சிறப்புரை / xxxi
நண்பர் ஆரிங்டன் என்ற மற்றொரு ஆங்கிலேயரிடம் வேலையாக இருந்த அயோத்திதாசருடைய பாட்டனாரான கந்தசாமி என்பவர் திருக்குறளையும் நாலடி நானூறு போன்ற சில ஓலைச் சுவடிகளையும் கொண்டு போய் கொடுத்திருக்கிறார். அதைப் பெற்றுக் கொண்ட எல்லீஸ் தனக்கு தமிழ் கற்றுக் கொடுக்க வந்து கொண்டிருக்கும் பிராமணர்களிடம் கந்தசாமி கொடுத்ததாகக் கூறியிருக்கிறார். அப்போது அவர்கள் கந்தசாமி தீண்டாதவர் என்றும் சாதிப்பாகுபாட்டையும் கூறினார்கள். எல்லீஸ் மீண்டும் கந்தசாமியை அழைத்து மேலும் சில விளக்கங்கள் கேட்க கந்தசாமி கீழ்வரும் விபரங்களைக் கூறியதாக அயோத்திதாசர் தன் பத்திரிகையில் எழுதியுள்ளார்:
“எங்கள் குலத்தோருக்கும் இவர்கள் குலத்தோர்க்கும் ஏதோ பூர்வ விரோதம் இருக்கிறது. அதனால் இவர்களை இழிவாகக் கூறி துரத்துவது வழக்கம். எங்கள் குலத்தோர் வீதிக்குள் இவர்கள் வந்துவிடுவார்களானால் இவர்களை துரத்தி உங்கள் பாதம் பட்ட இடம் பழுதாகிவிடும் என்று சொல்லிக் கொண்டு இவர்களைத் துரத்தி இவர்கள் வந்த வழியிலும் சென்ற வழியிலும் சாணத்தைக் கரைத்து தெளித்துச் சாணச் சட்டியையும் உடைத்து வருகிறார்கள்” (தமிழன் - 10.3.1909) என்று அயோத்திதாசர் எழுதுவதைப் பார்க்கும்போது இந்தப் பகைமை 19ஆம் நூற்றாண்டு வரை நடைமுறையில் இருந்திருப்பதாகத் தெரிகிறது. இவரது பாட்டனார் கந்தசாமி சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு 1785 வாக்கில் வாழ்ந்தவராகும். தமிழ்நாட்டின் தீண்டாமை வரலாற்றிற்கு இச்செய்தி மிக முக்கியமாகக் கருதப்பட வேண்டும். இந்த இரு வகுப்பினரும் இருவேறு கலாச்சாரப் பண்புடையவர் என்பதையும் வேறொரு நிகழ்ச்சியின் மூலம் அயோத்திதாசர் எடுத்துக் கூறுவதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
“1892-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை விக்டோரியா ஹாலில் மகாசபை கூடிற்று. தலைமை தாங்கிய பி. அரங்கைய நாயுடு அவர்கள் ஜில்லாக்களின் குறைகளைச் சொல்லிக் கொண்டே வந்து “பறையர் பிராபலம்” என்னும் வாக்கியத்தை அடித்துவிட்டு இவர்களை பற்றி வேண்டிய வரையில் சில துரைகள் எழுதியிருக்கிறார்கள். ஆதலின் இவர்களின் குறைகளை நாம் ஆலோசிப்பது யாது பயனுமில்லை என்று கூறினார். சபையின் செயலாளர் எம். வீரராகவாச்சாரி அவர்கள் தலைவரை நோக்கி நீலகிரியிலிருந்து அக்குலத்தோருக்கு ஒரு பிரதிநிதி வந்திருக்கிறார் என்று கூறினார். உடனே நான் எழுந்து இக்குலத்தோரைப் பற்றி சில துரைமார்கள் உபகாரம் செய்கிறார்கள் என்று கூறி எல்லோரும் மவுனம் சாதிப்பது அழகன்று. உங்களாலேயே இக்குலத்தோர் தாழ்த்தப்பட்டு சீர்குலைந்து இருக்கின்றபடியால் நீங்களே இவர்களை சீர்திருத்தி சுகம்பெற செய்ய வேண்டும் என்றேன். அதற்கு தலைவர், இது உள்சீர்திருத்தச் சங்கமாதலின் இவர்களால் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று கேட்டார். நான் இக்குலத்தாரிலுள்ள வைணவர்களையும், சைவர்களையும் அந்தந்த கோயில்களுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றேன். எல்லோரும் ஏகமயமாய் நின்று அப்படி கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று கூச்சலிட்டார்கள். அப்போது தஞ்சாவூர் பிரதிநிதி சிவராம சாஸ்திரி அவர்கள் உங்கள் குலத்தோர்க்கு மதுரை வீர சாமி, காட்டேரி சாமி, கருப்பண்ண சாமி கொடுத்திருக்கிறோம். சிவன் சாமியும், விஷ்ணு சாமியும் உங்கள் குலத்தோர்க்கு உரியதல்ல என்று ஆட்சேபித்தார். நான் அவரை நோக்கி ஐயா, அப்படியிருக்குமாயின் உங்கள் சாமி எங்களுக்கு வேண்டாம். இக்குலத்து சிறுவர்களுக்கு கிராமங்கள் தோறும் கல்விச் சாலைகளை வைத்து இலவசமாக கல்வி கற்கவைக்க வேண்டும் என்றேன். மேலும் கிராமவாசிகளுக்கு வெறுமனே உள்ள நிலங்களைக் கொடுக்க வேண்டும் என்று கூறினேன்” (தமிழன் - 21.10.1908) என்று அயோத்திதாசர் நிலைமையை விளக்குகிறார்.
இக்கூட்டம் சென்னை மகாஜன சபையாரால் கூட்டப்பட்டது. இக்கூட்டத்தில் “ஏரி மரமத்துக்கள், கிணறுகளின் விருத்திகள், ரோடுகளின் மரமத்துக்கள், மேலும் வெளி ஜில்லாக்களின் சீர்திருத்தங்களைப் பேசுவதுடன்