உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 267

சிற்றரசரையும் வசப்படுத்திக் கொண்டு பூர்வ பௌத்தமார்க்க மேன்மக்களால் வகுத்திருந்தத் தொழிற்பெயர்கள் யாவையும் சாதிப்பெயர்களென மாற்றி தங்கள் போதனைக்கிசைந்து தங்களுக்கு வேண்டிய உதவிபுரிந்து வருகிறவர்கள் யாவரையும் உயர்ந்த சாதியென வகுத்துக்கொண்டு இவர்களது பிராமண வேஷந்தெரிந்து அடித்துத் துரத்தி யாதொரு உதவியும் புரியாது குடிகள் யாவர்களுக்கும் இவர்களது மித்திரபேதங்களையும் வஞ்சகக் கூத்தையும் வேஷத்தையும் பறைஞ்சினவர்களைத் தாழ்ந்த சாதிகளெனக் கூறிப் பலவகையாலுந் தலையெடுக்கவிடாது பாழ்படுத்தி வந்தபடியால் வித்தியா விருத்திக்கு உரியவர்கள் பாழ்பட, வித்தைகளும் பாழ்பட்டு விவசாய விருத்தியுள்ளோர் பாழ்பட, பூமிகளும் பாழடைந்து, கல்வியுடையார் பாழ்பட, கலைநூற்களின் விருத்தியும் பாழ்பட்டு, பௌத்ததன்ம சாதுசங்கங்கள் பாழ்பட, ஞானிகளென்னும் பெயர்களும் பாழ்பட்டு என்றும் அழியா இந்திரதேசச் சிறப்பும் பாழடைந்து போய்விட்டது.

இதன் ஆதாரபீடம் இத்தேசமெங்கும் கொண்டாடிவந்த இந்திர விழாக்கள் என்று பாழடைந்ததோ அன்றே சத்தியதன்மங் குன்றி அசத்திய தன்மம் பரவிவிட்டது, அசத்தியதன்மமே அனந்தங் கேடுகளுக்கு ஆதாரமாயின.

இத்தேசப் பூர்வக் குடிகளின் புண்ணியபலத்தால் பிரிட்டிஷ் ஆட்சியார் தோன்றி அவர்களும் புத்ததன்மமாகவே தங்கள் அரசாட்சியை நடத்தி வருகின்றபடியால் அதன் பலன் கிளைத்து வித்தியாவிருத்தியும், விவசாய விருத்தியும், கல்வி விருத்தியும் பெருகிக்கொண்டுவருகின்றது. இத்தகைய விருத்திகாலத்திலும் ஒற்றுமெய்க் கேட்டிற்கு மூலமாகும் சாதிகர்வத்தையும், வித்தியாவிருத்தியின் கேட்டிற்கு மூலமாகும் மதகர்வத்தையும் விடாது பற்றிக்கொண்டிருக்கின்றபடியால் பிரிட்டிஷ் ஆட்சியார் செய்துவரும் வித்தியாவிருத்திகளும், விவசாய விருத்திகளும் முன்னுக்குவராது திகைத்து நிற்கின்றது. இத்தகைய விருத்தியின் கேட்டிற்கும் தேச சிறப்பின் குன்றுதலுக்குங் காரணம் சிலர் தங்களை உயர்ந்த சாதி உயர்ந்த சாதியென்று அண்ணாந்து சோம்பலையும், பொறாமெயையும் வஞ்சினத்தையும் பெருக்கிக்கொள்ளுவதும், சிலர் தங்களைத் தாழ்ந்தசாதியோரென்று ஒப்புக்கொண்டு நசுங்குண்ணுவதுமேயாம். மநுகுலத்தவருள் தாழ்ந்தவர்களென்றும் உயர்ந்தவர்கள் என்றும் கூறித்திரியும் ஒற்றுமெய்க்கேடே இந்தியதேச சீர்கேட்டிற்கு அடிப்படையாகும். ஆதலின் இந்திய தேச சோதிரர்கள் யாவரும் சுயக்கியானத்தில் நின்று மநுகுல சகோதிர வாஞ்சையைப் பெருக்கி இராஜவிசுவாசத்தில் நிலைக்க வேண்டுகிறோம்.

- 4:7: சூலை 27, 1910 -


145. கனந்தங்கிய இந்திரதேச கவர்னர் ஜெனரல் மிண்டோ பிரபு அவர்களும் கனந்தங்கிய சென்னை ராஜதானி கவர்னர் ஆர்த்தர் லாலி பிரபு அவர்களும்

இந்த இரண்டு பிரிட்டிஷ் ஆட்சி தலைவர்களும் இந்தியாவை விட்டு நீங்கி இவ்வருடம் இங்கிலாந்துக்குப் போய்விடுகிறபடியால் இவர்களது பெயரும் கீர்த்தியும் என்றும் அழியாது இந்தியாவில் பிரகாசிக்கத்தக்கப் பேருபகாரஞ் செய்துப்போவார்களென்று நம்புகிறோம்.

அதாவது, ஏறக்குறைய ஆயிரவருடங்களாக தாழ்ந்த சாதியோர்களென நசுக்கப்பட்டுவரும் பூர்வ சாதிபேதமற்ற திராவிடக் குடிகள்மீதுக் கிருபாநோக்கம் வைத்து தற்கால பிரிட்டிஷ் ஆட்சியின் கருணையால் முன்னுக்கு வந்து விவேக மிகுத்தவர்களாயிருப்பவர்களிற் சிலரைக் கண்டெடுத்து (லெஜிஸ்லேட்டிவ் கவுன்சல்) சங்கத்தில் சேர்த்துவிட்டுப் போய்விடுவார்களாயின் ஆயிரவருடகாலம் அல்லலடைந்திருந்த அறுபது லட்சத்திற்கு மேற்பட்டக் குடிகளை அல்லலிலிருந்து ஆதரித்து முன்னேறச் செய்தவர்கள்