பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 239

பறையடிக்கவிடாமல் தடுக்கும் பொறாமெயுள்ளோர்களும், இரண்டுகாணி பூமியை வைத்துக்கொண்டு சீவிக்கப்பொறுக்காத பொறாமெயுள்ளோர்களும், நல்ல ஆடைகளையும் ஆபரணங்களையும் அணைந்துவருவதை நேரிற் காணப்பொறுக்காத பொறாமெய் உடையோர்களும் சாதிபேதமற்ற ஏழை கூலிகளுக்காக இதங்கிப் பாடுபடுகின்றார்களென்பது கனவிலும் நம்பக்கூடியதன்று.

  சாதிபேதமற்ற ஏழைக்கூலிகள் சாதிபேதம் வைத்துள்ளோர்வசம் படாதபாடுபட்டு பிரிட்டிஷ் ஆட்சியின் கருணையால் சற்று சீவனுண்டாகி அன்னிய தேசங்களுக்குக் கூலிகளாகச்சென்று ஆனந்தமாக உழைத்து பொருள் சேகரித்து இவ்விடம் சுகசீவிகளாக வந்து வாழும் வாழ்க்கையைக் காண்போர் மனஞ் சகியாது, மற்றுங் கூலிகளைக் குடிகெடுத்து கோலுங்குடுவையும் கையிற்கொடுக்கப் பார்க்கின்றார்கள். தங்கள் சொந்த கலாசாலைகளில் சேர்ந்து வாசிக்கக் கண்டு பொறுக்காதவர்கள் தங்கள் தொழிற்சாலைகளுக்கு கூலிகள் கிடைக்காமல் போகின்றதென்று கூறுவது பத்திரிகைகளின் கூற்றேயன்றி தொழிற்சாலையோர் முறைபாடன்றாம். ஆதலின் கூலிகளைப்பற்றி இராஜாங்கத்திலும், பத்திரிகைகளிலும் பேசுவோர் சாதிபேதம் வைத்துள்ள கூலியாட்களுக்குப் பரிந்துப் பேசுவதே நலமாகும். அங்ஙனமின்றி சாதிபேதமில்லாக் கூலியாட்களுக்காய்ப் பரிந்து பேசுகிறோமென்று அபிநயிப்பது ஆடுகள் நனைவதென்று புலிகள் புரண்டழுவதற் கொக்கும்.
  யதார்த்தத்தில் சாதிபேதமற்ற ஏழைக் குடிகளின் பேரில் இதக்கமுள்ளவர்களாயின் இத்தேசத்தில் சாதிபேதம் வைத்துள்ளோர் சாதிபேதமில்லாக் கூட்டத்தோரை மனிதவகுப்போரென பாவிக்காது மிருகங்களினும் கீழாக நடாத்திவரும் செயலை அகற்றி மனிதர்களாக பாவிக்கச் செய்யவேண்டும். சுயதேசத்திற் செய்யவேண்டிய சீர்திருத்தங்களை செவ்வனே செய்யாது புறதேசத்திற் சென்று சீவிப்போர்மீது சிங்கநாதம் செய்வது சீர்கேட்டிற்கே மூலமாதலின் கருணை தங்கிய இராஜாங்கத்தோர் சாதிபேதமற்றக் கூலிகளை எங்கு செல்வதற்குத் தடைசெய்யாதிருக்கக் கோருகிறோம்.
- 3:39; மார்ச் 9, 1910 -


118. யாருக்குக் கல்விவிருத்தி செய்ய வேண்டும் பொல்லார்க்கின்றி நல்லோர்க்கேயாம்

பொல்லார் யாவர். தங்களைப்போல் எதிரிகள் சுகம்பெறலாகாதென்றெண்ணுவோரும், தங்களைப்போல் எதிரிகள் கல்வியும் நாகரீகமும், பெறலாகாதென் றெண்ணுவோரும், ஆயிரங் குடிகள் கெட்டு நாசமடைந்தாலுமடையட்டும், தங்கள் குடி சுகம்பெற்றால் போதுமென்று எண்ணுவோரும், வஞ்சினத்தால் வதைக்க முயல்வோரும் பொறாமெயால் குடிகெடுக்க முயல்வோரும், பேராசையால் கூடிக் கெடுக்க நாடுவோரும் பொல்லார்களென்னப்படுவர்.

  நல்லோர்கள் யாவர். தாங்கள் கெடினும் எதிரிகள் சுகம்பெற வேண்டுமென்றெண்ணுவோரும், தாங்கள் கற்றக் கல்வியைப்போலும் நாகரீகத்தைப்போலும் எதிரிகளும் பெறவேண்டுமென்று எண்ணுவோரும், தங்கள் குடி கெட்டாலும் நூறுகுடிகள் சுகமாக வாழ்கவேண்டுமென்று எண்ணுவோரும், வஞ்சினமற்றோரும், பொறாமெயற்றோரும், பேராசையற்றோரும், நல்லோர்கள் என்னப்படுவர்.
  உலகில் தோன்றியுள்ள மக்களுக்கும் சீவராசிகளுக்கும் உபகாரிகளாக விளங்கும் யாவரையும் நல்லோரென்றும் நியாயரென்றுங் கூறப்படும். உலகில் தோன்றியுள்ள மக்களுக்கும் சீவராசிகளுக்கும் அபகாரிகளாக விளங்கும் யாவரையும் பொல்லாரென்றும் தீயாரென்றும் கூறப்படும்.
  இத்தியாதி சீவகாருண்யமற்ற படுபாவிகளாம் பொல்லார்களுக்குக் கல்விவிருத்திச் செய்வதினால் வித்தியா கர்வமாம் மமதை தோன்றிவிடுகின்றது.