பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

344 / அயோத்திதாசர் சிந்தனைகள்


208. சாதித் தொடர்மொழிகள் சாஸ்வதமாமோ?

இல்லை, இல்லை, அவரவர்கள் தங்கள் தங்கள் பிரியம்போல் பெயர்களினீற்றில் சீனிவாசச்செட்டி, சீனிவாச ஐயர், சீனிவாச ராவெனச் சேர்த்துத் தங்களுக்குத் தாங்களே உயர்ந்த சாதியென்று சொல்லிக்கொள்ளுவது வழக்கமேயன்றி வேறோர் ஆட்சரிய உற்பவங் கிடையாவாம்.

ஓர் குழந்தை பிறந்து வளர்ந்து அரசதானம்வரை ஓர் பெயருங் கொடாமலிருப்பதாயின் அவனைப் பெயரில்லா மனிதனென்றே அழைப்பார்கள். பிறந்தவுடன் சீனிவாசனென்னும் பெயரைக் கொடுத்த போது சீனிவாசா, சீனிவாசா வென வழக்க அழைப்பாகும். அவன் பாலதானங் கடந்தபின்னர் உத்தியோகப் போக்கினாலும், விவகாரப்பெருக்கினாலும் சீனிவாசச்செட்டியென்றோ சீனிவாச ராவென்றோ ஓர் தொடர்மொழியைச் சேர்த்து வழங்கிக்கொள்ளுவது இயல்பாம். இத்தகையாய் சேர்த்துக்கொள்ளுந் தொடர்மொழியைப் பெரிதாக எண்ணிக்கொண்டு தங்களை உயர்ந்த சாதியோரென்று கெளரதைப்படுத்திக்கொள்ளுவதும் அத்தகையத் தொடர்மொழிகளைச் சேர்த்துக்கொள்ளுவது டம்பச்செயலென்றும் பேரறிவாளரைத் தாழ்ந்தசாதியோரென்று கூறி அலக்கழிப்பதுமாயச் செயல்கள் தங்கள் தங்கள் சுயப்பிரயோசனச்செயல்களேயன்றி யதார்த்தத்தில் உயர்ந்தசாதியோரென்பது கிடையாது. அவரவர்கள் சாதிக்கும் சாதனங்களின்படி நற்சாதனமுடையவர்கள் நியாயசாதியோரென்றும், துற்சாதனமுடையவர்கள் தீயசாதியோரென்றும் அழைக்கப்படுவார்களன்றி கொடியனும் வன்னெஞ்சனும் குடிகெடுப்போனுமாய தீயனை உயர்ந்த சாதியோனென்றும், நியாயனும், அன்பனும், சாந்தமானோனை தாழ்ந்தசாதியோனென்றுங் கூறுவது கண்டுபடிக்காக் கல்வியும், கலை நூற்கல்லா விவேகமுமென்றே கூறல்வேண்டும்.

பெரியசாதிகள், சிறியசாதிகளென்பது யாவும் பொய். தங்கங்கட் பெயர்களினீற்றில் ஒவ்வோர் தொடர்மொழிகளைத் தாங்களே சேர்த்துக் கொண்டு தங்களைப் பெரியசாதியோர், பெரியசாதியோரெனச் சொல்லித் திரிவது மெய். இதற்குப் பகரமாய்க் கும்பகோணத்தைச்சார்ந்த கிராமவாசிகளாகும் சௌராட்டிர மகாஜனங்கள் யாவரும் தங்கட் பெயர்களினீற்றில் செட்டியார்கள் என்னுந் தொடர்மொழியைச் சேர்த்து வழங்கிவந்தார்கள். தற்காலம் இந்த விரோதிகிருது வருடம் சித்திரை மாசம் 1உ முதல் அந்த செட்டியாரென்னுந் தொடர்மொழியை அப்பாலெடுத்தெறிந்துவிட்டு, அய்யரென்னுந் தொடர்மொழியைச் சேர்த்துக் கொண்டார்கள். இதன் விவரத்தை 1911 வருடம் ஏப்பிரல்மீ29ல் வெளிவந்துள்ள சுதேச மித்திரன் இரண்டாம் பக்கம் முதற் கலத்திலுள்ள நோட்டீசால் கண்டறிந்து கொள்ளலாம்.

இப் பெரியசாதி, சிறியசாதி யெனச் சொல்லித்திரியும் கட்டுக்கதைகளை சாதிபேத மில்லாதோர் மெய்யென்று நம்பி மோசம் போகாது தாங்கள் முன்னேறி சுகம்பெறும் வழியைத் தேடுவார்களென்று நம்புகிறோம்.

- 4:48, மே 10, 1911 -


209. தங்களை சீர்திருத்திக்கொள்ள அறியாதோர் பிறரை சீர்திருத்தப் போகின்றார்களாமே?

நமது தேசத்தையும் நம்மெயும் அரசாண்டு கார்த்துவரும் கருணைதங்கிய ஐரோப்பியர்களது ஒற்றுமெயையும், அவர்களது அன்பின் செயலையும், வித்தை புத்தியையும் நோக்கி அவ்வொற்றுமெபலத்தாலும் வித்தையின் மிகுதியாலும் அவர்களடைந்துவரும் ஆனந்தத்தையும் சுகத்தையும் நன்குணரல் வேண்டும்.

இரண்டாவது கனந்தங்கிய மகமதியர்களின் ஒற்றுமெயையும் அவர்களது செயல்களையும் நன்குணரல்வேண்டும். அதாவது, அவர்கள் யூனிவர்சிட்டி கலாசாலை ஏற்படுத்தவேண்டியதென்னும் நோக்கங் கொண்டவுடன் எத்தேசத்திய மகமதியர்களும் ஒருமனப்பட்டு அவர்கள் சேர்த்துள்ள