334 / அயோத்திதாசர் சிந்தனைகள்
200. இரயில்வே பெரிய உத்தியோகங்களில் இந்தியர்களை நியமிக்கவேண்டுமோ
ஆளின் செயலறிந்து நியமிக்கவேண்டியதேயாம். அச்யெலோவென்னில் இவ்விந்தியதேசத்தில் இருப்புப்பாதை போடும்படி ஆரம்பித்தவர்களும், அதனை முடித்தவர்களும், முடித்து நடத்துகின்றவர்களும் ஆங்கிலேயர்களேயாம். அவர்களுக்கோ சாதி வித்தியாசம், சமயவித்தியாசமென்னுங் கட்டுகதைப் போராட்டம் ஒன்றுங்கிடையாது. அதனாற் சகலசாதியோர்களையும் அன்னியரெனபாவிக்காது தன்னவர்போல் நேசித்து சகலகாரியாதிகளையும் நடத்தி வருகின்றார்கள்.
அத்தகைய நடத்தலில் இரயில்வே உத்தியோகங்களில் பெரும்பாலும் நிறைந்துள்ளவர்கள் ஆங்கிலோ இந்தியர்களும், மகமதியர்களும், சாதிபேதமில்லா ஏழைகளுமேயாவர். இச்சாதிபேதமில்லா பெருந்தொகைக் குடிகளை ஏவல்வாங்குதற்கு பெருத்த உத்தியோகங்களை சாதிபேதமுள்ளவர்களுக்குக் கொடுப்பதாயின் சாதிபேதமில்லா உத்தியோகஸ்தர்கள் யாவரும் நசிந்துப் பாழடைவதுடன் இரயில்வே காரியாதிகளுக்குஞ் சில தடைகள் நேரினும் நேரும்.
எவ்வகையாலென்னில் பெரியசாதியென்னும் பெயர் வைத்துக் கொண்டுள்ளவர் ஒருவர் இவ்விரயில்வே உத்தியோகத்திலிராமல் தாசில்தாராயிருந்து கொண்டு தன்னுடைய அதிகாரத்தை இரயிலிலும் வந்து செலுத்தியிருப்பதை நமது பத்திரிகையில் வெளியிட்டிருக்கின்றோம். அதாவது இரயில் வண்டியில் ஏழைக்குடிகளேறி நிறைந்திருக்கும்போது கிராம தாசில்தார் தன்னுடைய பந்துக்களை இரயிலில் ஏற்றும்படி வந்து பார்த்தபோது ஒரு வண்டியேனுங் காலியில்லாமலிருந்ததாம். அப்போது தாசில்தாருக்கு கோபம் பிறந்து ஏழைகள் ஏறியிருந்த வண்டியை துராக்கிரமமாகக் காலிசெய்து வெளியிலிழுத்துவிட்டு தங்கள் பந்துக்களை அவ்வண்டியேற்றி அனுப்பிவிட்டாராம். ஏழைசனங்கள் பிள்ளை குட்டிகளுடன் கண்கலங்கி நின்றுவிட்டார்களென்பது பிரத்தியட்சமாகும். இத்தகைய சாதிபேதமுள்ளக் காருண்யமற்றக் கூட்டத்தார் இரயில்வேயில் உத்தியோகமில்லாத காலத்திலும் ஏழைகள் மீது தங்கள் சாதி அதிகாரத்தைக் காட்டுகின்றவர்கள், இரயில்வேயிலேயே சாதிபேதமுள்ளவர்களுக்குப் பெருத்த உத்தியோகங்களைக் கொடுத்துவிடுவதாயின் இரயில்வேயிலுள்ள சாதிபேதமில்லா உத்தியோகஸ்தர்கள் யாவருங் கண் கலங்கி தவிப்பார்களென்பது சொல்லாமலே விளங்கும்.
இதற்குப் பகரமாய் வில்லேஜிகளில் ஸ்டேஷன் மாஸ்டர்களாயிருப்பவர்கள் சாதியாசாரமுடையவர்களாய் இருப்பார்களாயின் அவர்களுக்குள் அடங்கிய உத்தியோகஸ்தர்கள் யாவரும் சாதியாசாரமுடையவர்களாகவே இருப்பார்கள். சாதியாசாரமில்லாதவர்களோ முன்னிருந்தவர்களும் அவ்விடம் நிலைப்பதும் கடினம். பின்னிடத்தில் சேர்ப்பதுங் கிடையாது. ஆதலின் இரயில்வேயின் மற்றும் பெரும் உத்தியோகங்களில் சாதியாசாரமுள்ளவர்களை சேர்ப்பதாயின் மற்றும் கீழ்த்தர உத்தியோகங்களிலுள்ள ஆங்கிலோ இந்தியர்களுக்கும், மகமதியர்களுக்கும், சாதிபேதமற்ற ஏழைக்குடிகளுக்கும் இடுக்கங்கள் நேரிடுமென்றே துணிந்து கூறியுள்ளோம்.
இவற்றைக் கண்ணுற்றாளும் கருணை தங்கிய கவர்ன்மெண்டார் இந்த சாதிபேதமுள்ளவர்கள் சாதிபேதமில்லாதவர்களைச் செய்துவருங் கருணையற்றச் செயல்களையறிய வேண்டுமாயின் கிராமங்களிலுள்ள சாதிபேதமில்லா ஏழைக்குடிகளைத் தருவித்து முகமுகமாகக் கேட்டுத் தெளிவார்களாயின் சாதிபேதமுள்ளோர் சோம்பலிலிருந்தும் அநுபவித்துவரும் சுகங்களும், சாதிபேதமில்லாதார் பூமிகளை உழுதும் பலனடையச்செய்தும் அவர்கள் படுங்கஷ்டங்களும் தெள்ளற விளங்கிப்போம். இதனால் பெரியசாதி என்போர்களுக்கு பெரிய உத்தியோகங்களையுங் கொடுத்து விடுவதாயின்