312 / அயோத்திதாசர் சிந்தனைகள்
180. சென்சசும் வடநாட்டார் அபிப்பிராயமும்
தற்காலம் எடுக்க உத்தேசித்திருக்கும் குடிமதிப்புக் கணக்கில் இந்துக்களென்றே சகலரையும் எழுதவேண்டுமென்று சிலர் கூறுவதும் மகமதியர்களும், கிறீஸ்தவர்களும் மத்தியில் வந்து குடியேறியுள்ளவர்களாதலின் அவ்விருவரையும் நீக்கிவிட்டு மற்றவர் யாவரையும் இந்துக்களென்றே எழுதவேண்டுமென்று சிலர் கூறுவதுமாகியக் கூச்சல் பலப்பத்திரிகைகளிலும் வெளியாகிக்கொண்டுவருகின்றது.
இத்தியாதி அபிப்பிராயங்களில் கிறிஸ்தவர்களையும் மகம்மதியர்களையும் நீக்கி மற்றவர்கள் யாவரையும் இந்துக்களென்றெழுதவேண்டுமென்பவர்கள் மகம்மதியர்களுக்கு சற்றுமுன்பு வந்து குடியேறிய ஆரியர்களை மட்டிலும் ஏன் குறிக்கவில்லை. ஆரியர்கள் இத்தேசத்திற்கு நூதன மதஸ்தர்களும், நூதன உருவர்களுமாயிருக்க அவர்களைக் குறிக்காது மகம்மதியர்களையும், கிறிஸ்தவர்களையுமட்டிலுங் குறித்துள்ளக் காரணமென்னை. பின்புவந்து குடியேறிய மகம்மதியர்களும், கிறிஸ்தவர்களும் இத்தேசத்தோருடன் சகல பாவனைகளிலும் சம்பந்தித்திருக்கின்றார்கள். ஆரியரென்பவர்களோ இத்தேசத்தோருடன் யாது பாவனைகளிலும் கிரியைகளிலும் சம்மந்தித்தது கிடையாது. அநுபவமோவென்னில், தங்களது சுபகாரியங்களில் ஆரியர்களை மட்டிலும் சேர்த்துக்கொண்டு காரியாதிகளை நடத்திக்கொள்ளுவார்கள். மரண காலங்களிலும் மற்றவர்களுக்கு அறிக்கையிடாது தங்களுக்குள்ளவர்களே பிரேதத்தை எடுத்துச்சென்று தகனித்துவிடுவார்கள். ஏதேனுமோர் தருமஞ்செய்யினுந் தங்கள் கூட்டத்தோருக்குமட்டிலும் செய்வார்களன்றி ஏனைய ஏழைகளுக்கொரு காசு ஈய்யமாட்டார்கள். ஓர் ஆரியரேதேனும் ஓர் உத்தியோகத்தில் அமருவாராயின் மற்றுமுள்ள உத்தியோகங்களுக்கெல்லாம் தங்கள் கூட்டத்தோரை சேர்த்துக்கொள்ளுவாரன்றி இத்தேசக்குடிகளை சேர்க்கமாட்டார். இத்தேசத்தோருள் யாவரேனும் ஆரியர்களுக்கு முன்பு அவ்விடமிருக்கின் அவர்களை அடியோடு ஓட்டிவிடும் வழிதேடுவார்கள்.
இத்தியாதி விஷயங்கள் யாவற்றினும் சம்மந்தப்படாதவர்களும் தூரவே விலகி நிற்பவர்களும் இத்தேசக்குடிகளை தன்னவர்களென்று பாவிக்காது அன்னியர்களாக விரோதிப்பவர்களுமாகிய ஆரியர்களை இத்தேசக் குடிகளைப்போல் பாவித்துக் கொண்டு சகல பாவனைகளிலும் சம்மந்தித்துள்ள மகம்மதியர்களையும், கிறிஸ்தவர்களையும் நீக்குவதாயின் அவர்களை எம்மதத்தோரென்று கூறலாம். இந்துமதத்தோர் என்பாராயின் இந்து என்பவன் யார், அவனெத்தேசத்திற் பிறந்தவன், எங்கு வளர்ந்தவன், அவனால் எத்தேசத்தோர் எவ்வகையாய சீர்திருத்தம் அடைந்திருக்கின்றார்கள். இந்துவென்பவன் தோன்றி சீர்திருத்திய காலவரைகளும், சரித்திரங்களும் ஏதேனுமுண்டா, அவன் பிறந்து வளர்ந்த சரித்திரங்களும், அவனால் போதித்த தன்மங்களும், அவனால் சீர்திருத்தமடைந்த கூட்டத்தோருமிராது இந்துமதம், இந்துமதமென்றால் எந்தமதமென்று கண்டறியலாம். புத்தர்தோன்றி சீர்திருத்தமடைந்த கூட்டத்தோ ரிருக்கின்றார்கள். அவருடைய போதனைகளும் இருக்கின்றது. அவரது சரித்திரங்களும் இருக்கின்றது.
கிறீஸ்தென்பவர் தோன்றி சீர்திருத்தமடைந்த கூட்டத்தோரும் இருக்கின்றார்கள். அவருடைய போதனைகளு மிருக்கின்றது. அவரது சரித்திரமும் இருக்கின்றது. மகம்மது என்பவர் தோன்றி சீர்திருத்தமடைந்த கூட்டத்தோரும் இருக்கின்றார்கள். அவருடைய போதனைகளு மிருக்கின்றது. அவரது சரித்திரங்களும் இருக்கின்றது. இந்து என்பவனுக்கு தேசமும் கிடையாது. பெற்று வளர்த்த தந்தைதாயருங் கிடையாது. அவன் போதித்த தன்மமும் இன்னதென்று கிடையாது. அவனால் சீர்திருத்திய மக்கள் கூட்டமுங் கிடையாது. அவனது சரித்திரமுங் கிடையாது இத்தகைய யாதுமற்றோன் மதம் இந்துமதமாம். எந்த மதத்திற்கும் சொந்தமில்லாத மதம் இந்துமதமென்னில் அவையாருக்குரியவை யாரவற்றைத் தழுவுவர்.