338 / அயோத்திதாசர் சிந்தனைகள்
வருகின்றார்கள். அவ்வகையாக ஏரிகளிற் பயிர்செய்தற்கும் இந்த மூன்று கிராமங்களிலும் உத்திரவு கிடையாதாம்.
இத்தகையச் செயல்களை ஆராயுங்கால் அவ்விடத்திய உத்தியோகஸ்தரும் கனவான்களும் ஏழைக்குடிகளைக் கெடுத்துப் பாழ்படுத்துவதுடன் இராஜாங்கத்தோருக்கும் நஷ்டங்களை விளைவிப்பவர்களாகக் காணப்படுகின்றது.
கருணை நிறைந்த கவர்ன்மெண்டார் காலியாயிருக்கும் பூமிகளை ஏழைகளுக்குக் கொடுத்து பயிர் செய்விக்கவேண்டுமென்னும் உத்திரவை 1902 வருடம் பிறப்பித்திருக்க, அவ்வுத்திரவை திண்டிவனந் தாலுக்கா உத்தியோகஸ்த்தர்கள் கவனியாதிருக்குங் காரணம் தெரியவில்லை. இத்தகைய ஏழைக்குடிகள் உள்ளூரிலுள்ளக் காலிபூமிகளைப் பயிர்செய்து சீவிப்பதற்கு இடங்கொடாமலும், நெட்டால் முதலிய தேசங்களுக்குப் போகவிடாமலும் தடுத்துப் பாழ்படுத்துவதனால் இதன்குறிகள் ஏழைக்குடிகள் சீர்பெற்று முன்னோக்குவதற்கா அன்றேல் அங்கங்குள்ளவர்கள் சீர்கெட்டு நாசமடைவதற்காவென்பது யாதும் விளங்கவில்லை. காலமெல்லாம் சத்துருக்களாயிருந்து சாதி வித்தியாசமென்னுங் கெட்டுப்போனச் செய்கையினால் ஏழைகளைத் தலையெடுக்கவிடாமல் பாழ்படுத்தி வந்ததுமல்லாமல் கருணைதங்கிய பிரிட்டிஷ் ஆட்சியிலும் அவர்களது துற்குண மாறாது நசித்துப் பாழ்படுத்துஞ் செய்கைகளையே உடையவர்களாயிருக்கின்றார்கள். இவ்வகையான சொற்ப அதிகார உத்தியோகங்களைப் பெற்றிருக்கும்போதே ஏழைக்குடிகளைத் தலையெடுக்கவிடாமல் பாழ்படுத்திவருகின்றவர்கள் தங்களுக்கு சுயராட்சியங் கிடைத்துவிட்டால் அறுபது லட்சம் ஏழைக்குடிகளையும் அன்றே பாழ்படுத்தி அடியோடும் நசித்துவிடுவார்களென்பது சத்தியம், சத்தியமேயாகும்.
ஆடுகள் கசாயிக்காரனைநம்பிப்பின்பற்றுவதுபோல் காலமெல்லாம் சத்துருக்களாயிருந்து நசித்துப் பாழ்படுத்தும் பொறாமெய்ச் சிந்தனாரூபிகளை நல்ல எஜமானர்களென்றுநம்பி மோசம் போகாமல் விடாமுயற்சியிலும் ஜாக்கிரதையிலு முயன்று முன்னேறுவதே அழகாகும்.
அத்தகைய முன்னேற்றங்களுக்கு ஆதாரம் யாதெனில், பொறாமெயும், வஞ்சினமுமிகுத்த சத்துருக்களால் அதிக எழியநிலை அடைந்திருந்தபோதிலும் தங்களை தாழ்ந்தசாதியோரென்று தாழ்த்திக் கொள்ளாமலும், தங்களுக்கும் உயர்ந்த சாதியோர்களிருக்கின்றார்களென்று உயர்த்திக்கொள்ளாமலும் சகலர்களையும் மனிதர்களென்றெண்ணி தாங்கள் விருத்திபெறவேண்டிய விஷயங்களை நாடியுந் தேடியும் உழைப்பார்களாயின் சகல மனுக்களைப் போலும் முன்னேறி சுகம் பெறுவார்கள்.
அங்ஙனமாய சுகவழியைத் தேடாது தங்களைத் தாழ்ந்த சாதியார் தாழ்ந்த சாதியாரென்றெண்ணிக்கொண்டு பொய்யாகிய சாதிக்கட்டுப்பாட்டை மெய்யென்று நம்பி மோசம் போவார்களாயின் தற்காலமிருக்குந் தாழ்ச்சியைவிட இன்னுந் தாழ்ந்து நிலைகுலைவதற்கு ஏதுவாம்.
இத்தேசத்தோரும் சிலர் மதக்கடைப் பரப்பி சீவிப்பதில் மகாவல்லவர்களிருக்கின்றார்கள். அவைகள் யாவும் சமயப்பற்றை ஒழிக்குங்கால் தானே யஃதொழிந்துபோம்.
அதை அநுசரிக்குமாபோல் டிப்பிரஸ் கிளாஸ் கடைகள் சிலதை திறந்துவருகின்றார்கள். அதாவது டிப்பிரஸ் கிளாசென்றால் பறையர், சக்கிலியர், தோட்டிய ரென்றும் அவ்வகையோரை முன்னுக்குக் கொண்டுவரப் போகின்றோமென்றும் அதற்காகக் கனவான்கள் பணவுதவி செய்ய வேண்டுமென்றுங் கேட்டுக்கொண்டுவருகின்றார்கள்.
கவர்ன்மென்றார்களுடைய பூமிகளைக் கொடுத்து சீர்திருத்துவதற்கு மனமிராது ஒவ்வொரு போக்குகளைச் சொல்லிக் கெடுத்துவருகின்றவர்கள் பணங்களை வசூல் செய்து யாரை முன்னுக்குக் கொண்டுவருவார்கள். மதக்கடைகளைப்போ லொத்ததே டிப்பிரஸ்கிளாஸ் கடைகளன்றி வேறாமோ.