உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 307

கேவலமுள்ளவர்களெல்லாம் வித்தை, புத்தி, யீகை, சன்மார்க்கம் நிறைந்தோர்களைப் பஞ்சமரென்றும், பறையரென்றுந் தூற்றிப் பாழ்படுத்தவும், பாழடையவுமுள்ளது. அப்பெயர்கள் யாவரால் வைக்கப்பட்டதென்று உணராக் குறைவேயாம்.

நீங்கள் என்ன விவேக மிகுதியால் உயர்ந்தசாதியானீர்கள், நாங்களென்ன விவேகக் குறைவால் தாழ்ந்த சாதி யானோமென்னும் விசாரிணை இல்லாது சத்துருக்களின் போதனைகளை மித்துருக்களின் போதனைபோல் எண்ணி நடப்பதினால் பஞ்சமரென்னும் பெயரை மட்டிலுமா கொடுப்பார்கள் இல்லை. பதங்குலைந்தவர்கள், பாழாய்ப் போனவர்கள் என்னும் பெரும் பெயர்களையுங் கொடுப்பார்கள். காரணந் தட்டிக்கேழ்க்கா நிலையாம். வைத்தியசாலையைப் பெற்றுக்கொள்ளும்படி சென்ற பாதிரிகள் எங்களிடம் பஞ்சமக் கிறீஸ்தவர்களுமில்லைப் பாப்பாரக் கிறீஸ்தவர்களுமில்லை எல்லோரும் சுதேசக் கிறீஸ்தவர்களே இருக்கின்றார்களென்று கூறி தங்கள் தன்மத்தை நடாத்தியிருப்பார்களாயின் பஞ்சமக் கிறீஸ்தவர்களென்னும் பெயரே பதிவின்றி பரந்திருக்கும். அங்ஙனங் கூறாது கிறிஸ்தவர்களுக்குள்ளும், பஞ்சமக் கிறீஸ்தவர்களுண்டென்னும் பாகுபாடை ஏற்றுக் கொள்ளுகிறபடியால் இத்தேசத்து விவேகமிகுத்தப் பூர்வ பௌத்தக் குடிகளைப் பஞ்சமர்களென்று இழிவு கூறுவது போதாது ஞான நெறிமிகுத்தக் கிறீஸ்துவையும் இழிவுக்கு உள்ளாக்கிவிடுகின்றார்கள். இந்துக்களுக்குள்ளாகப் பாப்பார இந்து, பஞ்சம் இந்துவென்னும் பெயர்கள் தற்காலப் பத்திரிகைகளில் வெளியாவது போல், பாதிரிகள் கூடி கிறீஸ்தவர்களுக்குள்ளும் பஞ்சமக் கிறீஸ்தவர்கள் பாப்பாரக் கிறீஸ்தவர்கள் என்னும் பேதத்தை நிலைக்கச் செய்கின்றார்கள் போலும். இத்தகைய பேதத்திற்குக் காரணம் பாதிரிகளாகவே இருப்பார்களாயின் கிறீஸ்துவின் போதனையாம் தன்னைப்போல் பிறரையும் நேசியுங்கோளென்னும் மொழியை மறந்தும் போதிப்பவர்களாகும். அவரது போதனையை மறந்தவர்களாயின் அக்கிறீஸ்துவையும் மறந்தவர்களென்றே கூறவரும். ஆதலின் பாதிரிகளே, இப்பேதங்களை அகற்றி ஆதரிப்பார்களென்று நம்புகிறோம்.

தற்கால சுதேசிகளுக்கு முநிசிபல் கமிஷனர் உத்தியோகங்களைக் கொடுப்பதினால் அவர்களுக்கு விரோதிகளாகியப் பூர்வ சுதேசிகளைத் தலையெடுக்கவிடாமல் நாசப்படுத்தவும் தாங்கள் மட்டிலும் சுகமடையவும் பார்த்துக்கொள்ளுகின்றார்கள். ஐரோப்பியர்களுக்கு முநிசிபல் கமிஷனர் உத்தியோகங் கொடுப்பதாயின் தங்களைப் போல் மற்றவர்களையும் மநுகுலத்தோரென்றெண்ணி சகல மக்களுக்கும் சமதையான சுகமளித்து வருகின்றார்கள். இவ்விருதிரத்தோர்களில் ஐரோப்பியர்களே பெருந்தொகையுள்ளவர்களாயிருந்து தேசத்தின் சகல காரியாதிகளையும் நடத்துவார்களாயின் சகல குடிகளும் சமரச சுகம்பெற்று விருத்தியடைவார்கள், தற்கால சுதேசிகள் அதிகரிப்பார்களாயின் பூர்வ சுதேசிகள் பாழடைவதுடன் தேசமும் சீரழிந்துபோமென்பது திண்ணம் திண்ணமேயாம்.

- 4:27; டிசம்பர் 14, 1910 -


175. பூர்வ திராவிட பௌத்தர்களும் சென்னை சென்செஸ் கமிஷனரும்

தற்காலம் எடுக்கும்படி ஆயத்தஞ்செய்யுங் குடிமதிப்பின் ஆலோசினையில் தொதுவர், குரும்பர், கோத்தர், மகமதியர், கிறீஸ்தவர், பாரசீகர், சீக்கர் இவர்களை வெவ்வேறாகப் பிரித்துக் கணக்கெடுப்பது போல் இந்துக்கள், இந்துக்களல்லாதவர்களாயிருப்போரையும் வேறாகப் பிரிப்பதாயின் ஏழைக்குடிகள் சகலரும் சுகமுற்று சீரடைவார்கள்.

இந்துக்களின் சாதி ஆசாரங்களுக்கு உட்படாதவர்களும், அவர்களால் தீண்டப்படாதவர்களென்று விலக்கியுள்ளவர்களும், சகல சுதந்திரங்களுக்கும்