பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

முன்னுரை


இந்தியத் துணைக் கண்டத்தின் சமூக வரலாறு இன்னமும் முழுமையாக ஆராயப்படாத, எனவே முறையாக எழுதப்படாத ஒன்று. பொதுவாய வரலாற்று உணர்வின்மை, பன்மொழி மரபுகள், உதிரியான அகழ்வாராய்ச்சிகள் இந்நிலைக்கான சில காரணங்களாகக் காட்டப்படுகின்றன. எனினும் இது போன்ற ஏனைய சந்தர்ப்பங்களில் பூகோளம், மானிட இயல் முதலான சமூக அறிவியல்களின் யுக்திகளைப் பயன்படுத்திப் பண்டைக்கால வரலாறுகள் ஆய்வு செய்யப்படுகின்றன. ஆனால் இங்கோ, பெரும்பாலும் வடமொழி புராண இலக்கியங்களை ஓரியன்டலிஸ்டுகள் என்னும் மேனாட்டார் கணிப்பின்படி, முக்கிய ஆதாரங்களாகக் கொண்டு தொன்மை வரலாற்றுக் கண்ணோட்டம் அமைந்துள்ளது. இவ்வடிப்படையிலான ஆய்வுகள் ஒருதலைப்பட்சமாக வெளிவருவதுடன் அகில இந்திய அளவிலான ஆதிக்கக் குழுக்களின் மேலாண்மைக்கான கற்பனைகளையும் கனவுகளையுமே மிகுதியாகப் பிரதிபலிக்கின்றன.

பெரும்பாலும் வட இந்திய ஆற்றுப்படுகைகளின் வருண கலாச்சாரங்களைச் சார்ந்து எழுந்த பேரரசுகளின் தொடர்ச்சியே தேசிய வரலாறாகக் கொள்ளப்படுவதால் பல்வேறு மொழி - இனக் குழுக்களின் தோற்றம், வளர்ச்சி, சமய - சித்தாந்தங்களின் எழுச்சி வீழ்ச்சிகள் இவைகளுக்கிடையான முரண்பாடுகள் முதலியவை ஆதாரமின்மை என்ற காரணம் காட்டப்பட்டு பின்தள்ளப்படுகின்றன; அல்லது இவையெல்லாம் வட்டார, மாநில அளவிலானவை என்று ஒதுக்கப்படுகின்றன. இத்தகையப் பொதுநிலை பண்டை வரலாற்றியலுக்கு மட்டுமே பொருந்துமென்பதில்லை. ஆதாரங்கள், ஆவணங்கள் மிகுந்த நவீன காலத்திலும் தொன்மைப் பேரரசுகளின் நேரடி வாரிசாக ஆங்கிலேயப் பேரரசின் வரவும் வளர்ச்சியும், அதனையொட்டியும் அதற்கு இணையாகவுமே தோன்றிய இந்திய தேசிய இயக்கம் - அரசு இவற்றின் ஓர் முக வருணனையே தற்கால இந்திய வரலாறென்று ஏறக்குறைய எல்லாப் பகுப்புகளையும் சேர்ந்த வரலாற்றியலாளரும் ஏற்றுக்கொள்கின்றனர். ஏனையவை - சமஉரிமைப் போராட்டங்கள், சாதி ஒழிப்பு முயற்சிகள், கல்வி, வேலை, தொழில் முதலியவற்றைப் பெற்றுக்கொள்வதற்கான கூட்டு இயக்கங்கள், குழுக்கள் - குமுகங்களின் புதிய வெளித்தோன்றல்கள் யாவும் சமூக உள் சீர்திருத்தம் சம்பந்தப்பட்டவையென்று வரலாற்றியலாளரால் பின்தள்ளப்பட்டு, சமூக அறிவியலாளரால் சாதி இயக்கங்கள் என்றும் மேம்பாட்டு முயற்சிகள் என்றும் தனித்து ஆராயப்படுகின்றன.

ஆனால் அண்மையில் ஓர் புதிய வரலாற்றியல் - சமூக அறிவியல்களின் தாக்கம் துணைக்கண்டத்திலும் மாறுபாடுகளை தோற்றுவிக்கத் தொடங்கிவிட்டது. பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளில் வெளிப்பட்ட சமூக உள்சீர்திருத்தங்கள் என்று ஒதுக்கப்படுவனவையும் தேசிய - அரசியல் விழிப்புணர்ச்சி என்று தூக்கிக்கொள்ளப்படுவனவையும் ஒரே எண்ணச் சூழல்களின், மோதல்களின் மையத்திலிருந்தே எழுந்தவை; அவை முரண்பாட்டுடன் தோன்றி ஒன்றையொன்று முண்டியடித்துக்கொண்டே மேலாண்மையை நோக்கி வளர்ந்தன; அரசியல் இயக்கத்தின் சுய உருவத்தையும் சமூக சீர்திருத்தங்களின் கூட்டு மொத்த விளைவுகளையும் தனித்தனியே புரிந்துகொள்ள இயலாது, இரண்டையும் தொடர்புபடுத்தியே பார்க்க வேண்டும் என்ற உண்மைகள் ஆங்காங்கே சிற்சில ஆய்வுகளில் வெளிப்படத் தொடங்கியுள்ளன.