உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xxviii / அயோத்திதாசர் சிந்தனைகள்


பழந்தமிழர்

ஒவ்வொரு நாட்டிலும் பூர்வீக அல்லது தொல்குடியினர் இன்னின்னவர் என்று சுட்டிக்காட்டுவது மரபாகும். அந்தப் பழங்குடியினர் அந்நாட்டில் பிறந்ததினால் பெருமைப்படுவது, அந்நாடு வளரப் பாடுபட்டதற்காக பாராட்டப்படுவது, அதனால் அம்மக்கள் உரிமை பெற்றவர்கள் என்று மதிக்கப்படுவதும் வழக்காகுமென்ற கருத்தை வலியுறுத்த வந்த அயோத்திதாசர், அப்பூர்வகுடி தமிழ் மக்கள் யார், அவர்கள் எவ்வாறு கெட நேர்ந்தது, எப்படி பிறர் அவர்களைக் கெடுத்தார்கள் என்பதையும் கூறுகிறார்.

“சுதேசிகள் என்பது தேசத்தின் சுதந்திரமுடையவர்கள், தேசப் பூர்வ குடிகள். தேசத்திலேயே பிறந்து வளர்ந்து அதன் பலனை அனுபவித்து வந்தவர்கள் (மற்றையோர்) காலத்திற்குக் காலம் இவ்விடம் வந்து குடியேறியவர்கள் பரதேசிகளே... இத்தேசப்பூர்வ குடிகளும், இத்தேசத்தை சீர்பெறச் செய்து அதன் பலனை அனுபவித்து வந்தவர்களும் யாரோ அவர்களையே பூர்வகுடிகள் என்றும் சுதேசிகள் என்றும் கூறத்தகும்...

அவர்கள் யாவரெனில் தமிழ் மொழியில் பிறந்து, வளர்ந்து தமிழ் மொழிக்குரியவர்களாக விளங்கும் பூர்வ திராவிடக் குடிகளேயாகும்.

“திராவிடராம் தமிழ்மொழிக்குரியவர்களுக்குள் சாதி பேதமென்னும் நூதன கட்டுப்பாட்டில் இருப்போர்களைப் பூர்வ குடிகள் என்று அழைப்பதற்கு ஏது கிடையாது. ஏனெனில் இத்தேசத்தில் வந்து குடியேறிய சாதிகளையும் மதங்களையும் உற்பத்தி செய்து வாழ்வோர்களுடன் சேர்ந்து தேசத்தை பாழ்ப்படுத்த ஆரம்பித்துவிட்டபடியினாலேயாம்.

இத்தேசத் திராவிடர்கள் அந்நிய சாதி கட்டுக்குள் அடங்கி விட்டபடியால் ஒற்றுமெய்க் கேடும் அவர்கள் மதத்தைச் சார்ந்துவிட்டபடியால் அவர்களால் ஏற்படுத்தியுள்ள சாமி என்னும் சோம்பலால் முயற்சி இல்லாமல் கலை, விவசாயம், வியாபாரம், முன்னேற்றம் யாவையும் பாழ்படுத்தி தேசத்தையும் சீர் கெடுத்துவிட்டார்கள்” (தமிழன் - 30.10.1912) என்று கூறுகிறார். அயோத்திததாசர் தமிழர் அனைவரையுமே திராவிடராக நினைக்கிறார். இவர்கள் ஒற்றுமையாக சாதிபேத வேற்றுமை பாராட்டாமலும் அந்நியக் கொள்கைகளை ஏற்காமலும் இருந்திருந்தால் ஆரியக் கொள்கைகள் தமிழகத்தில் பரவியிருக்காது. தமிழர்களான திராவிடர்களில் பலர் ஆரியர்களின் பிராமணியத்தைத் தழுவியதால் நாடு கெட்டுப் போய்விட்டது என்ற முடிவுக்கு வருகிறார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் கால சிந்தனையான அயோத்திதாசரின் இக்கருத்து இன்று பேசப்படுவது அவருக்குப் பெருமை சேர்ப்பதாகும்.

மக்களும் நோக்கங்களும்

மக்களும் அவர்தம் நோக்கங்களும் பெருமைப்படத்தக்கதாக இருக்க வேண்டும். மக்கள் அந்நிலையையெய்த அவர்களுக்குள் ஒரு வழிகாட்டி அமையவேண்டும். மக்களுள் அவர் மா மனிதராக, அறிவாற்றல் பெற்ற தலைவராக, நன்னெறியைக் கடைப்பிடிப்பவராக இருந்தால் அவரை வணக்கத்திற்குரியவராக மக்கள் ஏற்பார்கள். அவரைக் கடவுளென துதிப்பார்கள். இத்தகைய பண்பாளர்கள் இல்லாமற்போனால் இயற்கைகூட உதவாமல் போய்விடும் என்று சொல்ல வந்த அயோத்திதாசர் கூறுகிறார்:

“.... நிலம் போக்கி வானம் பொய்யாமைக்குக் காரணம் சீலமிக்க ஞானிகள் இல்லாமையாம், ஞானிகள் இல்லாமைக்குக் காரணம் நீதியும் நெறியும் வாய்மையும் நிறைந்த விவேகிகள் இல்லாமையாகும். விவேகிகள் இல்லாமைக்குக் காரணம் சதுர்வித உபாயமும் அன்பு மிகுந்த அரசர்கள் இல்லாமையே. அன்பு மிகுந்த அரசர்கள் இல்லாமைக்குக் காரணம் கல்வி, அறிவு, அருள், ஒழுக்கம், நன்னெறி, ஒற்றுமையுள்ள குடிகள் இல்லாததால்...” (தமிழன் -19.6.1907)