உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறப்புரை / xliii

கூட்டம் நடக்கவேண்டிய காரணமும் நேரிடும்... ஆதலின் நமது சாதி பேதமற்ற திராவிடர்கள் யாவரும் காரணங்களிற் கண்ணோக்கம் வைத்திருந்து காரியத்தை நிறைவேற்றுவார்களென்று நம்புகிறோம்” (தமிழன் - 23.12.1908)

என்று அவர் 1891ஆம் ஆண்டு சீர்திருத்தம் கோரி இந்திய நேஷனல் காங்கிரசுக்கு எழுதியதை நினைவுபடுத்தி வர இருக்கும் மிண்டோ -மார்லி குழுவினரின் சீர்திருத்த திட்டத்தில் தமது அரசியல் வாய்ப்பைப் பெற ஆதிதிராவிடர்களையும் அவர்களது அமைப்புகளையும் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆதிதிராவிடர்களும் எச்சரிக்கையாகத்தான் இருந்தார்கள். மார்லி குழு இந்திய பிரச்சினையை மத ரீதியாகவே பார்த்தது. அதனால் மகமதியர்களுக்கு தனித்தொகுதி என்ற சலுகை கிடைத்தது. தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிடர்கள் இந்துக்களுக்குள் அடக்கப்பட்டு ஏமாந்தார்கள்! அயோத்திதாசரால் வருந்தத்தான் முடிந்தது:

“ஏழாவது எட்வர்ட் பிரபு தனது பூரணக் கருணையால் இந்து தேசத்தில் குடியிருக்கும் ஏழை குடிகளை முன்பு சீர்திருத்தி சகல விஷயங்களிலும் சமரச நிலைக்குக் கொண்டு வந்து பின்பு இந்துக்களுக்கு சிற்சில அதிகார நியமனங்கொடுக்க வேண்டுமென்ற உத்தேசமுடையவராய் லார்ட் டமார்லி அவர்களின் பிரேரணைக்கு முன்பே தனது அபிப்பிராயத்தை வெளியிட்டிருக்கிறார்.

“... லார்ட் மார்லி அவர்கள் கவனியாமலும் தனது விசாரணைக் கெட்டிய வரையில் இந்து தேசத்தில் வாசஞ் செய்பவர்கள் யாவரையும் இந்துக்களென்று எண்ணங்கொண்டு நூதன சட்டங்களை நிரூபிக்க ஆரம்பித்துக்கொண்டார் ... மகமதியர் வேறென்றும் இந்துக்கள் வேறென்றும் பிரிக்க ஆரம்பித்துக் கொண்டார். ஆனால் இந்துக்குள் இடிப்பட்டு நசிந்துவரும் முக்கிய வகுப்பாரை கவனித்தாரில்லை ...

... இத்தகைய சாதி பேதமுள்ளோர் மத்தியில் வாசஞ்செய்யும் அறுபது லட்சத்திற்கு மேற்பட்ட சாதி பேதமல்லாத பூர்வ திராவிடக் குடிகளை கருணைதங்கிய பிரிட்டிஷ் ராஜாங்கத்தோரே கவனிக்காமல் விட்டுவிடுவதானால் ... அலைந்து மடியவேண்டியதேயாம். மார்லியவர்கள் ..... ஏழைகளின் மீது இரக்கம் வைக்காத காரணம் விளங்கவில்லை (தமிழன் -3.3.1907)

என்று தன் மனநிறைவின்மையை வெளிப்படையாகவே எழுதினார். அயோத்திதாசர் ஒரு அரசியல்வாதியல்ல. முழுக்க முழுக்க சமூகம் முன்னேற வேண்டும் என்ற சிந்தனையாளர். ஆயினும் அது அரசியல் பிணைப்புடன்தான் முன்னேற முடியும் என்பதை அரசியல் ரீதியாக பொதுமக்களுக்கும் ஆளுவோருக்கும் எடுத்துக்கூறி சிந்திக்கத் தூண்டினார்.

கடவுள்

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதைப் பற்றியோ - மன உளைச்சலுக்கு வடிகாலாக சொல்லப்படுகிற கடவுள் தன்மையைப் பற்றியோ அயோத்திதாசர் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை . ஆனால் “கடவுள்” என்பதற்குக் கூறும் கருத்துகளையும் கதைகளையும் விமர்சனம் செய்கிறார். விளக்கம் தருகிறார்.

கடவுள், மதம் என்பதெல்லாம் மக்களின் நன்மைக்குப் பயன்படாமல் போனால் அப்படிப்பட்ட மதம், கடவுள் தேவையற்றது என்பதுதான் அயோத்திதாசரின் கருத்து என்று தோன்றுகிறது. ஒரு மனிதர் தந்த போதனைகளே மதமென்று போற்றப்படுகிறது. அம்மனிதர் போற்றப்படுவதிலிருந்து வணங்கப்படுவராக மாறும்போது அம்மாமனிதர் கடவுளாக்கப்படுகிறார். ஏனெனில் அம்மாமனிதர் கூறிய கருத்துகள் மக்களை ஏதோ ஒருவகையில் நெறிப்படுத்துகிறது. வாழ்க்கை நெருடல்களிலிருந்து காப்பதாக நம்பப்படுகிறது. அத்தகைய வாழ்க்கைக்கு உகந்த நன்னெறிகளைக்கூறி நன்மை செய்தவர்களே கடவுள் எனக் கூறப்படுகிறது என்று எண்ணுகிறார்.

“கடவுள் என்பதற்கு நிகண்டில்...நன்மையென்னும் பொருள் கூறியிருக்கிறார்கள். இதையனுசரித்தே கடவுள், கடவுளர் என்னும் மொழிகளும்