அரசியல் / 363
அறக்கோணத்தைச்சார்ந்த ஏழை கிராமக் குடிகளின் பிரையாது அதிகாரிகளிடம் விசாரிணையிலிருக்கின்றது. அவை முடிந்தபின்னர் அக்கிராமப் பெயரையும், கிராமக் குடிகளின் பெயரையும், அவர்கள் அடைந்த துன்பங்களையும், அவற்றை நடத்தியவர்களின் பெயர்களையும் நமது பத்திரிகையில் விவரமாக வெளியிடுவோம்.
- 5:2; சூன் 21, 1911 -
218. ஆர்.டபள்யூ.டிஇ ஆஷ்ஷி அவர்கள் மறைந்துவிட்டார்
அதாவது நமது திருனெல்வேலி கலைக்ட்டரவர்கள் சீர்மையினின்று இந்தியாவில் வந்து தனது பிரிட்டிஷ் ஆட்சியின் கலைக்ட்டர் உத்தியோகத்தைக் கைக்கொண்டு இவ்விடமுள்ள பூமிகளின் விஷயங்களையும் அந்தந்த பூமிகளின் நீர்ப்பாய்ச்சல் விஷயங்களையும், அங்கங்கு வாழும் குடிகளின் விஷயம், சாதி சமய விஷயங்களையும் நன்காராய்ந்தும், நாளாகத் தனது அநுபோகத்திற் கண்டறிந்தவரும் தேச சீர்திருத்தங்களைச் செய்ய வல்லவருமாகவிருந்த ஓர் துரைமகனை ஓர் படுபாவியாகிய துஷ்ட்டன் கொன்றுவிட்டானென்றவுடன் சகல விவேகமிகுத்த மேதாவிகளும் துக்கத்தில் ஆழ்ந்தினார்களென்பதற்கு ஆட்சேபமில்லை.
காரணமோவென்னில், இத்தேச சீர்திருத்த ஆலோசனைச் சங்கத்தில் ஆயிரங் குடிகள் சேர்ந்து உழ்க்காருவதினும் ஓர் அனுபவமிகுத்த கலைக்டர் உழ்க்காருவாராயினும் சகல சீர்திருத்தங்களையும் செவ்வனே முடித்து சகலகுடிகளும் சுகம் பெறும் வழியைத் தேடுவார். மற்றைய தேசங்களில் பாஷையும் ஒன்று, சாதியும் ஒன்று மதமும் ஒன்றாதலின் தேச சீர்திருத்தங்களை குடிகளே செவ்வை செய்து கொள்ளுவார்கள். இத்தேசமோ பல பாஷை, பல சாதி, பலமதங்கள் நிறைந்து பாழடைவதற்குரிய ஏதுக்களிலேயே இருக்கின்றவர்களாதலின் குடிகளால் ஆலோசினை சீர்திருத்தங்கள் செவ்வனே முடிவது மிக்கக் கஷ்டமாகும். கலைக்ட்டர்களோவெனில் பல டிஸ்டிரிக்ட்டுகளிலுஞ் சென்று அங்கங்குள்ள பாஷைக்காரர்களின் கூட்டுறவுகளையும், அவரவர்கள் மதாசாரங்களையும் நன்காராய்ந்து அநுபவத்திலிருப்பவர்களாதலின் முக்கிய ஆலோசினை சங்கத்திற்கு வந்தபோது அந்தந்த தேசபாஷைக்காரர்களின் அநுபவங்கொண்டு அவரவர்களுக்கு உற்ற குறைகளை நீக்கி ஆதரிக்கும் வழிகளைத் தேடுவார்கள். அதனால் தேச சீர்திருத்தமும் குடிகளது சீர்திருத்தமும் உண்டாகி சகலரும் சுகம் பெறுவார்கள்.
தேச சீர்திருத்தத்திற்கும் குடிகளின் சுகங்களுக்கும் ஆதாரபூதமாக விளங்கிய திருனெல்வேலிக் கலைக்ட்டர் துரையவர்களை இழந்தது இத்தேசத்தோர் செய்த தௌர்ப்பாக்கியமேயாம். ஓர் தேசத்தில் இருபது இருபத்தைந்து வருடம் கலைக்ட்டரலுவலை நடத்தி அங்கங்குள்ளவர்களின் குணாகுணங்களை உணர்ந்து அநுபவத்திலிருப்பவர்கள் இத்தேசக் குடிகள் இன்னின்ன அநுபவமுள்ளவர்களென்றும் அவர்களுக்கு இன்னின்னது வேண்டியிருக்குமென்றும் கண்டறிந்து ஆலோசினை சங்கங்களிற் பேசி சுகச்சீரளிக்கக்கூடிய ஓர் துரைமகனை இழந்தது திருனெல்வேலி குடிகளுக்கு மட்டிலும் துக்கமன்று, தென்னிந்தியா முழுவதுக்குந் துக்கமேயாம்.
இத்தகையப் பெருந் துக்கத்திற்குக் காரணஸ்தனாம் படும்பாவி எத்தேசத்திலிருந்தவன் எக்குடியைச் சார்ந்தவன் என்ன உத்தியோகஸ்தன் என்பது இன்னும் விளங்காதது மிக்க விசனமேயாம்.
இவ்வஞ்சநெஞ்ச மிகுத்தப் படுபாவி செய்த பெருங் கொலையை ஆலோசிக்குங்கால் இந்த பிரிட்டிஷ் அரசாட்சியோரை சொற்ப பயமுறுத்தியதால் பெரிய உத்தியோகங்களை நமக்குக் கொடுத்துக்கொண்டு வருகின்றார்கள். இன்னும் பயமுறுத்தினால் ராஜாங்கத்தையே நம்மவர்களிடம் ஒப்படைத்துவிட்டுப் போய்விடுவார்களென்னும் ஓர் அவாக்கொண்டே இக்கொலையை நிறைவேற்றி இருப்பானென்றும் விளங்குகின்றது. மற்றப்படி இக்கொலைக்கு வேறுகாரணங் கூறுதற்கு வழியொன்றுங் காணோம். முன்பு