அரசியல் / 355
ஒவர்சியர்களின் செலவு, பியூன்களின் செலவு, குப்பைவண்டிகளின் செலவு, மாடுகளின் செலவு, அந்தந்த ஆட்களின் செலவுகளாகிய யாவும் ரோட்டுவரி என்று சொல்லி வாங்கும் பணத்திலிருந்தே செலவு செய்யல்வேண்டும். இத்தகையாக வாங்கும் வரிகளின் மொத்தமும் அதைக்கொண்டே செய்துவரும் செலவின் மொத்தமும் அநுபவத்திற்கும் காட்சிக்கும் பொருந்த விளங்குகின்றபடியால் இராஜாங்கத்தோர் வரி வெளிச்சத்தின் செயலென்றே கண்டறியல்வேண்டும்.
சு. பரதேசியாரே, மற்றுமுண்டாய இராஜாங்கத்தோர்களின் வரிகள் யாவும் வெளிச்சச்செயல்களாமோ.
ப. சுதேசியாரே, இராஜாங்கத்தோருக்கு அளித்துவரும் வரிகள் யாவும் குடிகளின் சுகத்தைக் கருதியே செய்துவரும் செலவுகளாதலின் அதனதன் வரவுசெலவுகளைக் கண்டே அதன் வெளிச்சத்தா லறிந்துக்கொள்ளலாமே.
சு. பரதேசியாரே, வரிவாங்கும் பணங்கள் யாவையும் செலவு செய்துவிடுகின்றார்களென்று எவ்வகையாற் கண்டறிவது.
ப. சுதேசியாரே, பொதுநலம் கருதாது சுயநலங் கருதுவோருக்கும், பொதுப் பிரயோசனங் கருதாது சுயப்பிரயோசனங் கருதுவோருக்கும் இந்த கருணை நிறைந்த பிரிட்டிஷ் ஆட்சியார் செய்துவரும் பொதுநலமும், பொதுப்பிரயோசனமும் விளங்கவேமாட்டாது. எவ்வகையி லென்பீரேல், லோபிக்கு யீகையாளன் குணம் விளங்கமாட்டாது. பாபிக்கு புண்ணிய புருஷன் செயல் விளங்க மாட்டாது. ஆதலின் பத்துக் குடிகளைக் கெடுத்து தங்கள் குடிகள் மட்டிலும் சுகமடைய வேண்டுமென விரும்பும் சுயப்பிரயோசன செயலையுள்ளார்க்கு பொதுப் பிரயோசனங்களின் செயலும் அதன் பயன்களும் விளங்கவேமாட்டாது, காமாலைக் கண்ணனுக்கு சூரியன் மஞ்சள் நிறமாகத் தோற்றுவதுபோல் லோபிக்குப் புண்ணியபுருஷர் செயல் லோபமாகவே விளங்கும்.
- 4:47; மே 3, 1911 -
சு. பரதேசியாரே, வரிவாங்கும் சகல தொகைளையுங் குடிகளுக்கென்றே செலவிடுகின்றார்களோ.
ப. சுதேசியாரே, அதன் விவரங்களைத் தங்கள் ஆயத்துரை வருமானத்தைப்போல் எண்ணிக்கொண்டீர் போலும்.
சு. பரதேசியாரே, ஆயத்துரை என்பதெது. அதன் வருமானங்களெவை, சற்று விவரிக்கவேண்டியது,
ப. சுதேசியாரே, தற்காலம் சுங்கச்சாவடியென்று வைத்திருக்கின்றார்களே அதுபோல் சிலகாலங்களுக்குமுன் ஆயத்துரையென்றும் அங்கு உழ்க்கார்ந்து பணம் வசூல் செய்வோன் தேச ஆயச்செட்டியொன்றும் வழங்கி வசூல் செய்யும் பணங்களை அரசர்களுக்கு அளிப்பதும் தாங்கள் சுகிப்பதுமாகியச் செயலில் இருந்ததுண்டு. அதைக் குடிகளுக்குரிய பொதுநலங்களுக்கு உபயோகிப்பதே கிடையாது. தற்கால பிரிட்டிஷ் ஆட்சியார் வாங்கும் சுங்கத்தைக் கொண்டு முநிசபில் எல்லைக்கு அப்புறப்பட்ட ரோடுகள் போடுவதற்கும், அப்போதைக்கப்போது பழுதுபார்ப்பதற்கும், தங்கும் சத்திரங்களை வழிகளில் கட்டுவதற்கும், அவைகளைப் பழுது பார்ப்பதற்கும் லோகல்பண்டென வகுத்து அனந்த சீர்திருத்தங்களுக்கு உபயோகப்படுத்தி வருகின்றார்கள்.
சு. பரதேசியாரே, பிரிட்டிஷ் ராஜாங்கத்தோர் பெற்றுவரும் வரிகளைக்கொண்டு குடிகளுக்கு என்ன உதவி புரிகின்றார்கள்.
ப. சுதேசியாரே, அவர்கள் வாங்கும் வரிகளை விட ஒவ்வோர் காலங்களில் அதிக செலவு நேரிட்டிருக்கலாமென்பது திண்ணம்.
எவ்வகையிலென்பீரேல், நமது கருணைதங்கிய ராஜாங்கத்தார் குடிகளுக்குண்டாம் வியாதிகளையும் அபாயச்செயல்களையுங் காப்பதற்கு ஓர் வைத்தியசாலைக் கட்டவேண்டுமானால் எவ்வளவோ பணவிரயஞ் செய்கின்றார்கள். குடிகளுக்குக் கள்ளர் பயம், கொடியர் பயம் நேராது