உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 293


165. உள் சீர்திருத்தம் செய்ய இயலாதோர் புறசீர்திருத்தஞ் செய்வார்களோ

இல்லை, “பழயன கழிதலும் புதியன புகுதலும் வழுவலகால வகையினானே” எனக் கூறியுள்ள மேன்மக்கள் வார்தைகளையும், அன்னோர் செயல்களையும் உணராது தங்கள் தங்கள் சாதனங்களையே மேலாகக் கொண்டு ஒற்றுமெய்க் கேட்டை மேலு மேலும் பெருக்கி வருகின்றார்கள்.

அதாவது, வைஷ்ணவ ரென்றால் விஷ்ணுவென்னும் ஒருவரையே தொழுவோர்கள். அவர்களுக்குள் ஒற்றுமெயும் ஆறுதலும், அன்புமின்றி வடகலை வைஷ்ணவரைக் கண்டால் தென்கலையோர் சீறுகிறதும், தென்கலை வைஷ்ணவர்களைக் கண்டால் வடகலையோர் சீறுகிறதும் இவ்விரு வரைக்கண்டால் விசிஷ்டாத்துவிதர் சீறுகிறதும், விசிஷ்டாத்துவிதரைக் கண்டால் மேலிருவருஞ் சீறுகிறதுமாகியச் செயலால் “கடவுளைத் தொழுவதினுங் கலகம், சாமியைத் தொழுவதிலுஞ் சண்டை” என்னும் பழமொழியுறுதிபெற, மண்டையோடு மண்டையுருளுவதும், மாளாத கலகம் பெருகுவதும், நாளோயாது நீதிசங்கமேறுவதுமாகியச் செயலால் ஒருவருக்கொருவர் அன்பு கெட்டு ஆறுதலற்று சீர்கேட்டிற்கு வழி உண்டாகின்றதே அன்றி சீர்திருத்தத்திற்கு ஏதுவில்லாமற் போகின்றது.

இவர்கள் இவ்வாறிருக்க சைவர்களென்போர் சிவனென்னும் ஒருவரையே தொழுவோர்கள். அவர்களுள் கொட்டைக் கட்டி தீட்சை பெற்ற சைவர்கள் ஒன்று; கொட்டைக்கட்டாது தீட்சைபெறா சைவர்கள் ஒன்று; விபூதியைக் குழைத்துப்பூசும் சைவர்கள் ஒன்று, குழைத்துப் பூசா சைவர்கள் ஒன்று; இலிங்கங் கட்டும் சைவர்கள் ஒன்று; மாமிவதம் புசியா சைவர்கள் ஒன்றும் எனும் மற்றும் பதினாறு சைவங்கள் வேறுண்டென்று கூறி ஒருவருக்கொருவர் ஒற்றுமெ யற்றிருப்பதுமன்றி வைஷ்ணவர்களுக்கும் சைவர்களுக்கும் உண்டாகிவரும் கண்டன வாக்குவாதங்களால் ஒருவருக்கொருவர் பத்திரிகைகளில் வைதும், பாடல்களால் வைதும் சீறிச் சினந்து மண்டையோடு மண்டையுருண்டு அதிகாரிகளிடம் அபராதமளித்து தங்களுக்குள்ள நேயத்தையும், அன்பையும், ஆறுதலையுங் கெடுத்துக்கொண்டு எக்காலும் கோபக்குறியில் நின்று தங்களுக்குத்தாங்களே ஒற்றுமெயைக் கெடுத்துக் கொள்ளுகின்றார்கள்.

வேதாந்திகளோ, வேதத்தின் அந்தத்தை விசாரிப்பவர்களென்று பெயர். அவ்வேதத்தையோ, அவர்கள் வாசித்தது கிடையாது. அவ்வேதங்களை அவர்கள் வாசிக்கவுங்கூடாது. இத்தகையோர் வேத அந்த கூட்டத்தோரென வெளி தோன்றியிருக்கின்றார்கள். இவர்களுக்குள் சருவமும் பிரமமயமென்பார் சிலர். சருவமும் மித்தை என்பார் சிலர். சாதியாசாரம் இருக்கவேண்டும் என்பார் சிலர். சாதியாசாரம் கூடாதென்பார் சிலர். விக்கிரகாராதனை செய்து கொண்டே வேதாந்திகளென்பார் சிலர். குறுக்குப்பூச்சு நெடுக்குப்பூச்சு நெற்றிகளில் பூசிக்கொண்டே வேதாந்திகளென்பார் சிலர். சாந்தத்தைப் பெருக்க வேண்டுமென்னும் இவர்கள் தருக்க சாஸ்திரம் படிந்து வித்தியா கர்வத்தால் உறுக்கப் பார்த்துக் கொள்ளுகிறார்கள் சிலர். வேதாந்திகளென்று தோன்றிய இவர்களுக்குள் மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசையில் ஒன்றையேனும் விட்ட ஒருவரும் கிடையாது. இவர்கள் மற்றவர்களை தூஷிப்பதும், மற்றவர்கள் இவர்களை தூஷிப்பதுமாகிய செயல்களால் ஒருவருக்கொருவர் விரோத கட்சியைப் பெருக்கி வீணே துக்கத்திற்கு ஆளாகின்றார்கள்.

மதசம்மதங்களினால் இத்தியாதி ஒற்றுமெய்க்கேடும் ஆறுதலின்மெயும் பொருள் விரயமும் இருக்குமாயின் இனி சாதி சம்மதங்களில் என்ன சீர்திருத்தமும் யாது சுகமும் உண்டென்பதை விசாரிப்போமாக.

பாப்பானென்னும் வகையில் அனந்த சாதிகள் இருக்கின்றார்கள். இவர்களுக்குள் ஒருவருக்கொருவர் பெண் கொடுக்கலும் வாங்கலும் கிடையாது. மற்றய சாதிப்பிரிவிலும் இவ்வகையேயாம். இத்தியாதி ஒற்றுமெய்க் கேட்டிற்கு உறுதிபீடமாகும் சாதியினாலும் இத்தேசத்தோர்க்கு