உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

368 / அயோத்திதாசர் சிந்தனைகள்

முன்னுக்கு வருவதை பொறுக்கா பொறாமெயுடையோர் தங்கள் சொந்தப்பணங்களைக்கொண்டு டிப்பிரஸ்கிளாசை சீர்திருத்தி முன்னுக்குக் கொண்டுவரப் போகின்றார்களென்பது மெய்யாமோ.

ஒருக்காலும் மெய்யாகாவாம். பஞ்சமரென்போர் பணத்தைக்கொண்டே பஞ்சமர்களை முன்னுக்கு வர மனஞ்சகியாதவர்கள் தங்கள் சொந்தபணங்களைச் செலவுசெய்து பஞ்சமரென்போரை முன்னுக்குக்கொண்டுவரப் போகின்றோமென்பது முற்றிலும் பொய், பொய், பொய்யென்றே பொருந்தும், (பண்டு) களில் பஞ்சமர்களெனத் தள்ளிவிட்டு சென்சஸ் கணக்கில் இந்துக்களென சேர்த்துக்கொள்ள பார்க்கும் சுயப்பிரயோசனமுள்ளாரைச் சாராதிருப்பார்களென நம்புகிறோம். ஏழைக்குடிகள் பணம் சேர்க்க வேண்டுமாயின் கருணை தங்கிய கவர்ன்மெண்டார் ஏற்படுத்தியுள்ள (சேவிங்) பாங்கிகளில் சேர்த்துவருவது உத்தமமும் பாக்கியமுமாகும். கல்வியிலுங் கைத்தொழிலிலும் முன்னேற விருப்பமுள்ளவர்கள் டிப்பிரஸ் கிளாசெனக் கூறித்திரியும் (மிஷனை) நாடாது பிராட்டிஸ்டென்ட் கிறிஸ்டியன் மிஷனை நாடுவதே நலந்தரும். மதக்கடை பரப்பி சீவிப்பதைப்போல் டிப்பிரஸ்கிளாஸ் கடைகளைப் பரப்ப யோசிக்கின்றார்கள். ஏழைக்குடிகளவர்களை நாடாமலும், பல சாதி பண்டுகளை சாராமலும் ஜாக்கிரதையில் முன்னேறுவதே நலமாம்.

- 5:8; ஆகஸ்டு 2, 1911 -


222. கனந்தங்கிய கோகேல் அவர்களின் கூட்டமும் ஏதுமில்லா வாட்டமும்

கனந்தங்கிய கோகேலவர்கள் வடதேசத்திலிருக்குங்கால் இந்திய சிறுவர்களுக்குக் கல்வி கற்பிக்கும்படியான விஷயத்தில் மிக்க உழைக்கின்றா ரென்றும், கருணைதங்கிய ராஜாங்கத்தோரிடத்துங் கேட்டுவருகின்றா ரென்றுங்கேட்டு மிக்க ஆனந்தத்திலிருந்தோம். அத்தகைய கனவான் தென்னிந்தியாவை நாடி சென்னைக்கு வந்திருந்தபோது பகிரங்கமாய்க் கூட்டங்களை வைத்து யாதொன்றையும் பேசாது தங்களுக்குரியவர்களை மட்டிலும் சேர்த்துக்கொண்டு தங்களுக்குரியவற்றைப் பேசிவிட்டுப்போயதாக விளங்குகின்றது. சகல மனுக்களுக்கும் பொதுவாயக் கூட்டங்கூடி சகலருக்கும் பொதுவாகக் கலாசாலை வைக்க வேண்டுமென்னும் பொதுநல முயற்சியீதாமோ. நல்லெண்ண முயற்சியால் சகல மக்களுக்கும் கல்விகற்பிக்க வேண்டுமென்னுங் கருணை வைத்துள்ளவராயின் பயிரங்கக்கூட்டங்களை வைத்து தனது நன்னோக்க அபிப்பிராயத்தை செய்துவைப்பார். அங்ஙன மிராதபடியால் தங்களுக்கு உரித்தாயவைகளைப் பேசி முடிவு செய்து விட்டுப் போய்விட்டார்.

அதனால் இஃது பொதுநல சுகமன்று. சுயநலசுகமென்றே பகருகின்றார்கள். அத்தகையப் பகட்டிற்கு ஆதாரமாக நமது கனந்தங்கிய கோகேல் அவர்கள் இந்தியாவிலுள்ள சிறுவர்கள் யாவருக்கும் இலவசக் கல்வி கொடுக்க வேண்டுமென்று கவர்மென்டாரை கேட்கவும் தகுமோ. அங்ஙனம் அவர்களால் கொடுக்கவும் போமோ. யாதென்பரேல், இந்தியாவிலுள்ளக் குடிகளில் தங்கள் சொந்த பணங்களை செலவு செய்து சிறுவர்களுக்குக் கல்விகற்பிக்கக் கூடிய கனவான்கள் நூற்றிற்கு நாற்பது பெயரிருக்கின்றார்கள். இவர்கள் யாவருங் கருணைகொண்டு கலாசாலைகளை நிறுமிப்பார்களாயின் மற்றுமுள்ள எழியச் சிறுவர்களும் அவ்விடஞ்சென்று கல்வியைக் கற்றுக்கொள்ளுவார்கள். இத்தகைய முயற்சியைக் கனவான்களைக் கொண்டே நமது கோகேலவர்கள் முடிவுசெய்யாது இந்தியாவிலுள்ளக் கனவான்களின் பிள்ளைகளானாலுஞ் சரியே, ஏழைகளது பிள்ளைகளானாலுஞ் சரியே அவர்கள் யாவருக்கும் கவர்ன்மெண்டார் இலவசக்கல்வியளிக்க வேண்டுமென்று கேட்பதாயின் பொதுவாய ஆலோசனைக்குப் பொருந்துமோ, செலவும் சொற்பமாகுமோ. இப்போது கவர்ன்மெண்டாரால் கல்வி சாலைகளுக்கு அளித்துவருந் தொகையுடன் சகல சிறுவர்களுக்கும் இலவசக்கல்வி கற்பிப்பதாயின் எவ்வளவு பெருந்தொகை வேண்டுமென்னுங்கணக்கை கனந்தங்கிய கோகேல்