பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 349

பெட்டியிலிட்டு பூட்டி அதன்மீது படுத்திருப்பார்கள். இத்தகைய கனவான்களின் பெருமுயற்சிகள் யாதெனில் கவர்ன்மென்டாரே கலாசாலைகள் வைக்க வேண்டு மென்று கேட்டு தற்சுகமடைய ஆரம்பிப்பார்களன்றி தங்களுக்குள் முயன்று தங்கள் பணங்களை செலவிட்டு தங்கள் தேசப்யிற்சியை முன்னிட்டு கலாசாலைகளின் விருத்தியையேனும் கைத் தொழில்சாலைகளின் விருத்தியை யேனும் செய்யவே மாட்டார்கள். இத்தகைய சீர்கேடுகளுக்கெல்லாம் காரணம் சாதிபேத மதபேதமென்னும் பொய்க் கட்டுப்பாடுகளே யாதலின் சீர்த்திருத்தக்காரரென வெளிவந்து டிப்ரஸ் கிளாசை சீர்திருத்தப் போகின்றோமென்பவர்கள் தங்களுக்குள்ள சாதிகர்வத்தையும், மதகர்வத்தையும் வித்தியாகர்வத்தையும் தன கர்வத்தையும் போக்கி சகோதர ஐக்கியத்தால் ஒற்றுமெய் பெறும் வழியில் நடத்தல் வேண்டும். அத்தகைய நடத்தலே சகல சீர்திருத்தங்களுக்கும் பீடமாகும். நமக்கு நாமே முயன்று முன்னேறுவோமாயின் கவர்ன்மென்டார் முயன்று பின்னேற்றிவைப்பார்கள். நம்முடைய முயற்சிகளும் செய் தொழிலும் யாதுமின்றி வாதிடுவது வீணேயாம்.

- 4:51: மே 31, 1911 -


213. வடஇந்திய பஞ்சாயத்து நியமனம்போல் தென்னிந்திய பஞ்சாயத்து நியமனம் சுகம்தருமோ?

ஒருக்காலும் தராவாம், காரணமோவென்னில் வடஇந்தியாவில் சாதிபேதமென்னும் கொடூரச் செயல்கள் அதிகம் கிடையாது. அதனினும் அங்குள்ள சிலர் முன்கோபிகளாக இருப்பினும் நியாயமும் கருணையும் அவர்களிடமுண்டு. அதனால் தங்களுக்குக் கொடுக்கும் பஞ்சாயத்தின் அதிகாரத்தை ஏழைக்குடியானவர்கள் மீதும் ஏழைக்கூலியாட்கள் மீதும் கருணைவைத்து பஞ்சாயத்தார் நடத்தவேண்டிய காரியங்களை நீதியின் வழியிலும் நெறியின் நிலையிலும் நின்று நடத்தி இராஜாங்கத்தோருக்குத் திருப்தியாக நடந்து கொள்வதுடன் குடிகளுக்கும் யாதொரு அன்னியாயமுமின்றி பஞ்சாயத்தின் தீர்மானங்களை முடிவு செய்து வருவார்கள். அதனால் குடிகளுக்குள்ள குறைகள் அப்போதைக்கப்போது நீங்கி ஏழை மக்களுக்கு அதிகச் செலவும் நேரிடாமல் சுகவாழ்க்கை பெறுவார்கள்.

அத்தகைய பஞ்சாயத்தை இத்தென்னிந்தியாவில் ஏற்படுத்துவதாயின் மூன்று பேர் ஓர் சாதியும் இரண்டுபேர் ஓர் சாதியுமாயிருப்பர், அல்லது நாலுபேர் ஒரு சாதியும் ஒருவர் ஒரு சாதியுமாயிருக்க நேரிடும். அதனால் சாதியாருக்கு சாதியார் ஒன்று கூடிக் கொண்டு பெருந் தொகையார் சம்மதப்படியே தங்கள் நியாயங்களை முடிவு செய்து ஏழைகளை அல்லோகல்லலடையச் செய்து மேலும் மேலும் செலவுகளை உண்டு செய்து விடுவார்கள். பட்டணவாசிகளும் தக்க பொருள் உள்ளவர்களுமானோர்களுக்கு ஒரு ரூபாய் கை நட்பு கிடைக்குமாயின் பொய்யைச் சொல்லி இரண்டு குடிகளைக் கெடுத்துப்பாழாக்கும் வித்தை சகஜமாயிருக்கின்றது.

நாகரிகமும் பணப்பெருக்கமுமில்லா நாட்டுப்புறங்களில் பெரியசாதியென்னும் பெயரை வைத்துக் கொண்டுள்ளவர்களிடத்தும் பத்து குடிகளைப் பாழ்படுத்தி தாங்கள் ஒருகுடிபிழைத்தால் போதும் என்னும் சீவகாருண்யமில்லாரிடத்தும் பஞ்சாயத்தை ஒப்படைப்பதாயின் நாட்டுப்புறங்களில் உள்ள ஏழைக் குடிகள் தற்காலம் படும் கஷ்டங்களினும் முப்பங்கு கஷ்டங்கள் அதிகரித்து முழுக் கேட்டிற்குள்ளாகிவிடுவார்கள்.

ஏழைக்குடிகளோ பஞ்சாயத்தார் செய்யும் அக்கிரமச் செயல்கள் எதையேனும் வெளிக்கு கொண்டு வந்து இராஜாங்கத்தோருக்கு விளக்கி விடுவார்களாயின் அக்குடிகள் அன்றே பாழடைய வேண்டியதேயாம். அவ்வகை விளக்காது அவர்களது துன்பத்தில் அழுந்திக் கொண்டே இருப்பதாயின் நாளுக்கு நாள் அவர்கள் நசிவதுடன் அந்தந்த கிராமங்களும் பாழடைவதுடன் விவசாயங்களும் விருத்தி கெட்டு பூமிகளும் பாழடைந்து போமென்பது திண்ணம்.