அரசியல் / 325
உலகம் மறவாமலிருக்கின்றது. ஆனால் அவர் தங்கள் பாதிரிகளுக்கு மனத்தாங்கலை உண்டாக்கிவிட்டு முடிசூட்டிக் கொண்டாரென்பது சிலர் கூற்று. அத்தகையத் தாங்கலுக்கும் கூற்றுக்கும் இடந்தராது நமது சக்கிரவர்த்தியார் சூட்டிக்கொள்ளும் மகுடாபிஷேக விவரத்தை சகலருக்கும் விளக்கி எம்மதத்தோர் மனதும் சம்மதிக்கும்படி தமது முடியைத் தரித்துக்கொள்வது மிக்க ஆனந்தம் ஆனந்தமேயாம்.
- 4:36; பிப்ரவரி 15, 1911 -
191. மேற்சாதி கீழ்சாதி என்னும் ராஜரீகம் சிறப்படையுமோ
ஒருக்காலும் சிறப்படையாவாம். காரணமோவென்னில் தனது தேசக் குடிகள் யாவரையும் தன்மக்கள்போல் காக்கவேண்டிய மன்னன் தன்னை உயர்ந்தசாதியாக பாவித்துக்கொண்டு தனது குடிகளிற் சிலரைத் தாழ்ந்த சாதியாக வகுத்து உயர்ந்தசாதியோர் அடையும்படியான சுகங்களைத் தாழ்ந்தசாதியோர் அடையப்படாதென்று தன்னவரன்னியர் என்னும் பட்சபாதமாக நடாத்துவதாயின் பொய்யாகிய சாதிபேதவகுப்பால் தாழ்ந்த சாதியோரென்றழைக்கப் பெற்றவர்களுள் கல்வியும், விவேகமும் அமைந்தவர்கள் யாவரும் பெரிய சாதியோனென்னும் மன்னனை அவமதிப்பதுமன்றி அவனை சிறப்பிக்கவுமாட்டார்கள்.
பொய்யாகிய சாதிபேதத்துள் பொய்யனாயிருப்பினும், பெரிய சாதியான், கள்ளனாயிருப்பினும் பெரியசாதியான், கொலைஞனா யிருப்பினும், பெரியசாதியான், பொருளாசைமிகுத்தப் பேயனாயினும் பெரிய சாதியான், நாணமற்ற ஒழுக்கினனாயினும் பெரியசாதியான், மானயீனமற்ற மழுங்கலாயினும் பெரியசாதியான், சுகதேகியாகி பெண்டு பிள்ளைகளுடன் சுகித்துயாது தொழிலுமற்ற சோம்பேறியாய் பிச்சையேற்கினும் பெரியசாதியான், மனிதவுருவாகத் தோன்றியும் மனிதர்களுக்குபகாரமற்ற மாபாதகனும் பெரியசாதியான், அவன் பிள்ளையும் பெரியசாதியான். அவன் பிள்ளைக்கு அவன் பிள்ளையும் பெரியசாதியானெனப் பொய்யை மெய்யெனச் சொல்லித்திரிவதும்.
மெய்யைச் சொல்லும் மேன்மகனாயினும் தாழ்ந்த சாதியான், களவற்ற காருண்யனாயினும் தாழ்ந்த சாதியான், கொலையற்ற குணநலனாயினும் தாழ்ந்தசாதியான், பொருளாசையற்ற புண்ணியசீலனாயினும் தாழ்ந்தசாதியான், நாணமும் அச்சமுமிகுத்த நல்லோனாயினும் தாழ்ந்த சாதியான், மானமிது நிர்மானமிதுவெனக் கண்டுநடப்போனும் தாழ்ந்த சாதியான், பூமியைவுழுது பண்படுத்தி தானிய விருத்திச்செய்யும் உழைப்பாளியாயினும் தாழ்ந்த சாதியான், மனிதர்களை மனிதர்களாக பாவித்து சகலருக்கும் உபகாரியாயுள்ளவனும் தாழ்ந்தசாதியான். அத்தகைய உபகாரியின் பிள்ளையும் அவன் பிள்ளையும் தாழ்ந்தசாதியென மெய்யைப் பொய்யாகச் சொல்லித்திரிவதுமாகியச் செயல்களால் கற்றோருக்கும் கல்லாருக்குங் கலகங்களுண்டாகி அதையடக்கியாளும் நீதிமன்னனாம் சாதிபேதமும், சமய பேதமுமற்ற அரசனில்லாவிடின் நான் பெரியசாதி, நீ சின்னசாதி என்னுங் கர்வதாழ்ச்சியே வொன்றுக்கொன்று மீறி மாறா போருண்டாகி மன்னனும் பேரழிந்து குடிகளும் சீரழிந்துபோமென்பது சத்தியமாதலின் இந்தியதேசப் பூர்வக்குடிகளும், சாதிபேதமற்றவர்களும், விவேகமிகுதிபெற்றவர்களுமாகிய ஒவ்வொருவரும் இதனனுபவத்தைக் காட்சி அனுபவத்துடன் உணர்ந்து சாதிபேதமுற்ற ராஜரீகம் இந்தியாவில் தலையெடுத்து இன்னும் இத்தேசத்தை சீரழித்து தேசமக்களைப் பாழ்ப்படுத்திவிடாமல் சிறப்புற்றோங்குதற்கு பிரிட்டிஷ் ஆட்சியே நிலைக்கவேண்டுமென்னும் முயற்சியே விடாமுயற்சியாகக் கொண்டு அவர்களது ராஜரீகத்தில் அன்புபூண்டு அவர்களது காப்பே என்றென்றும் நிலைக்க நினைப்புறும்படி வேண்டுகிறோம்.
- 4:36; பிப்ரவரி 15, 1911 -