உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 397

வந்துவிடப்போகிறார் களென்னும் பொறாமெயினால் அது மேய்க்கால் பூமியென்றும் இதற்கு அண்டை பாத்தியம் வேறொருவன் இருக்கின்றானென்றுங்கெடுத்து ஏழைகள் விருத்திபெறவிடாமற் கெடுப்பதுடன் ஏழைகளுக்குத் தகுந்த கூலிகொடாமலும் வதைத்து வருகின்றபடியால் பலதேசங்களுக்குஞ்சென்று சீவிக்க ஆரம்பித்துக் கொண்டார்கள். அதனால் பூமிகளை நன்குப் பண்படுத்தக்கூடிய உழைப்பாளிகள் குறைந்து சோம்பேறிகள் அதிகரித்துவிட்டபடியால் நீர்வசதிகளும், பூமிவிருத்திகளுங் கெட்டு தானியங் குன்றி ஏழைக்குடிகள் பசி பட்டினியால் மடிவதுடன் பலவகை வியாதிகளுந்தோன்றி தேசத்தைப் பாழ்படுத்தி வருகின்றது. இவற்றை நோக்கும் சென்னை சட்டசபை மெம்பர்கள் முக்கியமாக பூமியின் விருத்திகளையும் அதற்கு கேடுபாடுகளையுமே ஆலோசித்து அதற்குத் தக்க சட்டங்களை ஏற்படுத்துவார்களென்று எதிர் பார்க்கின்றோம்.

- 5:38; பிப்ரவரி 28, 1912 -


246. இந்தியக் கூலியாட்களின் மீது இருவகையோருக்கும் இதக்கமில்லை போலும்

நமது கருணைதங்கிய பிரிட்டிஷ் ராஜாங்கத்தோர் தன்னவரன்னியர் என்னும் பட்சபாதமற்றவர்களாயினும் சாதிபேதமற்ற எழியக் குடிகளின்மீது இதக்கத்தைக் காணோம். மனுக்களை மனுக்களாகக் பாவிக்காத சாதித்தலைவர்களோ, பூர்வக்குடிகளைத் தாழ்ந்த சாதிகளெனக் கூறிப் பல வகையாலும் நசித்துப் பாழ்படுத்திவருவதும் போதாது அன்னிய தேசங்களுக்குச் சென்று சுகம்பெறுவதையுங் கெடுக்க ஆரம்பித்துக்கொண்டார்கள்.

அதாவது கிராமங்களில் வசிக்கும் சாதிபேதமற்ற ஏழைக்குடிகள் சாதிபேதமுள்ளவர்களது கொடூரச்செயல்களை சயிக்கமுடியாது அன்னிய தேசங்களில் ஒன்றாகும் நெட்டாலென்னும் சவுத்தாபிரிக்காவுக்குச் சென்று தகுந்த சம்பாத்தியத்துடனும் சுகச்சீருடனும் சென்னை வந்து சேர்ந்தவர்களைக் கண்டுள்ளோம். அவ்வகை சேர்ந்தவர்கள் பூமிகளை வாங்கிக் கொண்டும் தக்கவீடுகளைக் கட்டிக்கொண்டும் சுகமாகவே இருக்கின்றார்கள். அவர்களது சுகச்சீரைக்கண்டு சயிக்காத சாதித்தலைவர்கள், ஆ ஆ நம்மால் தாழ்த்தப்பட்ட சாதியோர்கள் அன்னியதேசங்களுக்குச் சென்று பணங்களை சம்பாதித்துக் கொண்டுவந்து நமக்கு சமமாக பூமிகளை வாங்கவும், வீடுகளைக் கட்டிக் கொண்டும் சுகிக்க ஆரம்பித்துவிடுகின்றபடியால் நமது பண்ணை பூமிகளை சொற்பக்கூலிகளைக் கொண்டு உழுது பாடுபடுவதற்கு ஏது இல்லாமற் போய்விடுகிறதென்றும் வஞ்சினத்தாலும், பொறாமெயினாலும் ஆடுகள் நனையுதெனக் புலிகள் குந்தியழுவது போல அன்னியதேசங்களுக்குப் போகும் கூலியாட்கள் யாவரும் மெத்தக் கஷ்டப்படுகின்றார்கள் இந்தியாவிலிருந்து அவர்களை அநுப்பப்படாதென்று பத்திரிகைகளின் வாயலாகவும், விண்ணப்பங்களின் மூலமாகவும் வீண் படாடம்பமடித்ததை நமது கருணைதங்கிய ராஜாங்கத்தார் விசாரிணைக்குக் கொண்டுவராமலும் அன்னியதேசஞ் சென்று வந்திருக்கும் எழியக்குடிகளெல்லவரையும் நேரில் தருவித்து சுகாசுகங்களை விசாரியாமலும் இத்தேசத்து சாதித்தலைவர்களிடம் பண்ணைவேலை செய்திருந்த காலத்தில் இவ்வேழைக் குடிகள் என்ன சீர்கேட்டை அடைந்திருந்தார்களென்பதையும் அன்னியதேசங்களுக்குச் சென்று இவ்விடம் வந்திருப்பவர்கள் என்ன சுகச்சீரிலிருக்கின்றார்களென்பதையும் கண்டறியாமல் பெரியசாதிகளென்போர் வார்த்தைகளையே பெரிதென்றேற்றுக் கொண்டு சாதிபேதமற்ற ஏழைக்குடிகள் அன்னியதேசங்களுக்குச் சென்று மெத்த நஷ்டப்படுகின்றார்கள் என்று எண்ணி நெட்டாலுக்குப் போகவிடாமல் தடுத்து விட்டார்கள். அவ்வகை, தடுக்கப்பட்டதினால் சாதிபேதமற்ற ஏழைக்குடிகள் சீர்கேடடையவும், சாதித்தலைவர்கள் சீர்பெறுவதுமேயாம். காரணமோவென்னில், சாதிபேதமற்ற ஏழைக்குடிகளுக்கு அம்மட்டர்களை சவரஞ்செய்யவிடாமலும்,