உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xxxviii / அயோத்திதாசர் சிந்தனைகள்

குறைப்புக்கும் அச்சுக் கோர்ப்பதற்கும் வசதியாக இருக்கும் என்பது மனங்கொள்ளத்தகும். பழங்கால கல்வெட்டுகளிலும் இவ்வகை கையாளப்பட்டிருப்பதைக் காணலாம்.

கல்வி

கல்வி பெறுவது என்பது அவரவர் வசதியும் வாய்ப்புகளையும் அடிப்படையாகக் கொண்டதாகும். பொருள் வசதியின்றி படிக்கும் வாய்ப்புமின்றி, ஒருவேளை வசதியிருந்து வாய்ப்பும் கூடி வரப்பெற்றால் படிக்காதபடி தடைப்படுத்தும் இன சாதி குறுக்கீடுகள் கடுமையாக இருக்குமாயின் எந்தத் தாழ்ந்தவரும் கல்வியால் வளமும் வாழ்வும் பெறமுடியாது. இத்தகைய தடங்கல்கள் கிராமங்கள் தோறும் இருந்தன என்பது வரலாறு காட்டும் உண்மையாகும். தமிழக முடிமன்னர் காலத்திலிருந்து இவ்வழக்கம் ஆங்கிலேய அரசுவரை நீடித்தது. எனினும் அயோத்திதாசர் போன்ற ஆதிதிராவிட முன்னோடிகளால் மெல்ல மெல்லக் கல்விக்கூடங்கள் தோற்றுவிக்கப்பட்டு தாழ்த்தப்பட்டவர்களிடையே கல்வி பரவ ஆரம்பித்தது. இதிலும் எத்தனை சங்கடங்கள் என்பதற்கு நூறு ஆண்டுகளுக்கு முன் நேர்ந்த ஒரு நிகழ்ச்சியைக் கூறுகிறார்.

“1897-ஆண்டில் மகாஜன சபைக்கு பூர்வீக திராவிடர்களால் ஒரு பிரதிநிதியை அனுப்பி கலாசாலை,பூமிகளின் விஷயமாக கேட்டபோது சாதியைக்குறிக்காமல் பூர்வ திராவிடர் என்றே குறிப்பிட்டு இருந்தார்கள்.... இந்த எளிய குலத்து சிறுவர்க்குக் கருணைதங்கிய ராஜாங்கத்தார் ஆரம்ப வகுப்பு வரையில் இலவச கல்வி கற்பிக்கும்படி ஆரம்பித்த போது பெயர் வைத்தவர்கள் சாதிபேதமற்ற எளிய பிள்ளைகளின் இலவச கலாசாலைஎன வகுத்திருப்பார்களானால் பேருபகாரமாக விளங்கி இருக்கும். அங்ஙனமின்றி இக்கூட்டத்தாருக்கு எதிரிகளாகவும், சத்துருக்களாகவும் விளங்குவோர்களின் அபிப்பிராயங்களைக் கேட்டுகொண்டு “பஞ்சமர் கலாசாலை” என்று வகுத்துவிட்டார்கள்” (தமிழன் - 3.3.1909)

என்று கல்வி கற்கும் புனிதமான இடத்தையும் ஒரு சாதிப் பெயரிலேயே இயங்குமாறு செய்த வெறித்தனத்தை வேதனையோடு குறிப்பிடுகிறார். சிறுவயதிலேயே வேற்றுமையைப் புகுத்தி உயர்வு தாழ்வைக் கற்க வைத்து சாதி பாகுபாட்டைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதை ஒரு மார்க்கமாக ஆக்கி விட்டார்கள். இத்தகைய சூழ்நிலையில் பள்ளிக்கூடங்கள் நடத்துபவர்களும் கண்காணிப்பவர்களும் சாதி - சமய பேதமற்றவர்களாக இருக்க வேண்டும் என்று அவர் எண்ணுகிறார்.

“பெரிய சாதிகளென்று பெயர் வைத்துக் கொண்டிருப்போர்கள் சிறிய சாதிகளென்று அழைக்கப்படுவோர் வாசஞ் செய்யும் கிராமங்களிலுள்ளப் பள்ளிக்கூடத்து சிறுவர்களை அவர்கள் வசிக்கும் சாலைகளுக்கே நேரில் போய் பார்வையிடவும், பரிட்சை செய்யவுமில்லாமல் தூர விலகி சில தோப்புகளிலும், தங்களுக்கு வசதியான இடங்களிலும், உட்கார்ந்துகொண்டு பிள்ளைகளை தருவித்து தூர நிறுத்திக் கொண்டு தாங்களும் பரிட்சை செய்துவிட்டோம் தாங்களும் பார்வையிட்டோமென்று (ரிப்போர்டுகள்) எழுதிவிடும்படியான சில சாதியாரிருக்கின்றார்கள்.

அவ்வகை சாதியோரை இச்சூப்பர்வைசர் வேலைகளுக்கு நியமிப்பதனால் இராஜாங்கத்தோரின் நல்லெண்ணம் முற்றும் பாழடைந்து போவதுடன் இராஜாங்கத்தின் பணமும் வீண்விரயமாகும். ஆதலின் சாதி பேதமற்றவர்களும், சமய பேதமற்றவர்களும், தன்னவர் அன்னியரென்னும் பட்சமற்றவர்களும், மனிதர்களை மனிதர்களாக யெண்ணுகிறவர்களும் பேராசையற்றவர்களுமாகிய பெரியோர்களையே பார்த்து சூப்பர்வைசர் உத்தியோகங்களில் நியமிப்பதனால்... ராஜாங்கத்தோர் கருத்தையும் மீடேற்றுவார்கள்” (தமிழன்-27.1.1909).

என்று எடுத்துக் காட்டுவதன் மூலம் சாதி பாகுபாட்டால் உயர்த்தப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்களை எப்படியெல்லாம் அச்சுறுத்தலாம், படிக்க