xlii / அயோத்திதாசர் சிந்தனைகள்
வியப்புடன் கேட்கிறார். மேலும், “தென்னாப்பிரிக்காவில் உள்ள இந்தியர்கள் தங்களுக்குத் தாங்களே கேட்டை விளைவித்துக் கொண்டது போக ஏழைக் கூலிகளையும் துன்பத்திற்கு உள்ளாக்கிவிட்டது சிறக்க விளங்குகிறது ... இத்தேசத்திலுள்ள ஆறுகோடி இந்திய ஏழைகள் கண்ணீருடன் கதறுவதை நோக்காது தென்னாப்பிரிக்காவிலுள்ள இந்தியர்களுக்குப் பரிந்து பேசுவது விந்தையிலும் விந்தையே...” (தமிழன் -7.1.1914)
“சௌத் ஆப்பிரிக்காவிலுள்ள ஐரோப்பியர்கள் இந்தியர்களை மிக்கக், கஷ்டப்படுத்துகிறார்கள் என்றும் கறுப்பு தேசத்திற்கும் வெண்தேசத்திற்கும் வித்தியாசம் பாராட்டியே பிரித்து நடத்துகிறார்கள் என்றும் கூட்டங்கள் கூடி பேசும்படியானவர்கள் தங்கள் சுய தேசத்திலேயே கறுப்பாயிருக்கும் சாதிபேதமற்ற ஆறுகோடி மக்களை கறுப்பாயிருக்கும் பலகோடி மக்கள் ஒன்று கூடிக் கொண்டு கொல்லாமல் கொன்றுவிடும் பாவிகளின் செயல்களை இக்கூட்டங்கள் கூடி பேசும் பெரியோர்கள் அறியார்களோ” (தமிழன் - 10.9.1913)
என்று சலிப்புடனும் வெறுப்புடனும் கேட்கிறார். இந்திய நாட்டிலே அரை வயிறு கஞ்சிக்கும் வழியில்லாமல் வாடிய மக்கள் அயல் நாடுகளுக்குச் சென்று பொருள் சம்பாதிப்பதை அயோத்திதாசர் வரவேற்கிறார். “தென்னாப்பிரிக்காவுக்கு இந்தியர்கள் கூலிகளாகச் சென்றார்கள். இவர்களில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட கூலிகள் நூறு பவுன், இருநூறு பவுன் கையிருப்புடன் இந்தியாவிற்கே திரும்பி வந்தார்கள்” (தமிழன் - 24.12.1913)
என்ற செய்தியையும் தெரிவிக்கிறார். அயோத்திதாசர் அதில் மகிழ்ச்சியடைகிறார் என்று தெரிகிறது. இந்த வருவாயும் கெட்டுவிடக்கூடாது என்றும் அவர் எண்ணுகிறார். தென்னாப்பிரிக்கா சென்று அங்குள்ள இந்தியர்களுக்காகப் போராடுவோரால் இந்திய முன்னேறிய வணிக மக்களிலிருந்து அடிமட்டக் கூலித் தொழிலாளர் வரையிலுள்ள எல்லா தரப்புமக்களும் பாதிக்கப்பட்டார்கள். இதில் அதிகமாக துயரத்திற்குள்ளானோர் தாழ்த்தப்பட்ட மக்களே ஆவர். இது அதே காலத்தில் இருபது ஆண்டுகள் தென்னாப்பிரிக்காவில் கணக்காயராக பணியிலிருந்த ஆதிதிராவிட தலைவரான இரட்டைமலை சீனிவாசனார் அறிந்ததுதான். எனவே அயோத்திதாசரின் கேள்வி நியாயமானதேயாகும்.
எனவே, சமுதாயம் முதலில் சீர்திருத்தப்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் அயோத்திதாசர் அதை அரசே செய்யவேண்டுமென்றும் எதிர்பார்க்கிறார். ஆயினும் ஆளுவோருக்கு சமுதாயப் பிரச்சினைகளை எடுத்துக்கூறி தீர்வுகாண சமூகப் பிரதிநிதிகள் அரசியல் வாய்ப்பும் பெற வேண்டுமென்று வலியுறுத்துகிறார். 1900இல் இதற்கான சூழ்நிலை கனிந்தது.
இந்திய சமுதாயங்கள் தங்கள் பாதுகாப்பிற்காக அரசியலில் வாய்ப்பு கோரியதன் விளைவாக ஆங்கில அரசு சில சீர்திருத்தங்களை மேற்கொண்டது. 1909இல் மிண்ட்டோ -மார்லி குழு அளித்த அறிக்கையின் பயனாக சட்டமன்றங்கள் விரிவு படுத்தப்பட்டு பிரதிநிதிகள் தெரிந்தெடுக்கப்பட்டனர். 1919இல் மாண்ட்டேகு - சேம்ஸ்போர்ட் குழு மேலும் சில சீர்திருத்தம் மேற்கொண்டது. 1909இல் வர இருக்கும் மார்லி குழுவைப் பற்றி 1908இல் ஆதிதிராவிடர் கவனத்திற்காக எழுதினார்:
“பிரிட்டிஷ் ராஜாங்க சங்கத்தின் பெருந்தொகையாயிருந்து பேச வேண்டிய விஷயங்களுக்கு பார்சிகளும், சிக்ஸ்களும், கிறிஸ்தவர்களும், பௌத்தர்களும், மற்ற தாழ்ந்த குடிகளும் தங்கள் தங்கள் மரபிலுள்ளோர் பெருந்தொகைக்குஞ் சிறுதொகைக்குந் தக்கவாறு பிரதிநிதிகளைத் தெரிந்தெடுத்து மேற்படி சங்கத்திற் சேர்ந்து ஆலோசனை முடிவு செய்யலாமென்று வகுத்திருக்கின்றனர்.
ஆயினும் சாதி பேதமற்ற திராவிட மகாஜன சபையோரனுப்பியுள்ள விண்ணப்பத்திற்கு பதில் சென்னை இராஜதானி சீர்திருத்த சங்கத்தோர் அவைகள் யாவற்றையும் விளக்கி வெளியிடுவார்கள் போற் காண்கிறது. அத்தகைய விளக்கவுரை வெளிவந்தவுடன் சகல தேசங்களிலும் பரவியிருக்குஞ் சாதி பேதமற்ற திராவிடர்களுக்குத் தெரிவிப்பதுடன் சகல தேச பிரதிநிதிகள் வந்திருந்து பெருங்