அரசியல் / 273
பிரோட்டிஸ்டான்ட் பாதிரிகள் கருணையால் கல்வியுங் கைத்தொழிலுங் கற்று சீர்பெறுவார்கள். தங்களைப்போல் சாதிபேதமற்ற மகமதியர்களைச் சேருவார்களாயின் தற்காலம் அவர்கள் சீர்திருத்திவரும் செய்கைகளில் கிஞ்சித்து சீர்பெறுவார்கள். தங்களைப்போல் சதா சாதிபேதமற்ற பௌத்த சமாஜத்தைச் சேருவார்களாயின் களங்கமற்ற சிந்தை உடையவர்களாய் நன்முயற்சி, நல்லூக்கம், நற் கடைபிடியினின்று வித்தை, புத்தி, யீகை, சன்மார்க்கம் பெருகி சுகச்சீர்பெற்று சகல சம்பத்தும் அநுபவிப்பார்களென்பது சத்தியம்.
இத்தகைய மூன்று சங்கங்களில் ஒன்றைச்சாரது ஆளுமற்று ஆதாரமுமற்ற ஆரியசமாஜத்திற் சேருவார்களாயின் தற்கால பிரிட்டிஷ் ஆட்சியில் சற்று சீர்பெற்றுவரும் சுகமுங்கெட்டு சுயவாட்சியிற் பிழைக்கும் சுவாதீனமுங் கெட்டு அவர்களால் சீர்கெடச் செய்திருப்போர்களை பொய்யாக அடிமைகளென்று கூறிவரும் வாக்கியத்தை மெய்யாகவே அடிமைகளென்று சொல்லும் அநுபவத்திற் கொண்டு வந்துவிடுவார்கள்.
- 4:9: ஆகஸ்டு 10, 1910 -
149. தங்களுக்குத்தாங்களே பிராமணரென சொல்லிக்கொள்ளுவோர் காப்பி ஓட்டல்களைக் கவனித்துப் பாருங்கள்
சுதேசிகளெனக் கூட்டமிட்டு சுதேசிகளை ஒற்றுமெக்குஞ் சீருக்குங் கொண்டு வரப்போகின்றோம் என்போரும் நாஷனல் காங்கிரஸ் கமிட்டியாரும் பிராமணரென்போர் வைத்துள்ளக் காப்பி ஓட்டல்களைக் கவனித்தார்கள் இல்லை போலும். யாவராயிருப்பினும் துட்டுகொடுத்தாலே காப்பிக் கொடுப்பார்களன்றி துட்டு கொடாமல் காப்பி கொடுக்கமாட்டார்கள். அவ்வகை துட்டு கொடுத்து தங்கள் தாகத்திற்குக் காப்பி கேட்கும், கிறிஸ்தவர்கள் பஞ்சமர்கள், மகமதியர்கள் இம்மூவகுப்பாருக்கும் அவ்விடத்தில் உள்ளே வரக்கூடாதென்று தங்கள் ஓட்டல் முகப்பில் பலகையில் எழுதித் தொங்க வைத்திருக்கின்றார்கள்.
மேற் குறித்துள்ள மூன்று வகுப்பாரும் காப்பி செய்வதிலும், காப்பி குடிப்பதிலும் மிக்க அநுபோகசாலிகள், தற்காலங் காப்பி வோட்டல் வைத்திருப்பார்களோ, தயிர் மோரில் தண்ணீர் கலப்பதற்கும் உப்பிடுவதற்கும் அநுபோகஸ்தர்களன்றி காப்பி செய்வதில் இவர்களுக்கு அத்தகைய அநுபோகங் கிடையாது. இக்காப்பி என்னும் நீருக்கு உரியவர்கள் ஆங்கிலேய துரைமக்களே. அவர்களிடங் காப்பி பானஞ் செய்து அநுபோகப்பட்டவர்கள் கிறிஸ்தவர்களும் பஞ்சமரென்பவர்களுமேயாகும். இத்தகையோரைத் தங்கள் ஓட்டலுக்கு வந்து காப்பி சாப்பிடுங்கோளென்று சொல்லி வருந்தினாலும் வரமாட்டார்கள். காரணம் காப்பிபானஞ் செய்யும் அநுபவம் இவர்களுக்குத் தெரியமாட்டாது என்பதேயாம். மேற்குறித்துள்ள மூவர்களும் அவர்களுடைய ஓட்டலுக்குப் போகவேண்டிய அவசியமுமில்லை, போகவுமாட்டார்கள்.
இஃதநுபவமாயிருக்க அம்மூவரையுஞ் சுட்டி தங்கள் காப்பி ஓட்டலுக்கு வரப்போகாதென்று பலகையில் எழுதிவைத்திருப்பதை ஆலோசிக்குங்கால் அவர்களுக்குள்ள பொறாமெ குணமும், அன்பற்றச் செயலும், காருண்யமில்லாமெயும், உள்ளங்கை நெல்லிக்கனிபோல் அறிந்துக் கொள்ளலாம். துட்டு பெற்றுக்கொண்டு காப்பி கொடுப்பதற்கில்லா கருணையற்ற போர்ட் போட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு கிஞ்சித்து சுயராட்சியங் கொடுத்து விட்டால் ஊருக்குள் வைத்திருக்கும் குழாய் நீரையும் மொண்டு குடிக்கவிடாமல் ஒவ்வொரு குழாய்களின் அருகிலும் மேற்படி மூன்று வகுப்பார்களையும் வரப்படாதென்றே பலகைகள் அடித்துவிடுவார்கள்.
தற்போது கிறீஸ்தவர்கள், பஞ்சமர்கள், மகமதியர்களென்றுக் குறிப்பிட்டு காப்பி வோட்டல் பலகைகளில் எழுதிவைத்துள்ளவைகள் சாதிசம்மந்தச் செயலாயின் மற்றயக் குறவர், வில்லியர், சக்கிலியர், தோட்டிகளென்னும் நான்கு வகுப்போரும் வரலாமோ, வரக்கூடாதோ விளங்கவில்லை. அவர்களும்