பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 323

சீரழிந்துவருவது பிரத்தியட்சப்பிரமாணமாகக் கண்டும் சாதியாசாரத்தால் சுகமுண்டென்று கூறியது என்னமதியோ விளங்கவில்லை. பெரிய சாதி சிறியசாதி யென்னுங் கேடுபாடுகளால் ஒரு வீதியில் முப்பத்தியெட்டு சாதிகள் குடியிருந்துக்கொண்டு கொள்வினை கொடுவினை பேதம், புசிப்பின் பேதம் மதபேதம் ஆகியக் கொடுஞ்செயல்களை வகித்து ஒற்றுமெய்க் கெட்டு பாழடைந்து வருவதைப் பார்த்தும் பாராததுபோல் சத்தியவாதியென வெளிதோன்றியது விந்தையேயாம்.

தன்னை உயர்ந்த சாதியென உயர்த்திக் கொண்டு ஏனையோரை தாழ்ந்தசாதியென ஏமாற்றி ஏவல் வாங்கியும், பொருள்பரித்தும் தின்னும்படியான பொய்சாதி வேஷம் போய்விடுகிறதே யெனப் புலம்பத் தோன்றினாரேயன்றி இவர் சத்தியவாதியாக வந்தவரன்று.

யாதார்த்தத்தில் சத்தியவாதியாக வெளி தோன்றுவாராயின் பரோடா ராசனது மொழியை பொன்போலேற்று பூரண மதிபோல் விளங்கிநிற்பார். அங்ஙனமின்றி சுயப்பிரயோசனங் கருதி பெரிய சாதி வேஷம்பூண்டவராதலின் பரோடாவரசன் விவேகமிகுத்த பெருங் கருத்து விளங்காது விழிக்கின்றனர்.

- 4:34; பிப்ரவரி 1, 1911 -


189. பிரிட்டிஷ் ஆட்சியின் சட்டதிட்டங்கள்

தன்னவர் அன்னிய ரென்னும் பட்ச பாதமற்ற பிரிட்டிஷ் ஆட்சியில் இந்து ஒருவன் திருடினாலும் கட்டிவைத்தடிக்க வேண்டியதே. கிறீஸ்தவன் ஒருவன் திருடினாலும் கட்டி வைத்தாடிக்கவேண்டியதே. இந்து ஒருவன் குடித்து வெறித்து குதூகலன் செய்வானாயின் காராக்கிரகஞ் சேர்க்க வேண்டியதே. கிறீஸ்தவனொருவன் குடித்து வெறித்து குதூகலன் செய்வானாயின் காராக்கிரகஞ் சேர்க்கவேண்டியதே. இந்துக்களென்போரில் பெரியசாதியென்னும் பெயர்வைத்திருப்பினும் (பினல்கோடுக்கு) மீறுவானாயின் அவன் தெண்டிக்கப்படவேண்டியதே. கிறீஸ்தவன் ஒருவன் தன்னை ராஜாங்க மதத்தைச் சார்ந்தவனென்று கூறியபோதினும் அவனும் பினல்கோடுக்கு மீறுவானாயின் அவனையும் தெண்டிக்கவேண்டியதே யென தங்களது நீதியையும், நெறியையும் பொதுவாக வரைந்துள்ளதன்றி அநுபவத்திலும் பேதமின்றி நடத்திவருகின்றார்கள்.

இந்துக்களென்போரில் பெரியசாதியாச்சுதே யெனக் குற்றவாளியைப் பினல்கோடு தெண்டிக்காமல் விடாது. கிறீஸ்தவர்களென்போர் இராஜாங்க மதத்தைச் சார்ந்தவர்களாச்சுதே யெனப் பினல் கோடு தெண்டிக்காமல் விடாது. பிரிட்டிஷ் ஆட்சியில் பெரியசாதியென்னும் பட்சமும் பாராது, கிறிஸ்தவனாச்சுதே யென்னும் கிருபையும் தாராது. இருவரையும் ஒருவராக பாவித்து இந்துக்களுக்கு நேரிடும் சுகதுக்கங்களை தங்கள் சுகதுக்கங்களாக பாவித்தும், கிறிஸ்தவர்களுக்கு நேரிடும் சுகதுக்கங்களை தங்கள் சுகதுக்கங்களாகப் பாவித்தும் பாதுகார்த்தும் ரட்சிப்பார்கள்.

இந்துக்களென்போர் தங்களது மதச்சார்பிலுள்ளவர்களை சேர்த்துக் கொண்டு யேனைய மதத்தோரை சீவகாருண்யமின்றி கழுவிலும், கற்காணங்களிலும் வதைத்துக் கொன்றுவிடுவார்கள். சிலக் கிறீஸ்தவர்கள் தங்கள் கட்டளைகளுக்குட்பட்டவர்களை யேற்றுக்கொண்டு தங்கள் கட்டளை நீதியாயினும், அநீதியாயினும், தெரிந்து சொல்லினும், தெரியாமற் சொல்லினும் அவற்றை எதிரிட்டுக் கேட்போர்களை நெருப்பிலிட்டுக் கொளுத்தியும், தேசத்தில் இரத்த வெள்ளமோட காருண்யமின்றிக் கொன்றும்விடுவார்கள்.

இத்தகைய அநீதியும், அக்கிரமமுமாகியச் செயலை பிரிட்டிஷ் அரசாட்சியார் மறந்துஞ் செய்யமாட்டார்கள். ஆதலின் அசத்தியமும், அசப்பியமும், துன்மார்க்கமுமிகுத்தத் துணையை நாம் நாடாது வித்தையும், புத்தியும், ஈகையும், சன்மார்க்கமும் நிறைந்த பிரிட்டிஷ் ஆட்சியில் நிலைத்து அவர்களது அரசே யென்றும் நிலைக்கக் கருதி அவர்களது ராஜவிசுவாசத்தில்