xxxiv / அயோத்திதாசர் சிந்தனைகள்
ஒழுக்கமும் வளர்ந்த மக்களின் ஒற்றுமையால்தான் நல்ல அரசு அமையும் என்று அவர் நினைக்கிறார்.
அறிவும் ஒழுக்கம் போன்றவைகளும் நல்ல நூல்களால்வருவனவாகும். இவை கற்றறிந்த ஒழுக்க சீலர்களால் படைப்பனவாகும். சிறந்த நூல்கள் கடவுள்களால் கொடுக்கப்பட்டிருந்தாலும் அவை மக்கள் சீரடைவதற்காகப் பயன்பட வேண்டும். ஆனால் கடவுள்களால் அல்லது அவர்கள் வாயிலாக வழங்கப்பட்டதாகக் கூறும் வேதங்களும் சாஸ்திரங்களும் யாருக்கு எதற்கு எப்படி பயன்படுகிறது என்ற கேள்வியை எழுப்புகிறார்.
“வேதங்களும் சாஸ்திரங்களும் எதற்கு? மக்களை சீர்திருத்தி செவ்வைப்படுத்துவதற்கேயாம். அத்தகைய வேதம் என்பது சகல மக்களுக்கும் பொதுவாக இருப்பது நலமா, சில மக்கள் அவற்றை பார்க்கவும் கூடாது, கேட்கவும் கூடாது என்பது நலமா. அந்த வேதங்களை அறிந்த கடவுளுக்கு தனது சிருஷ்டிகளாம் மக்கள் மீதும் மக்களுருவில் மாற்றமின்றி சிருஷ்டித்தும் கொடுத்துள்ள வேதத்தைத் கூறுபோடலாமோ. அவ்வகைப் பிரித்திருப்பாராயின் அவரை ஓர் கருணை மிகுந்த கடவுள் என்னலாமோ. அத்தகை கருணையற்ற வேதத்தை சீர்திருத்த முதல் நூலென்றும் பாவிக்கலாமோ, கருணையற்ற கடவுளைப் பின்பற்றியவர்களும், கருணையற்றவேதத்தைப் போதிப்போர்களுக்கும், அதனைக் கேட்போர்களுக்கும் கருணை என்பது ஏதேனும் இருக்குமோ, கனவிலும் இருக்காது என்பதே அனுபவ காட்சியாகும்” (தமிழன் - 16.10.1912) என்று அவர் நடைமுறையில் இருக்கும் வருண- சாதி ஒழுக்கத்தைச் சுட்டிக் காட்டுகிறார்.
மக்கள் வாழ்க்கையில் எப்படியோ தோன்றிவிட்ட வருணபாகுபாடும் சாதி வெறியும்தான் மக்களுக்குள் ஒற்றுமையின்மையை வளர்த்துவிட்டது என்று எண்ணுகிற அவர், ஆன்மீகத்திற்காக எழுந்த நூல்கள் அறிவை வளர்க்கப் பயன்படவில்லையே என்றும் கூறுகிறார். எனவே வேதங்களாலும் சாஸ்திரங்களாலும் பகுத்தறியும் தன்மையை இழந்து விட்டார்கள் என்று கருதுகிறார். வாழ்க்கையின் மிக அத்தியாவசியமான தொழிலான விவசாயத்தைக் கூட சாஸ்திரத்தின் பேரால் இழிவாக எண்ண வைத்து விட்டவர்களை விவேகிகள் எனக் கருத முடியுமோ என்று கேட்கிறார்:
“தற்கால இந்துக்களின் தர்ம சாஸ்திரமே விவசாய கேட்டை உண்டாக்கிவிட்டது. மநுதர்ம சாஸ்திரம், பத்தாவது அத்தியாயம் 84வது வசனம் ‘சிலர் பயிரிடுதலை நல்ல தொழில் என்று நினைக்கிறார்கள். அந்தப் பிழைப்பு பெரியோர்களால் நிந்திக்கப்பட்டது’ என்னும் இவ்வசனத்தை சாதிபேதம் பார்ப்போர்கள் மதிப்பார்களா? அதில் தங்கள் கருத்தை செலுத்துவார்களா? அதனினும் இவ்வாக்கியத்தை வேத விளக்கம் என நம்பி நடக்க வேண்டும் என்பதும் விதி...”
வேதத்தை நம்பி நடப்பவர்களே இந்துக்களாவார்கள் என்பதும் அன்னோர் முடிவு. விவசாய விருத்திக்குக் கேடாயுள்ள இத்தகைய சாஸ்திரத்தை எழுதினோரும் வாசிப்போரும் கேட்போரும் நடப்போரும் எத்தகைய விவேகிகள் என்பது சொல்லாமலே விளங்கும். இத்தகைய சாஸ்திரங்களை ஓர் தர்மசாஸ்திரம் என்று எண்ணி நடக்கும் கூட்டத்தோரால் இந்த தேசத்து விவசாயத் தொழில் சீர்கெடுமா சீர்பெறுமா? (தமிழன்-7.5.1913)என்று கேட்கிறார்.
மக்களின் உயிர்வாழ்வுக்கு உணவு என்பதும் அந்த விவசாயம் நிந்திக்கப்பட்டது ஏன் என்றும் கேட்கிறார், அத்தகைய சிறந்த விவசாய தொழில் செய்வோரை சூத்திரர் என்றும், தாழ்த்தப்பட்டோர் என்றும் கூறுவோரை அறிவாளிகளாகக் கருத முடியுமா என்பது அவருடைய கேள்வியாகும். பகுத்தறியும் பண்பில்லாதவர் இதனை ஏற்று நடைமுறைப் படுத்துவது தமிழினத்திற்கே பேரிழுக்காகும். இதற்கு வேதங்களை ஆதாரமாகக் காட்டுவது அதைவிட அறிவீனமாகும் என்று அயோத்திதாசர் எண்ணுகிறார். “பிரம்மாவின் முகத்தில் பிறந்த பிராமணர்களும், அவர்கள் ஓதுதற்கு தவளை வயிற்றிலும், நாயின் வயிற்றிலும், கழுதை வயிற்றிலும் பிறந்தவர் எழுதி வைத்த வேதங்களும்