அரசியல் / 241
ஓர் அங்கமாக சேர்த்துள்ளதைக் கண்டு மிக்க ஆனந்திக்கின்றோம்.
அதாவது ஓர் ராஜாங்க காரிய சங்கங்களிற் சேர்ப்போர் இராஜகாரண காரியாதிகளில் மிக்கப் பழகினவர்களும், வம்மிஷவிருத்தியாய் செல்வத்தைக் கையாடி வந்தவர்களும், தன்மதம் புறமதமென்றும், தன்சாதி புறசாதியென்றும் பாரபட்சம் பாராதவர்களும், எப்போதும் கனந்தங்கிய சீவனமும், சுகவாழ்க்கையில் இருந்தவர்களுமாகிய மரபினோர்களையே கண்டெடுத்து அரச ஆலோசனை சங்கத்திற் சேர்ப்பது அழகும் சிறப்பும் என்னப்படும்.
அதுபோலவே சகல அந்தஸ்தும் கனமும் அமைந்த பொப்பிலி மகாராஜா அவர்களுக்கு எக்சிகூட்டிவ் மெம்பர் அலுவல் அளித்ததை மிக்கவானந்தமாகக் கூறியுள்ளோம்.
அங்ஙனமின்றி ஐயா, மெத்தவும் வாசித்தவர், ஆனால் சுயப்பிரயோசனத்தை நாடுவதில் சோம்பலில்லாதவர், பொருளாசையில் பேரவாக்கொண்டவர், ஆயிரங்குடிகள் கெட்டாலும் அரசன் கெட்டாலும் தன் குடும்பத்தைமட்டிலும் பாதுகாக்க முயல்கின்றவர்களாகிய சுயநலப்பிரியர்களுக்கு எக்சிகூட்டிவ் மெம்பர் அலுவலை நியமித்திருப்பார்களாயின் துக்கிக்கவேண்டியதாகும். இராஜாங்கத்தில் சுயநலப்பிரியரைச் சேர்க்காது பொதுநலப்பிரியரை சேர்த்ததுகண்டு பூரிப்படைந்தோம்.
- 3:39; மார்ச் 9, 1910 -
120. வஸ்துக்களின் வரிகளுயர்த்தல்
நமது கருணைதங்கிய இராஜாங்கத்தார் சாராயம், வெள்ளி, மண் தைலம், புகையிலை இன்னான்கின்பேரிலும் வரிகளை இன்னும் அதிகப்படுத்துவதாகக் கேழ்விப்படுகிறோம். அவற்றுள் மநுகுலத்தாருக்கு சீர்கேட்டை உண்டுசெய்யும் சாராயம், புகையிலை இவ்விரண்டிற்கும் வரிகளை அதிகப்படுத்துவது சுகமேயாம். மநுக்களுக்கு உபகாரமாக விளங்கும் வெள்ளியின் பேரிலும், மண்தைலத்தின் பேரிலும் வரிகளை அதிகப்படுத்தாமலிப்பது சுகமாம்.
எவ்வகையிலென்னில், தற்காலம் வெள்ளி சகாயமாகக் கிடைக்கின்ற படியால் ஒருரூபா, அரைரூபா, கால்ரூபா வென்னும் வெள்ளி நாணயங்கள் சேதமில்லாமல் வழங்கிவருகின்றன. பிரிட்டிஷ் ஆட்சியால் கார்க்கப்பட்டக் குடிகளும் வெள்ளிப் பாத்திரங்களையும் நகைகளையும் விசேஷமாகக் கையாடிவருகின்றார்கள். வெள்ளிப்பாத்திரங்களும், வெள்ளி நகைகளும் சகலவகுப்பார் வீடுகளிலும் விசேஷமாகப் பரவிவருவதினால் பிரிட்டிஷ் ராஜநீதியின் சிறப்பும், அவர்களது கருணையும் தெள்ளற விளங்குகின்றது. மநுக்களின் சிறந்த வாழ்க்கையே! இராஜாங்க சிறப்பாதலின் வெள்ளி நாணயத்தின்மீது வரி விதிக்காமலிருக்க வேண்டுகிறோம்.
மண்தைலத்தின் சுகமோ தினேதினே வரணா சம்பாதிக்கும் கூலியாளும் ஒருகாசு தைலமேனும் வாங்கிக் குடுக்கையில் வைத்துத் தீபமேற்றி வெளிச்சத்தில் புசித்து சுகித்து வருகின்றார்கள். இதேதீபத்தை ஆமணக்கு நெய்யில் பெரும்பாலும் எரித்துவந்தவர்கள் அத்தகைய பூமிவிருத்திசெய்து எள்நெய், ஆமணக்கு நெய், தென்னெய் மற்றுமுள்ள விளைபொருள்களை விருத்திசெய்து வந்தவர்கள் யாவரும் தாங்களும் பூமிவிருத்திகளை செய்யாது மற்று ஏழைகளையும் அப்பூமிகளை அநுபவிக்கவிடாது கெடுத்துவிட்டு இராஜாங்க உத்தியோகங்கள் பெற வேண்டியதற்காய் பிஏ.எம்.ஏ பாஸ் செய்ய ஆரம்பித்துக் கொண்டார்கள். அதனால் ஆமணக்கு நெய் விருத்தியுங்கெட்டு அதினால் எரியுந் தீபமும் ஏற்றப்படாமல் மண்தைலத்தைக் கொண்டே ஏழைகள் யாவரும் தீபமேற்றி வெளிச்சத்தில் உலாவிவருகின்றார்கள். இத்தகையாய் கனவான்கள் வீடுகள் முதல் ஏழைகள் வீடுகள் வரையிலும் இருளடையாமல் தீபமேற்றி வெளிச்சத்தில் புசித்து, வெளிச்சத்தில் உலாவவைத்து பிரிட்டிஷ் ஆட்சியை பிரகாசிக்கச் செய்து அதன் கருணையை விளக்கிவருகின்றபடியால் சருவ சீவராசிகளுக்கும் வெளிச்சத்தை யளித்து காக்கும் மண்தைலத்தின் மீது வரிவிதிக்காமலிருக்க வேண்டுகிறோம்.