பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

370 / அயோத்திதாசர் சிந்தனைகள்

அறியாதவரோ. எல்லாம் அறிந்திருந்தும் அவரது நோக்கத்தை ஆராயுங்கால் அனந்தம்பேர் இந்தியாவில் படித்துவிட்டு வேறுதொழில் செய்வதற்கும் கஷ்டப்படுவதற்கும் இல்லாமலிருக்கின்றபடியால் குறைந்தது கலாசாலையொன்றுக்கு மூன்று நான்கு உபாத்தியாயர்களை நியமிக்கினும் பலபெயர் சுகசீவனம் அடைவார்களென்னும் சுயநலக் கருத்தாகவே விளங்குகின்றது.

இத்தகையக் கருத்தால் இன்னுமுள்ளோரும் சோம்பலுற்றுக் குடி கெடுவார்களன்றி சீர்பெறமாட்டார்கள். சீர்பெறவேண்டுமாயின் அந்தந்த முநிசபில் எல்லைக்குட்பட்ட கனவான்கள் யாவரும் ஒன்றுகூடி சாதிபேதம் சமய பேதமென்னும் பொறாமெய் நாற்றங்களை அகற்றிவிட்டு கல்வி சாலை, கைத்தொழிற்சாலைகளை நிறுமித்து சகல மக்களுக்கும் பேதமின்றி சமரசக் கல்வியையுங் கைத்தொழிலையுங் கற்பிக்க ஆரம்பிப்பார்களாயின் கருணை தங்கிய ராஜாங்கத்தோரும் தங்களாற் கூடியவுதவி செய்வார்கள்.

இத்தகையப் பொதுவாயச் செயலை விட்டு குறித்தவர்கள் மட்டிலும் ஓர் கூட்டங்கூடி தங்கட்கு உரித்தாய செயலைப்பேசி பொதுநலங்காட்டி சுயநலம் விரும்புவதாயின் ஏழைகளுக்கு வாட்டமுண்டாவதுடன் இராஜாங்கத்தோர் திருவுளப் பொதுக் கருணையும் அம்மட்டு, அம்மட்டேயாம்.

- 5:9; ஆகஸ்டு 9, 1911 -


223. கனந்தங்கிய கோகேல் அவர்களின் நோக்கம்

நமது கனந்தங்கிய கோகேலவர்கள் உலகமக்களின் விசாரிணைப் புருஷரும், பொதுநல சீர்திருத்தக்காரரும், இந்திய தேசம் சிறப்படைய வேண்டுமென்னும் நன்னோக்கமுடையவருமாய் இருப்பது யதார்த்தமாயின் இவ்விந்தியதேசத்தில் நூதனமாக ஏற்படுத்திக்கொண்ட சாதிபேதமென்னுங் கொறூரச் செயலினால் ஆறுகோடிக்கு மேற்பட்ட மக்கள் அன்னத்திற்கு அல்லலடைந்தும், ஆடைக்கு அவதியுற்றும் அலைவதுடன் முநிசபில் எல்லைக்கு அப்புறப்பட்டுள்ள கிராமங்களில் அம்மட்டர்களை சவரஞ் செய்யவிடாமலும், வண்ணார்களை வஸ்திரமெடுக்கவிடாமலும், சுத்தநீரை மொண்டு குடிக்கவிடாமலும் அவர்கள் தங்களுக்குத்தாங்களே பூமிகளை உழுது பயிரிட்டு சீவிக்கும்படி கருணைதங்கிய கவர்ன்மென்றாரை அணுகி பூமி கொடுக்கவேண்டுமென்று கேட்குங்கால் அதற்காய சாக்குபோக்குகளைச் சொல்லி கொடுக்கவிடாத ஏதுக்களை செய்துக்கொண்டும் பலவித இம்சைகளைச் செய்து ஈடேறவிடாமல் பாழ்படுத்துஞ் செயல்கள் சகலருக்குந் தெரிந்திருக்க கனந்தங்கிய கோகேலவர்களுக்குமட்டிலும் தெரியாமற்போயதோ.

ஏதேதோ சீர்திருத்தங்களை செய்யவேண்டுமென்று வெளிதோன்றுகிறவர்கள் சீர்கேடடைந்துள்ளவர்களை நோக்காமலும் அவர்கள்படுங் கஷ்டநிஷ்டூரங்களைக் கவனியாமலும் “கனத்தின்மீது வளை” வென்னும் பழமொழிக்கிணங்க முன்னுக்கு வந்துள்ளவர்களே சுகம்பெற வேண்டும் மற்றய ஏழைகள் யாவரும் சீர்கெட வேண்டுமென்னுங் கெட்ட எண்ணங்களைப் பதியவைத்துக்கொண்டு சீர்திருத்தக்காரரென வெளிதோன்றுவதாயின் எடுத்தவிஷயம் ஈடேறுமோ, ஒருக்காலும் ஈடேறாவாம். அங்ஙனம் இவை ஈடேற்றம்போல் தோற்றினும் அஃதிழிவடையுமேயன்றி புகழடைய மாட்டாவாம்.

காரணமோவென்னில், “ஏழைக ளழுதக் கண்ணீர் கூரியவாளுக் கொக்கும்” என்னும் பழமொழிக்கிணங்க பூர்வகாலத்தின் இத்தேசச் சிறந்த குடிகள் இரந்து தின்னவும், இத்தேசம்வந்து குடியேறி இரந்து தின்னவர்கள் சிறந்து நிற்கவுமானதேயாம்.

வஞ்சினத்தாலும் சூதினாலும் குடிகெடுப்பினாலும் சிறந்து நிற்பவர்கள் எக்காலும் சிறப்பைப் பெறமாட்டார்கள். நீதியினாலும், நெறியினாலும், அன்பின் மிகுந்த ஒழுக்கத்தினாலும் சிறந்து நிற்பவர்கள் எக்காலுஞ் சிறந்தேநிற்பார்கள் என்பது துணிபு.