பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

310 / அயோத்திதாசர் சிந்தனைகள்

துறந்து பிரிட்டிஷ் ஆட்சியில் விசுவாசம் வைத்து பிரிட்டிஷ் ஆட்சியே என்றும் நிலைத்து ஆளுகைபுரியவேண்டி சிந்திப்பார்களென வந்திக்கின்றோம்.

- 4:28; டிசம்பர் 21, 1910 -


177. காங்கிரஸ் கமிட்டியாரும் அவர்கள் செய்பலனும்

இப்போது காங்கிரஸ் கமிட்டியாரென வழங்கிவருதலை ஆதியில் நாஷனல் காங்கிரசென வழங்கிவந்தார்கள். இத்தகைய நாஷனல் காங்கிரசென்னும் பெயர் வழங்கிவந்ததேயன்றி செய்கையில் ஒன்றையுங் காணோம். பிராமணர்களெனச் சொல்லிக்கொள்ளுவோர்களே அதனிற் பெருந்தொகையினராய் இருந்ததுமன்றி ஏழைகளின் இடுக்கத்தை ஏற்காமலும், அவர்கள் சுகங்களை நோக்காமலே இருந்துவிட்டார்கள்.

காரணமோவென்னில், தாங்கள் பொலிட்டிகல் விஷயமாகப் பாடுபடுகிறபடியால் சோஷியலில் பிரவேசிக்கலாகாதெனக் கூறி தங்கள் தங்கள் சுயகாரியங்களையே பார்த்துவந்தார்கள். அத்தகையப் பட்சபேதச் செயலால் தாங்களுமோர் சுகத்தைக்காணாது ஏழைகளையும் ஈடேற்றாது வீணிற் பணங்களை விரயஞ்செய்துவிட்டு ஐயங்கார் இங்கிலீஷ் நன்றாய் பேசினார், ஐயர் இங்கிலீஷ் நன்றாய் பேசினார், ராவ் இங்கிலீஷ் நன்றாய் பேசினாரென்று ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு உற்சாகமாடியப் பலனே அன்றிவேறு பலன் ஒன்றுங் கிடையாவாம்.

சென்னை மகா ஜன சபையோரேனும் எழிய ஜனங்களுக்கு கல்விசாலைகளும், பூமிகளும் அளித்து ஆதரிக்கவேண்டுமென்னுமோர் ரெக்கமெண்டு பத்திரங் கவர்ன்மெண்டாருக்கு அனுப்பி ஏழைகளுக்குக் கிஞ்சித்துப் பிரயோசனமேனும் செய்துவைத்தார்கள். இந்நாஷனல் காங்கிரஸ் கமிட்டியில் படா, படா ஆசாமிகளெல்லோருஞ் சேர்ந்துள்ளார்களென்னும் வதந்தியேயன்றி அவர்களால் ஏழைமக்களுக்கோர் ஈடேற்றமுங் கிடையாது.

அங்கங்கு கூடிய கூட்டங்களில் வருஷாவருஷம் காங்கிரஸ் கமிட்டியார் செலவிட்டுள்ள பணங்களைக்கொண்டு ஒவ்வோர் கலாசாலைகளையேனுங் கைத்தொழிற்சாலைகளையேனும் நாட்டியிருப்பார்களாயின் சுதேசமக்கள் எவ்வளவோ விருத்திப் பெற்றிருப்பார்கள். அங்ஙனமின்றி இராஜாங்கக் கனவிலேயே ஆழ்ந்து நின்றுவிட்டபடியால் ஆலோசனை சங்கத்தில் சகல வகுப்பு பெருந்தொகையான லெஜிஸ்லேட்டிவ் கவுன்சிலர்களது நியமனங் கேட்டு விழித்தும் பழய சொற்பனத்திலேயே மயங்குகின்றார்கள்.

இனியேனும் அம்மயக்கத்தினின்று விழித்து தாங்களெல்லோரும் இராஜாங்கத்தை நோக்கிக் கேழ்க்கவேண்டிய சங்கதிகள் யாவையும் லெஜிஸ்லேட்டிவ் மெம்பர்களிடம் ஒப்படைத்துவிட்டு தங்கள் காங்கிரஸ் முயற்சிகளை கல்வியிலுங் கைத்தொழிலிலும் விடுத்து தேசமக்களை வித்தையிலும் புத்தியிலும் விருத்தியடையச் செய்வார்களென்று நம்புகிறோம்.

- 4:28; டிசம்பர் 21, 1910 -


178. கிருஷ்ண சாமி ஐயரும் டிப்பிரஸ் கிளாசும்

சென்றவாரம் கனந்தங்கிய ஆமெக் துரையவர்களின் அக்கிராசனத்தின்கீழ் ஜஸ்டிஸ் கிருஷ்ணசாமி ஐயரவர்கள் பிரசங்கித்தபோது டிப்பிரஸ் கிளாசென்போர் அவர்களது கன்மத்தினால் அவ்வகையாகப் பிறந்துள்ளார்களென வற்புறுத்திக் கூறியிருக்கின்றார்கள்.

அவர் கூறியவாறு கன்மத்தினால் தாழ்ந்த வகுப்பில் பிறந்திருப்பது யதார்த்தமாயின் இவரென்ன கன்மத்தினால் அவர்களை உயர்த்திவிடப் போகின்றார். உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்பது அவனவன் கன்மத்தாலென்னில் இவர்கள் செய்யும் கன்மத்தால் அவர்கள் உயர்ந்தசாதி ஆவர்களோ. இவர்கள் செய்யும் கன்மத்தால் அவர்கள் உயர்த்தப்படுவதாயின் அவர்கள் செய்த கன்மத்தால் தாழ்ந்த வகுப்பாகப் பிறந்துள்ளார்களென்னும் மொழி ஆபாசமாகவே முடியும். உயர்ந்த சாதியென வகுத்துக்கொண்டுள்ளவர்களின்