பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

290 / அயோத்திதாசர் சிந்தனைகள்

உத்தியோகஸ்தர்களுக்குக் கொடுத்துள்ள சொற்ப அதிகாரங்களையும் எடுத்துவிடவேண்டியதே விவசாயவிருத்திக்கு சுகமாகும். காரணமோவென்னில், பூமியை உழுது பண்படுத்தி விவசாயத்தை விருத்தி செய்வோர் சாதிபேதமற்ற ஏழைக்குடிகளேயாகும். அவர்களே பூமியில் கஷ்டப்படும் உழைப்பாளிகளுமாவர். அத்தகைய உழைப்பாளிகளுக்கோர் இடுக்கங்களும் நேராது கார்க்கும்படி வேண்டுகிறோம்.

- 4:19: அக்டோபர் 19, 1910 -


161. பூமியுள்ளவர்களுக்கே இன்னும் பூமி கொடுக்கலாமா பூமியில்லாதவர்களுக்கே கொடுக்கலாமா

பூமியில்லாதவர்க்கே கொடுப்பது பயனைத்தரும். அதனினும் பூமியினிடம் உழைத்துப் பாடுபடும் உழைப்பாளிகளுக்குக் கொடுப்பது மிக்க மேலாயதேயாம். அதாவது, பூமி வேண்டுமென்று விண்ணப்பம் அநுப்புவோரை தாசில்தாரேனும் முநிஷிப்பேனும் பார்வையிடாது ஆங்கிலேயக் கலைக்கட்டர் துரைமக்களே நேரிலழைத்துப் பார்வையிட்டு தோளின்மீது ஏரைத் தூக்கிச்சென்று பூமியுடன் பாடுபடும் உழைப்பாளிக்கே கொடுப்பாராயின் பூமிகளும் தஞ்சைகளாகி நற்பலனளிப்பதுடன் ஏழைக்குடிகளும் விருத்திக்கு வந்து சுகசீர்பெருவார்கள். அங்ஙனமின்றி மகமதியர் துரைத்தனத்தில் எடுத்தாளும் எண்பது ஏக்கருள்ள ஜமீன்தார், எழுபது ஏக்கருள்ள மிராசுதாரென்னும், பூமியுள்ளவர்களுக்கே பூமியைக் கொடுப்பதினால் அவர்களும் உழைக்காது அவர்கள் குடும்பத்தோர்களும் உழைக்காது உழைப்பாளிகளைப்பார்த்து அவர்கள் கொடுத்து அவர்கள் பாடுபட்டு விருத்திசெய்யும் தானியங்களை தங்கள் பண்டிகளில் சேர்த்துக்கொண்டு உழைப்பாளிகளை எலும்புந் தோலுமாக்கிக் கொன்று வருகின்றார்கள்.

இத்தகையாய் பூமியுள்ளவர்களுக்கே பூமியைக் கொடுத்துவருவதினால் பூமிகள் பாழடைவதுடன் ஏழைக்குடிகளும் சீரழுந்து போகின்றார்கள். இத்தேசத்தில் தற்காலம் ஏற்படுத்திக்கொண்டுள்ள சாதிபேத அக்கிரமச் செய்கைகளினால் பூமிகளின் விருத்திகளோ நாசமடைந்து வருகின்றது. இந் நூதனசாதிக்கட்டுக்கதைகளில் பிச்சையிரந்துண்டவன் பெரியசாதி, பூமி உழுதுண்பவன் சிறியசாதியென வகுத்துள்ளபடியால் பூமியை உழுது பாடுபடுவோர் நாளுக்குநாள் நசிந்து பாடுபடவும் பூமியின் விவசாயம் குறைவுபடவும் பஞ்சம் நிறைவுபடவுமாகின்றது.

தாசில்தாரும் பெரியசாதியார், முனிஷிப்பும் பெரியசாதியார், ஜமீன்தாரும் பெரியசாதியோராயிருந்து பூமியை உழுது பண்படுத்துவோர் சிறிய சாதியோராயிருப்பாராயின் அவர் படும் கஷ்டத்தை யாரறிவரோ அறியோம், அதனுடன் தாசில்தாரருக்கேனும், அவரது பந்துக்களுக்கேனும், முனிஷிப்புக்கேனும், முநிஷிப்பு சொந்தக்காரருக்கேனும், கணக்கனுக்கேனும், கணக்கன் சொந்தக்காரர்களுக்கேனும் கிஞ்சித்து பூமிகளிருந்துவிடுமாயின் உழுது பயிரிடும் சிறியசாதி என்போன் படும்பாட்டை இன்னும் சொல்ல வேண்டியதில்லை. “ஏந்துங் கைகளுக்குப்பிள்ளை” யென்பதுபோல் பெரியசாதியெனப்பெயர்வகித்துள்ளோர் ஏவல்கள் யாவற்றையும் சிறியசாதியெனப் பெயர் பெற்றுள்ளோன் செய்தேதீரல்வேண்டும் அவ்வகைச் செய்யாமற் போவானாயின் பெரியசாதி என்போர்களும், பெரிய உத்தியோகஸ்தர்களும் ஒன்று சேர்ந்துக் கொண்டு அவனையும் அவன் சொத்துக்களையும், அவன் சந்ததிகளையும் பாழ்படுத்திவிடுகின்றார்கள்.

ஆதலின் ஒவ்வோர் ஜில்லாக்களிலும் பூமியை உழுது பண்படுத்தும் உழைப்பாளிக் குடிகள் பத்து இருபது பெயர்களுக்கு சொந்தபூமிகளே இருந்து உரைத்து சீர்திருத்திவருவார்களாயின் கணக்கர்களின் காரணங்களையும், முனிஷிப்புகளின் முரண்களையும், தாசில்தாரர்களின் தாருமாறுகளையும் ஓர்கட்டாயிருந்து கலைக்ட்டர் துரையிடம் தைரியத்துடன் சென்று தங்கள் குறைகளைச் சொல்லி நிவர்த்தித்துக்கொள்ளுவார்கள்.