பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

354 / அயோத்திதாசர் சிந்தனைகள்

தாங்கள் வாங்கும் வரிகளோ, தேசச்சீரை நாடாமலும், மக்கள் சுகத்தைக் கருதாமலும் தங்கள் தங்கள் சுயநலத்தையும், சுய சுகத்தையுங் கருதுவதாகும்.

சு. பரதேசியாரே, சுயநலத்தைக் கருதும் வரியென்றும், பொதுநலத்தைக் கருதும் வரியென்றும் இருவகை வரிகளுண்டோ.

ப. சுதேசியாரே, அவற்றைத் தங்களனுபவத்திலுங் காட்சியிலும் அறிந்திருந்தும் வினவுவது வீண்வாதன்றோ.

சு. பரதேசியாரே, அது நமக்கு நன்குவிளங்கவில்லையே.

ப. சுதேசியாரே, அமாவாசிக்கு வாங்கும் வரி, யாருக்குப் பிரயோசனம். ஆவணியவிட்ட வரி யாருக்குப் பிரயோசனம். வருஷப்பிறப்பு வரி யாருக்கு பிரயோசனம். நோன்பின் வரி யாருக்குப் பிரயோசனம். பிள்ளைபெற்ற புண்ணியதான வரி யாருக்குப் பிரயோசனம். பிணம்விழுந்த வீட்டுப் புண்ணியதான வரி யாருக்குப் பிரயோசனம். கருமாதி வீட்டிற் கட்டியழும் வரி யாருக்குப் பிரயோசனம். புதுவீட்டிற்குக் குடிபோகும் புண்ணியதானவரி யாருக்குப் பிரயோசனம். உபநயனவரி யாருக்குப் பிரயோசனம். ருதுசாந்திவரி யாருக்குப் பிரயோசனம். கலியாணப் பெரும் வரி யாருக்குப் பிரயோசனம். கைம்பெண்களின் திதிவரி யாருக்குப்பிரயோசனம். கோவில்களின் உற்சவதட்சணை வரி யாருக்குப்பிரயோசனம்.

சு. பரதேசியாரே, தாங்கள் சொல்லிவந்தவைகள் யாவும், குரு தட்சணமேயன்றி வரிகளல்லவே.

ப. சுதேசியாரே, யாதொரு பயனுமற்ற குருக்களுக்கு இத்தியாதி தட்சணங்கள் வெறுமனே செலுத்திவருகின்றவர்கள் தேசத்தையும் தேகத்தையும் ரட்சிக்கும் அதிகாரிகளுக்கு செலுத்தும் வரியை அரசர் தட்சணை என்று ஆனந்திக்கலாகாதோ.

சு. பரதேசியாரே, குருக்களுக்கு ஈயும் தட்சணையால் ஒரு பயனுமில்லையோ

ப. சுதேசியாரே அவ்வாறு பயனுண்டாயின் குருக்களால் உண்டாம் பயன்களை விரலைவிட்டுச் சொல்லும் பார்ப்போம்.

- 4:46, ஏப்ரல் 26, 1911 -

சு. பரதேசியாரே, குருக்களுக் கீயுந் தட்சணைகளின் பலனை மறு ஜெநநத்தில் அநுபவிப்பார்கள்.

ப. சுதேசியாரே, அக்கதையானது இருட்டறையுள் ஒருவனிருந்து என்னைக் கண்சாடைக் காட்டினான் கைசாடை காட்டினானென்னும் இருட் செயலேயன்றி வெளிச்சத்தின் செயலல்லவே.

சு. பரதேசியாரே, இருட்டின் செயலென்றும், வெளிச்சத்தின் செயலென்று மிருவகையுண்டோ.

ப. சுதேசியாரே, தான் யதார்த்தத்தில் காணாததையும் தனக்கே தெரியாததையும் கண்டதைப்போலும், தெரிந்ததைப்போலும் பேசுவது இருட்டின் செயலாகும். தனக்குத் தெரிந்த வரையிலும், தான் கண்டவரையிலும் ஒளியாது பேசுதல் வெளிச்சத்தின் செயலாகும்.

சு. பரதேசியாரே, குருக்களுக்கு அளிக்கும் தட்சணைகள் யாவும் இருட்டின் செயலும், அரசாங்கத்தோருக்களிக்கும் வரிகள் வெளிச்சத்தின் செயலாமோ.

ப. சுதேசியாரே, அரசாங்கத்தோருக்கு அளிக்கும் வரிகள் யாவும் அநுபவத்திற்குங் காட்சிக்கும் பொருந்தி வெளிச்சத்தின் செயலாச்சுதே.

சு. பரதேசியாரே, அதைமட்டிலும் வெளிச்சத்தின் செயலென்று எவ்வாறு கண்டறிவது.

ப. சுதேசியாரே, ரோடு அல்லது பாதைகளின் வரியை எடுத்துப் பேசுவாம். வண்டிபாதை நடை பாதையாகிய பெரும் வீதி, சிறும் வீதிகளை சீர்திருத்தி மட்டஞ்செய்யுஞ் செலவு, அவைகளுக்கு கற்கள் போடவேண்டிசெலவு, அதன்மேல் மண்பரப்ப வேண்டிய செலவு, நீர் துளிக்கவேண்டிய செலவு, கற்களை கெட்டித்து பூமியில் பதிவுசெய்யவேண்டிய இயந்திரத்தின் செலவு, அவற்றை எப்போதும் பார்வையிட்டுவரும் இஞ்சினியர்களின் செலவு,