பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 343

அவ்வகைகளால் ஏறிவரப்படாது நாமே தூக்கிவிடுகிறோமென்று கூறி உள்ள உயிரையும் சரிவரக் கொன்று பாழ்படுத்துவார்களன்றி தூக்கி யெடுத்துப் பாதுகாப்பார்களென்பது கனவிலும் நம்பக்கூடியதன்று.

அதுபோல் இவ்விந்தியதேசத்தில் நூதனமாக வந்துக் குடியேறிய சிலக் கூட்டத்தோர் கீழ்ச்சாதி, மேற்சாதியென்னும் சிலக் கட்டுக்கதைகளை ஏற்படுத்திக் கொண்டு பௌத்த அறஹத்துக்களைப்போல் வேறெமிட்டு தங்களை உயர்ந்த சாதி பிராமணர்களென்றும், இவர்களது பொய்ப் பிராமணவேஷத்தை சகலருக்கும் பறைந்துவந்த விவேகிகளாம் பெளத்த உபாசகர்களைத் தாழ்ந்த சாதிப் பறையரென்றும் பாழ்படுத்திவருங்கால் இத்தேசத்திய மராஷ்டர்களும், கன்னடர்களும், ஆந்திரர்களும், திராவிடர்களும் பிராமணவேஷ மணிந்து சோம்பேறி சீவனத்தை வலுவு செய்வதற்கு தங்களுக்கு எதிரிகளாயிருந்து பொய் வேஷங்களைக் கண்டித்து வந்த வடநாட்டு வங்காள பௌத்த விவேகிகளை சண்டாளர்களென்றும், வடமேற்கு மலையாள கொடுந்தமிழ் பெளத்த விவேகிகளை தீபர்களென்றும், தென்னாட்டு செந்தமிழ் பௌத்த விவேகிகளைப் பறையர்களென்றுந் தாழ்த்தி நசிப்பதற்கு தங்களது பொய்வேஷப்பிராமணக் கூட்டங்களும் பெருகி தங்களை மெய்ப்பிராமணர்களென்று நம்பி மோசம்போயக்குடிகளும் பெருகிவிட்டபடியால் பொய்ம்மத வேஷதாரிகளுக்கும் பொய்ச்சாதி வேஷதாரிகளுக்கும் வலுமிகுத்து இந்திரர்தேச யதார்த்த இந்திரர் தன்மத்தை பராயமதமென்றும் இந்தியர்களாம் பெளத்தர்களைப் பராயசாதியோரென்றுங் கூறி பலவகையாகக் கொன்றும் இழிவுபடுத்தியும் தாழ்த்தியும் நாசஞ்செய்து வந்தவர்களும் காரண காரியம் அறியாது நாளதுவரையில் தாழ்த்திவருகின்றவர்களுமாகியவர்களுக்குள் சிலர் தோன்றி தாழ்ந்தவர்களை உயர்த்தப்போகின்றோமென்று கூறுவது யாதெனில், தங்களால் தாழ்த்தி நாசமடையச் செய்தக் கூட்டத்தார் கருணைதங்கிய பிரிட்டிஷ் ஆட்சியின் செயலால் நாளுக்குநாள் சீர்பெற்று வருவதைக் கண்டு சகியாது தாழ்ந்த சாதியோரை உயர்த்தப்போகின்றோமென்றுகூறி உள்ளதையும் கெடுத்து உருதெரியாது பாழ்ப்படுத்தப் பார்க்கின்றார்கள்.

சாதிபேதமில்லா பெருங்கூட்டத்தோரை சாதிபேதமுள்ளோர் உயர்த்தப்போகின்றோமென்பது எவ்வகை உயர்த்தலோ விளங்கவில்லை. ஏழைகளுக்குக் கல்வி கற்பிக்கப்போகின்றோம், கைத்தொழில் கற்பிக்கப் போகின்றோம், கனமான உத்தியோகஞ் செய்விக்கப்போகின்றோம் என்பாராயின் அஃது யாவர்க்கும் விளங்கும். அங்ஙனமிரது தாழ்ந்த சாதிபோரை உயர்த்தப்போகின்றோமென்னும் சொல்லும் செயலுமானது இன்னுந் தாழ்த்தி நாசஞ்செய்யவேண்டுமென்னுங் கருத்தேயன்றி யதார்த்தத்தில் உயர்த்துகிறோமென்பது பொய், பொய்யேயாம்.

உயர்த்துகிறோமென்பது மெய், மெய்யேயாயின் அச்சாதிபேதமில்லா ஏழைக்குடிகளுக்கு சாதிபேதம் வைத்துள்ளோர் யாதாமொரு பணவுதவிபஞ் செய்ய வேண்டியதில்லை. கல்விசாலைகளும் வைக்கவேண்டியதில்லை. அவர்களுக்கென்றுவோர் கூட்டங்கூடி பணச்செலவுகளும் வைத்துக் கொள்ளவேண்டியதில்லை. அவர்கள் முன்னேறும் வழிகளுக்கெல்லாம் யாதொரு தடையுமின்றி வழி விட்டுவிடுவார்களாயின் அதுவே அவர்கள் செய்யும் பேருபகாரமும் அதுவே அவர்கள் கொண்ட நல்லெண்ணத்திற்கு அறிகுறியுமென்று சொல்லத்தகும். அங்ஙனஞ்செய்யாது தாழ்ந்த சாதியோரை உயர்த்தப் போகின்றோமென்றுயாது கூட்டங்கூடி ஏதுபணஞ் சேகரிக்கினும், “சூடு கண்டபூனை அடுப்பங்கடை நாடா” தென்னும் பழமொழிக்கிணங்க காலமெல்லாந் துன்பஞ்செய்து வந்தவர்கள் தற்காலம் இன்பத் தரப்போகின்றோமென்பதைத் துன்பமெனக் கருதி விலகுவார்களன்றி இன்பமென நெருங்கவேமாட்டார்கள்.

- 4:48; மே 10, 1911 -