பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறப்புரை / xxxix

இயலாதவாறு செய்யலாம் என்பதற்கு இந்த நிகழ்ச்சியைச் சான்றாகக் காட்டுகிறார். மற்றும் கல்வி என்பது வெறும் வாழ்க்கைக்கும் வசதிக்கும் என்று இல்லாமல் ஒவ்வொருவரும் நல்ல ஒழுக்கத்தைப் பெறவும் பிறரையும் சிறந்த ஒழுக்கத்தில் ஈடுபாடு கொள்ளச் செய்யவும் நூற்கல்வி பயன்பட வேண்டும் என்றும் கருதுகிறார். இத்தகைய படிப்பு சிறுவயது முதற்கொண்டே அமைய வேண்டும் என்றும் விரும்புகிறார்.

“...திராவிடமொழியில்... அந்த பூமியில் வாழும் குடிகளின் செயல்களையும், சிறப்புகளையும் நெறிகளையும் தெள்ளென விளக்கி அநேக நூற்களை வரைந்து வைத்திருக்கிறார்கள். அத்தகை நூற்களை தற்கால சிறுவர்களுக்குக் கற்பித்து வருவதாயின் வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கம் இவைகள் பெறுகுவதுடன் குரு விசுவாசம், ராஜவிசுவாசம் நிலைத்து தாங்கள் சீரடைவதுடன் பிறரையும் சீர் பெறச் செய்வார்கள்.

இத்தகைய நூற்களை சிறுவர்கள் கையில் எடுக்கவே கூடாமற் செய்துவிட்டபடியால் சிறுவர்கள் ஆங்கில மொழியை வெகுவாக கற்றிருப்பினும் தாய்மொழியின் செயலும் பயனும் குறைந்து போயிற்று. அத்தகைய நூல்களை கலாசாலையில் கற்பித்தால் தற்கால நூதனமாக ஏற்படுத்திக் கொண்ட சாதி வித்தியாசங்களையும் மதக்கடை வியாபாரங்களும் இராஜாங்கத்தோடு விளங்கிவிடுவதுடன் சிறுவர்களும் விவேக விருத்திப் பெற்று சாதித் தலைவர்களையும் சமயத் தலைவர்களையும் மதியாமற் போய்விடுவார்கள் என்ற கருத்தினால் சாதித்தலைவர்களும் சமயத்தலைவர்களும் பூர்வ திராவிட நூற்களை கலாசாலையில் பரவ விடாமல் செய்து விட்டனர்” (தமிழன் -6.3.1912)

என்று இவர் கூறும் திராவிட நூல்கள் நீதி நூல்களேயாகும். இவை திருக்குறள், நாலடியார் போன்றவை என்று கூறலாம். இவைகளே ஒழுக்க நூல்கள் என்றால் பொருந்தும். இவற்றிலிருந்தே வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கம் போன்றவைகளைப் பெற முடியும் என்று அவர் கருதி தம் பத்திரிகையில் பல இடங்களில் குறிப்பிடுகிறார். வாழ்க்கை நெறிநூலான திருக்குறள் போன்றவை இவர் குடும்பத்தாரிடமிருந்ததும் இவருடைய பாட்டனாரால் எல்லீஸ் என்ற ஆங்கிலேயரிடம் கொடுக்கப்பட்டது என்பதும் நினைவுபடுத்திக் கொள்ளத்தக்கதாகும்.

பழந்தமிழர் நூல்களை அழிப்பதற்கென்றே ஒரு விழாவை ஏற்படுத்தி ஓலைச் சுவடிகளை ஆற்று நீரில் விட்டு அழிக்கச் செய்த சூழ்ச்சியைத் தமிழர்கள் காலங்கடந்து உணர்ந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. பல தமிழ் இலக்கியங்கள் அழிய தமிழர்களே காரணமாக இருந்தது வருந்தத்தக்கது. இருப்பினும் சில தப்பி இருக்கின்றன. அவைகளில் சில ஆதிதிராவிடர் பாதுகாப்பில் பிழைத்திருந்தன.

அரசியல்

சமுதாயம், சமயம், அரசியல் என்று எத்துறையாயினும் அவை மக்களின் செம்மையான வாழ்க்கைக்குப் பயன்பட வேண்டும் என்பதே பண்டிதர் அயோத்திதாசரின் கருத்தாகத் தோன்றுகிறது. அரசியலைப்பற்றி ஒரு நூற்றாண்டுக்கு முன் அவரது சிந்தனை எவ்வாறு இருந்தது என்பது எண்ணி மகிழத்தக்கதாக இருக்கிறது.

“அரசியல் என்னும் இறை மாட்சி வழங்கும் விசாலமுற்ற முல்லை, மருதம், நெய்தல், குறிஞ்சி என்னும் வளநாடுகளும், இரத கஜ துரக பதாதிகளென்னும் சதுரங்க சேனைகளும், சாம பேத தான தண்டமென்னும் சதுர்வித உபாயங்களும், அமைச்சர்களும், வித்தை புத்தி ஈகை சன்மார்க்கமென்னும் சதுர்முறைக் குடிகளும், நாடரண், காடரண், மலையரண்,மதிலரண் என்ற நான்கு அரண்களும், தன சம்பத்து, தானிய சம்பத்து, ஆடை சம்பத்து, ஆபரண சம்பத்துகளுடைய நிலை அரசாங்கம் எனப்படும்.

இத்தகையவற்றைப் பெற்ற அரசன், விடாமுயற்சி, ஈகை, தைரியம், விசாரணை, விழிப்பு, கலை நூல்பயிற்சி,தர்மம் நிலை நிறுத்தல், அதருமம் நீக்கல், குற்றத்திற்கு நாணுதல், அந்தஸ்தை நிலை நிறுத்தல், வித்தியா விருத்தி செய்தல், விருத்தியால்