுஞ் சுகம்பெறச் செய்திருக்கின்றார்கள்,

அவர்களைப்போல் பி.ஏ.எம்.ஏ முதலிய கெளரதா பட்டம் பெற்றவர்கள் சகலோபகாரிகளாக விளங்காது தாங்களும் தங்கள் குடும்பத்தோரும் பிழைக்கின்றார்களன்றி ஏனையோர் யாவரேனும் சுகம் பெறுகின்றார்களா, இல்லையே. இத்தகையப் பட்டம் பெற்றவர்களைக் கொண்டு கௌன்சல் மெம்பாரில் சேர்ப்பதினால் யாருக்கு என்ன சுகம் உண்டுசெய்வார்கள். தங்களுக்கு கொடுத்த பாடத்தை உருவுபோட்டு பெற்றுக்கொண்ட பி.ஏ, எம்.ஏ., கெளரதாபட்டங்களுடன் ஆனரேபில் பட்டத்தையுஞ் சேர்த்துக்கொண்டு தங்கள் சுகத்தைப் பார்ப்பார்களன்றி ஏனையோர் சுகத்தை கனவிலும் நினையாரென்பது திண்ணம். சாதியாசாரம் பெற்றவர்கள் கெளரதாபட்டம் பெறுவார்களாயின் யாருக்கு பலன் செய்வர் தங்களுக்கும், தங்கள் சாதியோர்களுக்கு மேயாம்.

இத்தியாதி செயல்களையும் நன்காராய்ந்து இராட்சியபாரஞ் செய்துவருங் கருணைதங்கிய ராஜாங்கத்தோர் பி.ஏ, எம்.ஏ. முதலிய கெளரதாபட்டம் பெற்றவர்களென்றும், பெறாதவர்களென்றும் பாரபட்சம் பாராது அவரவர்கள் யோக்கியதைக்கும், அந்தஸ்திற்கும், ஒழுக்கத்திற்கும் தக்கவாறு அந்தந்த வகுப்பினருள் கண்டெடுத்து ஆலோசனை சங்கத்திற்சேர்த்து அவரவர்கள் வகுப்பில் நேர்ந்துவருங் குறைகளை விசாரித்து ஏழைகளை ஆதரிப்பார்களென்று நம்புகிறோம்.

- 3:31: சனவரி 12, 1910 -


106. இராஜ துரோகிகளுக் காகிய சட்டம் சென்னையையும் சேர்த்துக்கொண்டது

பிரிட்டிஷ் அரசாங்கத்தோரை அந்தரங்கத்திற் கெடுக்கவேண்டுமென்று முயல்வோரையும், வஞ்சினத்தால் அரசை அழிக்க ஆயுதங்களை சேகரிப்போரையும், கெடு எண்ணத்தால் அந்தரங்கக் கூட்டங்கூடுவோரையும்,