பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 387

வரையில் வட்டிசேரவில்லை என வேலை வாங்கிக் கொண்டுவரும் நிர்ப்பந்தங்களையும், பெரியசாதியோனென்போன் குடியனாயிருப்பினும், திருடனாயிருப்பினும், கொலைஞனாயிருப்பினும், பொய்யனாயிருப்பினும் இவ்வேழைக்குடியானவன் ஒருவனைக் கண்டவுடன் இவன் தாழ்ந்த சாதியான் நீச்சசாதியானெனக் கூறி நாணமடையச் செய்வதுடன் அன்னிய தேசத்தினின்று இவ்விடம் வந்து குடியேறும் நூதன மக்களுக்கும் இழிவாகக்கூறி அவர்களாலுஞ் சீர்கெடுத்துவரும் வஞ்சினங்களையும் தாழ்ந்த சாதியோன் ஒருவனிருக்கின்றானென்று கூத்து மேடைகளில் இளித்துக் காட்டுகிறதும் வீதி வீதியாய்ப் பழித்துப் பாடுகிறதுமாகிய இழிச்செயல்களால் மனங்குன்றியும் நாணடைந்து வருங்கொறூரத் துன்பங்களை கண்டுங்காணாததுபோல் இருக்கின்றார்களன்றி மக்களை மக்களாக நோக்குவோரைக் காணோம். மக்களை மிருகங்களினும் தாழ்ச்சியாகவே எண்ணி தலையெடுக்கவிடாமற் செய்துவருகின்றார்கள்.

பெரியசாதிகளென வேஷமிட்டு இவ்வேழைக்குடிகளை சுத்தநீரை மொண்டு குடிக்கவிடாமல் துரத்தியடிப்பவர்கள் மற்றெந்த சுகத்தை அடையவிடுவார்களென்பதை கருணைமிகுத்த விவேகிகளே கண்டு கொள்ளவேண்டியதாகும்.

சுத்தநீரை மொண்டு குடிக்கவிடாமலும் அம்பட்டனை சவரஞ் செய்யவிடாமலும் வண்ணானை வஸ்திரமெடுக்கவிடாமலும் தங்களது கல்விசாலைகளில் சேர்ந்து வாசிக்கவிடாமலும் சீர்கெடுத்துக் கொல்லாமற் கொன்றுவருங் கொடூறச் செயல்களைக் கண்டிருந்ததும் இவ்வாறு கோடி மக்களின் அல்லலை நீக்குங் கருணைமிகுத்தோர் ஒருவரையும் காணாத்தால் இந்தியதேசச் சக்கிரவர்த்தியாகத் தோன்றி இந்தியாவில் வந்து முடி சூட்டிக் கொள்ளுங் கருணைவள்ளலாம் மகாராஜா ஐந்தாவது ஜார்ஜ் சக்கிரவர்த்தியாருக்கும், மகாராணி மேரி சக்கிரவர்த்தினியாருக்கும், பணிவான வந்தனங்கூறி இந்தியாவிலுள்ள சகலசாதி மக்களுக்குப் பட்டங்களும் பணங்களும் அளித்துக் குதூகலிக்கச் செய்வதுபோல் சக்கிரவர்த்தியார் முடி சூட்டின் வைபவக் காலக்குறிப்பு ஆறுகோடி மக்கள் இதயத்தில் எக்காலும் ஊன்றி சிந்தித்து இராஜ விசுவாசத்தில் லயிப்பதற்காய அறத்தை எதிர்நோக்குகின்றார்கள்.

அத்தகைய அறங்கள் யாதெனில்:-

பூமிகளை பண்படுத்துவதற்கும் தானியங்களைப் பயிரிட்டுவிருத்தி செய்வதற்கும் இவ்வேழைக்குடிகளே உரியவர்களும் உழைப்பாளிகளுமாதலின் இவர்களுக்கென்று புரோட்டிஸ்டான்டு கிறிஸ்தவ சங்கத்தோர்களேனும் சாக்கைய பெளத்த சங்கத்தோர்களேனுங் காலிபூமிகளைக் கேட்பார்களாயின் அவர்கள் மூலமாகக் கொடுத்து ஆதரிப்பதோர் அறம்.

கிராமாந்தரங்களில் வாழும் ஏழைக்குடிகள் தங்களது கஷ்ட நஷ்டங்களை பிரிட்டிஷ் அதிகாரிகளுக்குத் தெரிவித்துக் கொள்ளுவார்களாயின் அவற்றை இருந்த இடத்திருந்து சாதித்தலைவர்களை வினவாது ஏழைக்குடிகள் வாசஞ்செய்யுமிடங்களுக்கே நேரிற்சென்று தேற விசாரித்து நீதியளிக்க வேண்டுமென்பது இரண்டாவது அறம். நகரவாசங்களில் பொதுவாயுள்ளக் கிணறுகளிலும், குளங்களிலும், சகலசாதியோருங் கலந்து சுத்தநீரை மொண்டு குடிப்பது போல கிராமங்களில் நீர் மொண்டு குடிக்கவேண்டியதென்னும் உத்திரவைப் பிறப்பிக்கவேண்டும் என்பது மூன்றாவது அறம். இவ்வாறு கோடி மக்களின் கஷ்ட நஷ்டங்களை இராஜாங்கத்தோருக்கு விளக்கி ஆதரிப்பதற்கு லெஜிஸ்லேட்டிவ் கவுன்சலில் இவர்களுக்கென்றோர் அங்கத்தை நியமிக்க வேண்டும் என்பது நான்காவது அறம். இத்தகைய அறங்களை சாதித்தலைவர்கள் தோன்றி ஏதேனுந் தடுப்பார்களாயின் அவர்கள் எவ்வகையால் உயர்ந்த சாதிகளானார்கள் என்றும், இந்த ஆறுசோடி மக்கள் எவ்வகையால் தாழ்ந்தசாதிகளானார்கள் என்றும் விசாரிணைக்கேனுங் கொண்டு வந்து ஆறுகோடி மக்களின் அல்லலையும், அவதியையும் போக்கி ஆதரிக்கவேண்டும் என்னும் ஏகவறம் ஒன்றே போதும்.

- 5:25; நவம்பர் 29, 1911 -