பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 333


இனியேனும் நமது தேயத்தோர் பொய்க்குருக்களின் சோம்பேறி வித்தைகளை அகற்றிவிட்டு மெய்க்குருக்களின் சுருசுருப்பின் வித்தையில் முயன்று மக்களையுந் தேசத்தையும் சிறப்புப்பெறச் செய்வார்களென நம்புகிறோம்.

- 4:42; மார்ச் 29, 1911 -


199. சுடுகாட்டுக்கு வழிகொடாத சுதேசிகளுக்கு சுயராட்சியங் கொடுக்கப்போமோ

ஒருக்காலுங் கூடாவாம். காரணம் தஞ்சாவூர் ஜில்லா நாகப்பட்டினந் தாலுக்கா காடர்கோன்பாடியில் அரியான் தெடல் என்று வழங்கும் ஓர் சுடலையிருக்கின்றது. அச்சுடலையில் பறையர்களென்றழைக்கப்பட்டக் கூட்டத்தோர்களும், பள்ளர்களென்று அழைக்கப்பட்டக் கூட்டத்தோர்களும் தங்கள் பிரேதங்களைக் கொண்டுபோய் புதைப்பது வழக்கமாம். அச்சுடலையின் பூமி ஏறக்குறைய இருநூற்றியைன்பது குழி இருந்திருக்க வேண்டும். அவ்வளவு விசாலமுள்ள பூமி தற்காலம் ஐந்தாறு குழியுமில்லாமல் பக்கத்து பூமிக்காரர்கள் அப்பூமியிலிருந்து கொஞ்சங்கொஞ்சமாகத் தங்கள் பூமியில் சேர்த்துக்கொண்டதுமன்றி நெடுநாள் வழக்கமாக அச்சுடலைக்குச் சென்றிருந்த வழியின் பூமியையும் சேர்த்துக்கொண்டு இவ்வேழைஜனங்கள் தங்கள் பிரேதங்களை எடுத்துச்செல்லுவதற்கே வழியில்லாமற் செய்துவிட்டு தப்பித்தவறிப் போகிறவர்களை தங்கள் மாசூல்களைக் கெடுத்துவிட்டார்களென்று பிரையாதுஞ் செய்து அபராதமுங் கொடுக்கவைத்தார்களாம். நெடுங்கால அநுபவத்தில் ஏழைகள் அநுபவித்துவந்த சுடலையின் பூமியையும் அதன் வழியையுந் தடைச்செய்து தங்கள் சுகத்தைப் பார்த்துக்கொண்டு ஏழைகளை இடுக்கத்திற்கு ஆளாக்கிப் பரதவிக்கவிடுங் காரணங்கள் யாதெனில் “பாப்பானுக்கு மூப்பான் பறையன் கேழ்ப்பாரில்லாமற் கீழ்ச்சாதியானா” னென்னும் பழமொழிபோல் இச்சுடலையின் சங்கதியை இராஜாங்க ஆங்கிலேய உத்தியோகஸ்தர்களுக்கும், கருணைதங்கிய பிரிட்டிஷ் ராஜாங்கத்தோருக்கும் விளக்கிக்காட்டாமல் இருக்கின்றபடியால் ஏழைக்குடிகளின் சுடலை பூமியையும், அதன் வழியையும் பெரியசாதி என்னும் பெயர் வைத்துக்கொண்டவர்கள் அநுபவித்துக்கொண்டு சிறியசாதிகளென்னும் பெயரைவைத்து நாளெல்லாம் நசுக்கிவருகின்றவர்களை அவர்கள் சுடலைக்கே வழிகொடாமல் நாசப்படுத்துவதுடன் அபராதங் கொடுக்கும் படியான உபத்திரவங்களையுஞ் செய்துவருகின்றார்களாம்.

ஆதலின் நாகப்பட்டினங் காடர்கோன் குடிகள் யாவரும் ஒன்றுகூடி தஞ்சாவூர் ஜில்லாக் கலைக்கூட்டர் துரைவர்களுக்கு விண்ணப்பம் அனுப்பி ஜமீன்தார்களால் அச்சுடலைக்கு நேரிட்டுவந்தக் குறைகளையும், ஏழைக்குடிகளுக்கு உண்டாகிவரும் கஷ்டங்களையும் விளக்கி அச்சுடலையின் நிலத்தை மறுபடியும் அளந்துவிடும்படி மிக்க வணக்கத்துடன் கேட்டுக் கொள்ளுவதுடன் இக்கூட்டத்தோர் வாசஞ்செய்யும் வீடுகளின் அருகில் வசிக்கும் கருணைதங்கிய துரை மக்களுக்கும் கொண்டுபோய் அச்சுடலை பூமியின் இடுக்கங்களைக் காண்பித்து அவர்கள் நற்சாட்சியையுங் கொண்டு கலைக்ட்டரிடம் நேரே சென்று தங்குறைகளை நீக்கிக்கொள்ளல் வேண்டும்.

இவ்வகைத் துணிந்து ராஜாங்கத்தோருக்குத் தெரிவிக்காமற்போவார்களாயின் பெரியசாதி யென்னும் பெயரை வைத்துக்கொண்டுள்ளவர்கள் சிறியசாதியென்றழைக்கப்பட்டவர்களை இன்னும் சீரழித்து இவ்விடம் சுடலை யேதுங்காணோமென்னும் ஏய்ப்புக்குக் கொண்டுவந்துவிடுவார்கள். இத்தகைய ஏழைமக்களிடம் ஏவல்வாங்கிக்கொண்டு அவர்கள் சுடலைக்கு வழிகொடாத சுதேசிகளென்போருக்கு சுயராட்சியங் கொடுத்துவிட்டால் இன்னும் பட்டினங்களிலும் நடக்க வழி கிடையாதென ஏழைகளை நாசப்படுத்துவார்களென்பது அநுபவ சாட்சியாதலின் சுயராட்சியமென்னும் பெயரையே இவ்விடந் தலையெடுக்கவிடாமற் செய்து பிரிட்டிஷ் ஆட்சியே என்றென்றும் நிலைக்கும் முயற்சியை நாடல்வேண்டும்.

- 4:42: மார்ச் 29, 1911 -