342 / அயோத்திதாசர் சிந்தனைகள்
லெத்தகிராப்பு முதலிய அரிய வித்தைகளை நாளுக்குநாள் கண்டுபிடித்து தாங்கள் சுகவாழ்க்கைப் பெறுவதுடன் அவ்வித்தைகளைக் கற்றுக் கொள்ளுவோரும், அவற்றை செய்வோரும் ஆனந்த சுகவாழ்க்கையில் இருக்கின்றார்கள். விவசாய விருத்திகளோவென்னில் பருத்தியின் விளைவால் ஐரோப்பியர்கள் செய்யும் நெசுவின் விருத்திகளும், அமேரிக்கர் செய்யுங் கோதுமை விருத்திகளும், ஜப்பானியர்கள் செய்யும் விருட்சவிருத்திகளும், பர்மியர்கள் செய்யும் அரிசியின் விருத்தியும் விவசாயபலனை நன்கு விளக்கும்.
இத்தகைய விருத்திகளை கலாசாலை மாணவர்களுக்குப் போதியாது மதசம்மத நூற்களைப் போதிப்பதாயின் வித்தை புத்தி, யீகை, சன்மார்க்கமற்று சோம்பேறிகளாய் வீதியுலாவவும், சாதிசம்மத நூற்களைப் போதிப்பதாயின் நாளுக்குநாள் பெருக்கிக்கொண்டேவரும் சாதிபேதமென்னும் பொய்க்கட்டுப்பாடுகளினால் ஓர் மனிதன் தனதருகில் வந்தவுடன் அவனைப் பார்க்க கண்ணிருந்தும் மனிதவுருவினனென்றறியும் உணர்ச்சியிருந்தும் அவனை முறுத்துப்பார்த்து நீரென்னசாதி, என்னவருணமெனக் கேட்டு நாளுக்குநாள் ஒற்றுமெய்க்கேடடைவதுடன் விரோதச் சிந்தனையே விருத்தி பெற்று ஒருவருக்கொருவர் உபசாரமென்பதற்றுப் பாழடைந்து போவார்கள்.
இந்துக்களென்போர் தங்கள் மதசம்மதங்களினால் இதுவரையில் அடைந்துவந்த சுகங்களென்ன, சாதி சம்மந்தங்களினால் இதுவரையிலடைந்துவந்த சுகங்களென்ன. ஓர் மனிதன் ஏதேனும் ஓர் வித்தையை நூதனமாகக் கண்டுபிடிப்பானாயின் அவ்வித்தையால் தானும் தனது சந்ததியோரும் சுகச்சீர்பெற்று வாழ்வதுடன் தனது தேசமக்களும் சீவராசிகளும் சுகவாழ்க்கைப்பெறுமாயின் அவ்வித்தையை சிறந்த வித்தையென்று கூறலாம். அங்ஙனமின்றி அவ்வித்தையால் தாங்கள் மட்டிலும் சுகம்பெற்று ஏனையோர்கள் யாவரும் பாழடைவதாயின் அவ்வித்தை மேலான வித்தையென்று விவேகிகளேற்பரோ. ஒருக்காலும் ஏற்கமாட்டார்கள்.
இம்மதசம்மந்தவித்தையும், சாதிசம்மந்தவித்தையும் தங்கடங்கள் சுயப்பிரயோசனங் கருதி ஏற்படுத்திக் கொண்டவைகளாதலின் கற்பனா நூற்களை கலாசாலைகளில் போதிப்பதினால் உள்ளக் கலை நூற்களின் பலனும் கெட்டுப் பாழடைய நேரும். ஆதலின் ஒவ்வோர் கலாசாலைகளிலும் மதசம்மத நூற்களையும், சாதிசம்மத நூற்களையும் மறந்துங் கற்பிக்காமலிருக்க வேண்டுகிறோம்.
- 4:48; மே 10. 1911 -
207. தாழ்ந்த சாதியோரை உயர்த்துதலாமே?
தாழ்ந்த சாதியோரை உயர்த்துவதென்னில் தங்களுக்குள் தாங்களே தாழ்ந்து நிலைகுலைந்திருப்பவர்களை உயர்த்துகின்றதா அன்றேல் சத்துருக்களால் தாழ்த்தப்பட்டு நிலைகுலைந்திருப்பவர்களை உயர்த்துகின்றதா என்னும் விவரம் யாதும் விளங்கவில்லை. எக்காலுங் கிணற்றிலேயே கிடப்பவனை தூக்கிவிடப் போகின்றோமென்பது வீண்மொழியேயாகும். கிணற்றில் தவறி விழுந்தவனை தூக்கிவிடப்போகின்றோமென்பது விவேகிகள் முதல் அவிவேகிகள் வரை ஒப்புக்கொள்ளுவதாகும். கிணற்றில் ஒருவனை தாங்களே தள்ளிவிட்டு தாங்களே தூக்கிவிடப்போகின்றோமென்பாராயின் சகலருக்கும் அஃதோர் விந்தை மொழியும் சிந்தை மொழியாகத் தோன்றுமேயன்றி அன்பின் மிகுத்த சொந்த மொழியென்று நம்பமாட்டார்கள்.
காரணமோவென்னில் ஒருவன்மீது தங்களுக்குள்ள வஞ்சினத்தாலும், பொறாமெயாலும் அவனைக் கிணற்றில் தள்ளிவிட்டு மற்றவர்கள்மீது குறைகூறாமல் தங்களை மெச்சுதற்கு தள்ளப்பட்டவனைத் தூக்கிவிடப் போகின்றோமென்னும் சொல்லும் செயலுமானது அவன் இன்னும் உயிருடனிருக்கலாமா மற்றவர்கள் வந்தும் அவனைத் தூக்கிவிடலாமா, அவனாயினுந் தன்னிற்றானே கிணற்றைவிட்டேறி வந்துவிடலாமா